திண்ணை!
இன்று, உலகிலேயே மிக அதிக மொழிகளில் வெளியாகி, எல்லா நாட்டு மக்களையும் கவர்ந்துள்ள, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிகையை, இந்த விதத்தில் ஆரம்பிக்க வேண்டுமென்று, டேவிட் வேலஸ் என்பவருக்கு, முதன் முதலில் தோன்றியது 1922ல். எப்படிப்பட்ட விஷயங்களைக் கொடுத்தால், வாசகர்கள் ஆவலோடு படிப்பர் என்பது, அவருக்குத் தெரிந்திருந்தது.இந்த பத்திரிகை துவங்கியதிலிருந்து, 35 ஆண்டுகள் வரைக்கும், விலையில் கூட மாறுதல் செய்யவில்லை. இதனால், வாசகர்களிடம் நன்மதிப்பையும், அபிமானத்தையும் பெற முடிந்தது. அவரவர்க்கு விருப்பமான பகுதி, இன்ன இன்ன பக்கத்தில் இருக்கும் என்ற நிச்சயமும், வாசகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் வாசகர்களிடம் இந்தப் பழக்கம், இன்னமும் மாறவில்லை.இந்த நவீன அவசர உலகில், எதையும் சாவகாசமாக, விரிவாகப் படித்துக் கொண்டிருக்க, பெரும்பாலான வாசகர்களுக்கு, நேரம் கிடைக்காது என்பதை உணர்ந்த டேவிட் வேலசின் வெற்றிக்கு வித்து, எவ்வளவு விரிவான கட்டுரையையும், சுருக்கி, சுவை குன்றாது, காரம் குறையாது கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியது. அதே கலைத்திறன் தான் இன்றும், 'டைஜஸ்ட்'க்கு உறுதுணை.இந்த கலையில், தம் உதவியாளர்கள் நன்றாகத் தேர்ச்சி பெறும் வரைக்கும், டேவிட் வேலஸ், தாமும் உடனிருந்து, சுருக்கி, செப்பம் செய்யும் கடினமானப் பணியைச் செய்து வந்தார். பல அரிய கட்டுரைகளை செப்பம் செய்வதால், முழு அளவை விட, அதிக சுவாரஸ்யமாகவே அமைந்திருக்கின்றன.கடந்த 1934 முதல், ஒவ்வொரு இதழிலும், புத்தகச் சுருக்கப் பகுதியை வெளியிடத் துவங்கினார் டேவிட் வேலஸ். இது, வாசகர்களுக்கு மிகவும் பிடித்த பகுதியானது. இந்த பகுதியில், உலகப் புகழ் பெற்ற நூல்களெல்லாம் சுருக்கமாக வெளிவரலாயின.வேறொரு புதிய யோசனையும், வேலசுக்குத் தோன்றியது. சிறந்த கட்டுரைகளை நேரடியாக, தாமே முதலில் வெளியிடாமல், 'டைஜஸ்ட்' சார்பில் பிற பத்திரிகைகளுக்கு அனுப்பி, வெளியிட வைத்தார். பின், அவற்றை தமக்கே உரிய திறத்தில், சுருக்கிச் செப்பனிட்டு, 'டைஜஸ்ட்'டில் வெளியிடலானார். இன்று, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்'டில் வெளியாகும் கட்டுரைகளில் பெரும்பகுதி, இப்படித்தான் பிரசுரமாகின்றன.50 ஆண்டுகளுக்கு முன்பே, 'டைஜஸ்ட்'டில் வெளிவரும் ஒரு துணுக்கிற்கு, நூறு டாலர் சன்மானம் அளித்தனர். பெரிய கட்டுரைகளுக்கு, 7,500 டாலர் வரைக்கும் சன்மானம் கொடுத்தனர்.வாசகர்களுக்கு, வாழ்க்கையில் பிடிமானமும், நம்பிக்கையும், துணிவும் முன்னேறத் துடிப்பும் ஏற்படத் தூண்டுகிற கட்டுரைகளை தான், 'டைஜஸ்ட்'டில் வெளியிடுவது என்று, உறுதி கொண்டிருக்கின்றனர். இதுவே, இதன் வெற்றிக்கு காரணம்.***ஈ.வெ.ரா., 25 ஆயிரம் ரூபாயை மடியில் கட்டிக்கொண்டு, கோர்ட்டுக்குப் போய், 'இதோ பணம் இருக்கிறது...' என்று சொன்ன சம்பவம் ஒன்று நடந்தது. என்.எஸ். கிருஷ்ணனுக்கு, ஒரு வழக்கில் தண்டனை கொடுத்து விட்டனர் (1945). அன்று தீர்ப்பு சொன்னபோது, ஐகோர்ட்டில் பெரும் கூட்டம். ஜாமினில் எடுப்பதானால், பணம் வேண்டிஇருக்கும் என்று யாரோ கூறினர். அதைக் கேள்விப்பட்ட ஈ.வெ.ரா., 25 ஆயிரம் ரூபாயை மடியில் கட்டிக்கொண்டு, கோர்ட்டுக்கு வந்தார். 'இதோ பணம், 25 ஆயிரம் நான் தருகிறேன். ஜாமினில் எடுங்கள்...' என்றார். ஆனால், ஜாமினில் எடுக்க முடியவில்லை. தவித்துப் போனார், ஈ.வெ.ரா.,அண்ணாதுரை முதல்வரான பின், அவருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்கா செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பெரும் அளவில் பணம் செலவாகும் என்று பேச்சு எழுந்தது. அதெல்லாம் அரசு செலவுதான். ஆனாலும், ஈ.வெ.ரா., பெருந்தொகையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து, அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் தனித்தனியாக, 'எவ்வளவு செலவானாலும், நான் தருகிறேன்...' என்று மன்றாடிய போது, கலங்காத கண்களும் கலங்கின.ஒரு புறம் பொதுப்பணத்தில் ஒரு காசு கூட தொடாத சிக்கனசிகாமணி. மறுபுறம், உற்றவருக்கு ஓடிவந்து உதவும் மனிதாபிமானம். இவை, ஈ.வெ.ரா., எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ***நடுத்தெரு நாராயணன்