உள்ளூர் செய்திகள்

திண்ணை!

காஞ்சி பரமாச்சாரியார், 1935ல், காசி இந்து பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்தார்.பண்டித மதன் மோகன் மாளவியா, அப்போது பல்கலைக்கழகத் தலைவராக இருந்தார். ஸ்வாமிகள் விஜயம் செய்யும் ஊர்களுக்கெல்லாம், கால்நடையாகச் செல்வது வழக்கம். அவர் பெரிய மடாதிபதி என்றாலும், யாத்திரை என்றால் நடைதான்.இப்படி, அவர் காசி வரைக்கும் நடந்தே செல்வதற்கு முன்னேற்பாடாக, இந்தப் பயணத்திற்கு பத்து ஆண்டிற்கு முன், அனந்த கிருஷ்ண சர்மா என்னும், 20 வயதுள்ள இளைஞரை (தென்காசியைச் சேர்ந்தவர்) காசிக்கு அனுப்பி வைத்தார். அந்த இளைஞருக்கு, பத்து நிபந்தனைகளையும் விதித்தார்:*அவர் காசியை அடையும் வரை, முழுவதும் நடந்தே செல்ல வேண்டும்.* அவருக்குத் தேவையான உணவை, அவரே தயாரித்துக் கொள்ள வேண்டும்.* காபி, டீ முதலிய பானங்களை, அருந்தக் கூடாது.* உணவு தயாரித்துக் கொள்ள சிற்சில பாத்திரங்களையும், மிகத் தேவையான உடைகளையுமே, அவர் எடுத்துச் செல்ல வேண்டும்.* அன்றாடம் உணவு தயாரித்துக் கொள்ளத் தேவையான அரிசியையோ, கோதுமை மாவையோ, அவர் போகுமிடங்களில் அன்பர்களிடம் யாசித்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.* எவரிடமும் பணம் வெகுமதியாகப் பெற்றுக் கொள்ளக் கூடாது.* உடல் நிலை காரணம் அல்லாது, ஓர் ஊரில் ஒரு நாளைக்கு மேல் தங்கக் கூடாது.* சுவாமிகளின் உத்தரவின் படி நடந்து, காசி யாத்திரை செல்வதாக, அவர் ஆங்காங்கே மக்களிடம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அவருக்கு அடையாளச் சீட்டு எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.* அவரிடம் கொடுக்கப்பட்ட அஞ்சலட்டைகளில் அன்றாடம், அவர் சென்ற ஊர்களைப் பற்றியும், பாதையின் தன்மைகளைப் பற்றியும், பென்சிலால் சுருக்கமாக எழுதி, மடத்திற்கு அனுப்ப வேண்டும். அவரிடம் கொடுத்திருந்த அஞ்Œல் அட்டைகள் குறைந்தவுடன் அவ்வப்போது அவருக்கு கார்டுகள் அனுப்பப்படும்.* காசியிலிருந்து திரும்பி வரும்போது, அவர் இந்தி பேச கற்றுக் கொண்டு வர வேண்டும். அவர் திரும்பி வரும் போது, ரயில் மார்க்கமாக வருவதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்படும்.”வாமிகளின் நிபந்தனைகளை, சிறிதும் பிசகாமல் கடைப்பிடித்து, ஆறு மாதங்கள் நடந்து காசியை அடைந்து, ரயில் மார்க்கமாகத் திரும்பிவந்த அந்த அனந்த கிருஷ்ண சர்மா, பிறகு திருமணம் செய்து, மக்களைப் பெற்று, மடத்திலேயே பணிபுரியும் வாய்ப்பையும் பெற்றார்.***ஒருவன், தள்ளுவண்டியில் கொய்யாப் பழங்களை வைத்து, விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் பேரம் பேசி, ஒரு பழம் ஐந்து ரூபாய் வீதம், நான்கு பழம் வாங்கினேன். பர்சை திறந்து பார்த்தால், சில்லரை இல்லை. நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து, பழக்காரனிடம் கொடுத்தேன்.அவன், 'என்னிடமும் சில்லரை இல்லை; இதோ போய் மாற்றி வருகிறேன்...' என்று சொல்லிவிட்டு போனான்.'வண்டி நிறைய பழங்கள் இருக்கும் போது, எங்கே போய் விடப் போகிறான்...' என்று, நான் அவனுடைய வண்டிக்கு பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தேன்.அரை மணி நேரம் ஆகியும், போன ஆள் திரும்பவில்லை. அவனுக்கு பதிலாக வேறொரு ஆள் வந்து, வண்டியிலிருந்த கொய்யாப் பழங்களை கூவி விற்கத் துவங்கினான்.'ஏனப்பா... சற்று முன், வேறொரு ஆள் விற்றுக் கொண்டிருந்தான். இப்போது நீ வந்து விற்கிறாயே... அவனிடம், நான் நான்கு பழங்கள் வாங்கி, நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். சில்லரை மாற்றுவதற்காக போனானே, அவன் என்ன ஆனான்?' என்றேன்.'அவனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது... இது என் வண்டி; டீ குடிப்பதற்காக நான் போயிருந்தேன்...' என்றான் அவன்.***- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !