திண்ணை
'ஹாலிவுட் ஸ்டார்ஸ்' என்ற ஆங்கில நுாலிலிருந்து: அக்காலத்தில், உலகப் புகழ்பெற்ற கனவுக் கன்னியாக திகழ்ந்தவர், நடிகை, சோபியா லாரன்ஸ். இவருடன், ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார், கிளார்க் கேபிள் என்ற நடிகர்.ஒரு நாள் படப்பிடிப்பில், இயக்குனர், 'ஸ்டார்ட்' என்று சொன்னதும், சோபியாவை முத்தமிடத் துவங்கினார், கிளார்க். ஐந்து வினாடிகளுக்கு பின், அவரது கைக் கடிகாரத்தில் அலாரம் அடித்தது. அவ்வளவு தான்... சோபியாவின் கரங்களை விலக்கியவர், 'ஓ... மணி ஐந்து ஆகிவிட்டது...' என்று கூறியபடியே வேகமாக புறப்பட்டு விட்டார்.சோபியா லாரன்சை முத்தமிடும் காட்சிகளில், டைரக்டர், 'கட்' சொன்ன பின்பும், அவரை விட்டு விலக மாட்டார்கள், சில நடிகர்கள். சோபியா லாரன்ஸ் சும்மா சும்மா கிடைப்பாரா என்ன!ஆனால், இவரோ, பாதியில் ஓடி விட்டார்.அவரை பற்றி எல்லாருக்கும் தெரியும்; காலை, 8:00 மணிக்கு, 'மேக் - அப்' அறைக்குள் வருவார்; 9:00 மணிக்கு செட்டில் தயாராக இருப்பார். மாலை, 5:00 மணிக்கு வீட்டிற்கு போய் விடுவார்.'என்னை முத்தமிடும் போது கூடவா பாதியில் போக வேண்டும்...'என நினைத்த சோபியா, இதை, தன் பெண்மைக்கு ஏற்பட்ட இழுக்காக எண்ணி, குமுறியவர், கோபமாக சென்று விட்டார். இரவு முழுதும் இதுபற்றி யோசித்தவர், 'கிளார்க் கேபிள் செய்தது தான் சரி...' என்பது புரிய, காலையில், அவரது, 'டைம் சென்ஸ்' குறித்து பாராட்டினார். இதுபற்றி, தன் வாழ்க்கை வரலாற்றில், 'கிளார்க் கேபிளுக்கு அன்று முக்கியமான புரோகிராம்; மணி, 5:30க்கு அமெரிக்காவில் இருக்கும் மனைவியிடமிருந்து டிரங்கால் வரும்; அதை தவிர்க்க முடியுமா என்ன!'கிளார்க் திட்டமிட்ட வாழ்க்கை நடத்துபவர்; படப்பிடிப்புக்கு ஒருநாள் கூட தாமதமாக வந்ததில்லை. தாமதமாகும் என்று முன்கூட்டியே தயாரிப்பாளர் சொல்லி விட்டால், அன்று, வேறு நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ள மாட்டார். 'ஒரு தடவை கூட வசனத்தை மறக்காத நடிகர்; மறுநாள் பேச வேண்டிய வசனத்தை, முதல் நாள் இரவு, 8:00 மணிக்கே பாடம் செய்யத் துவங்கி விடுவார். பலவிதமாக பேசி நடித்து பார்த்துக் கொள்வார். ஒரு வசனத்தை இரண்டு விதமாக பேசலாம் என்று தோன்றினால், அவற்றை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து, மறுநாள் காலை, இயக்குனரிடம் போட்டுக் காட்டுவார்; டைரக்டர் தேர்ந்தெடுப்பதை பேசுவார்...' என்று கூறியுள்ளார், சோபியா லாரன்ஸ்.சமூக இணைய தளத்திலிருந்து தொகுக்கப்பட்டது: தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகளே இல்லாத நாடு, கியூபா. இந்நாட்டில், ஆறு முதல், 15 வயது வரை, கட்டாய இலவச கல்வி வழங்கப்படுகிறது. நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை. 12 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் உள்ளார். இது, வல்லரசு நாடுகளில் கூட பார்க்க முடியாதது.கடந்த, 2010ல் யுனெஸ்கோ ஆய்வின்படி, கியூபாவில் படிப்பறிவு, 99.8 சதவீதம். தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரில், 70 சதவீதம் பேர் பெண்கள். இவர்களுக்கு, ஆண்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது.கடந்த, 2006ல், உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடாக, கியூபாவை அறிவித்தது, பி.பி.சி., பிரசவத்தின் போது, தாய்மார்களின் இறப்பு விகிதம் மற்றும் எச்.ஐ.வி., பாதித்த நோயாளிகள் உலகிலே மிகக் குறைவாக இருப்பதும் இங்கு தான். 2015ல், 95 சதவீத கியூபா மக்களுக்கு, சொந்த வீடுகள் இருந்தன. இன்று, சொந்த வீட்டில்லாதவர்கள் யாருமே இல்லை.யாருக்கும் சொத்து வரி கிடையாது; வீட்டுக் கடனுக்கு வட்டியும் கிடையாது.இவ்வளவு சாதனைகளுக்கும் காரணம், கியூபாவின் அதிபராக இருந்த, மறைந்த பிடல் காஸ்ட்ரோ தான்.ஒரே ஒரு நல்லவன் தலைவனானால், சாதனைகள் நிறைய இருக்கும் என்பதை நிரூபித்துள்ளது,கியூபா.நடுத்தெரு நாராயணன்