திண்ணை
'குண்டூசி' சினிமா இதழ் (1951) கட்டுரையில், மு.கருணாநிதி:'திரையுலகில் மறுமலர்ச்சி தந்துள்ள மாறுதல்கள் ஏராளம். தமிழ்நாட்டைத் தான் குறிப்பிடுகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பார்த்தேன். ஒரு நடிகை, பூரிப்பு மிகுதியால், சந்தோஷம் என்று கூறியது, யாரோ ஒரு வேலைக்காரனைக் கூப்பிடுவது போலிருந்தது.இன்று, நடிப்பில் மட்டுமல்ல, காட்சியமைப்பு, படப்பிடிப்பு, கதை, வசனம், பாட்டு அனைத்திலும் புதுமைப் பூத்து விட்டது. மாறுதல்களைத் தந்த மறுமலர்ச்சி, அடுக்கு மொழிகளையும் கூடவே அழைத்து வந்தது. காவியத்தில் மட்டுமே காட்சி தந்த, எதுகை மோனை, நாடகத்திலும் புகுந்தன.சாதாரணமாக நாம் தினந்தோறும் தெருவில் பார்க்கும் மனிதர்கள், அடுக்கு மொழியிலா பேசுகின்றனர்... அப்படியிருக்க, திரையில் வருபவர் மட்டும் ஏன் அடுக்கு மொழி பேச வேண்டும்... இப்படிப்பட்ட கேள்விகள் இன்று உரத்த குரலில் கேட்கப்படுகின்றன. நாம் தெருவில் சந்திக்கும் மனிதர்களில் பெரும்பாலானோர் அதிக அழகாக இருப்பதில்லை. ஆனால், அவலட்சணங்களை கதாநாயகன், கதாநாயகியராகப் போட்டால் எல்லாரும், 'கிரிட்டிக்'குகளாக மாறி விடுகிறோம்.திரையிலே அழகானவர்களைப் பார்க்க விரும்பும் நாம், உலகத்தில் சாதாரணமாக இன்சூரன்ஸ் ஏஜன்டுகளிடமும், தரகு வியாபாரிகளிடமும் காண முடியாத நடிப்பை, திரையில் காண வேண்டுமென்று விரும்புகிறோம். 'படிக்காத மேதை காமராஜர்' நுாலிலிருந்து: காமராஜர் முதல்வரான பின், ஒரு முறை கும்பகோணத்துக்கு வந்திருந்தார். காரிலிருந்து காமராஜர் இறங்கும் நேரத்தில், ஒரு மூதாட்டி, அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி, போலீஸ்காரரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.இந்த சண்டையைப் பார்த்த காமராஜர், அவரை அனுமதிக்கும்படி போலீசாரிடம் சொல்ல, அந்த மூதாட்டி, காமராஜரை அணுகி, 'ஐயா... என்னைப் போல வயசானவங்க, தள்ளாத காலத்திலும், கூடைத் துாக்கிப் பிழைக்க வேண்டியிருக்கு, எங்களுக்கு ஏதாவது செய்யணும்...' என்றார்.'ஆகட்டும் பார்க்கலாம்...' என்று சொல்லி, கிளம்பி விட்டார் காமராஜர். கார் புறப்பட்டதும், அந்த மூதாட்டி சொன்ன வார்த்தைகள் அவர் மனதிற்குள் வந்து மோதின. காரில் இருந்த அதிகாரிகளிடம், 'இந்த ஏழை மூதாட்டிக்கு மாதம் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?' என, கேட்டார். யோசித்த அதிகாரிகள், 'இருபது ரூபாய் ஆகும்...' என்றனர்.சென்னை வந்து சேர்ந்ததும், மாநிலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் எத்தனை பேர் என கணக்கு எடுக்க உத்தரவிட்டார். உடனடியாக, 'முதியோர் பென்ஷன்' திட்டம் அமல்படுத்தப்பட்டது.'உலக அழகி போட்டிகள்' நுாலிலிருந்து: அழகி போட்டியில், பெண்களை நீச்சல் உடையில் பார்த்து தேர்ந்தெடுப்பது, 1921ல் அட்லாண்டிக் நகரில் நடந்த, 'மிஸ் அமெரிக்கா' போட்டியிலிருந்து தான் துவங்கியது. அழகிகளை, அவரவர் நாட்டின் பெயருடன் சேர்த்து, 'மிஸ் அமெரிக்கா, மிஸ் ஜெர்மனி' என்று அழைக்கும் பழக்கமும் அந்த ஆண்டில் தான் துவங்கியது.முதன் முதலில் மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கப் பட்ட மார்க்கரெட் கார்மன் என்ற, 15 வயது பெண், அப்போது, உயர்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். நீல நிற விழிகளோடு, ஒடிசலான, கவர்ச்சியான தோற்றத்துடன் (30 - 25 - 32) இருந்த மார்க்கரெட் தான் இன்று வரை அழகி போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களிலேயே குறைந்த வயதுடையவரும், மிக ஒல்லியானவரும், குள்ளமானவரும் - 5 அடி 1 அங்குலம் ஆவார். நடுத்தெரு நாராயணன்