உள்ளூர் செய்திகள்

திண்ணை!

'வள்ளலாரும், அருட்பாவும்' எனும் நுாலிலிருந்து: பள்ளியில், வள்ளலார் பயின்ற காலம். அப்போது, 'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்... ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்' என்ற உலக நீதியை, ஆசிரியர் சொல்லும்படி கூறியும், சொல்லாமல் இருந்தார், வள்ளலார்.'நீ ஏன் சொல்லாமல் இருக்கிறாய்...' என, கேட்டதற்கு, 'இறைவனிடத்தில், வேண்டாம்... வேண்டாம்... என்று சொல்லிக் கொண்டிருப்பானேன்... ஏதாவது, வேண்டும், வேண்டுமென எண்ணிக் கொண்டிருந்தேன்...' என்றார்.'நீ வேண்டுமானால், வேண்டுமென பாடு பார்ப்போம்...' என்றார், ஆசிரியர்.உடனே, 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்...' என்ற பாடலை பாடினார், வள்ளலார்.வியந்து, பாராட்டினார், ஆசிரியர்.நாடகம் மற்றும் திரைப்பட நடிகர், எம்.ஆர்.ராதா எழுதிய, 'சரித்திரம் திரும்பி விட்டது!' நுாலிலிருந்து: என் நாடகங்களுக்கு, பலத்த எதிர்ப்பு இருந்த காலம். எங்கு சென்றாலும், கடைசி நிமிடத்தில் தடை போட்டு, நாடகத்தை நடத்த விட மாட்டார்கள். ஒருமுறை, தஞ்சாவூர் சென்றேன். அங்கு, எவரும், எனக்கு நாடக அரங்கு தர மறுத்து விட்டனர்.தஞ்சை கொடி மரத்து மூலையில், ஒரு கொட்டகை, பழைய மீனாட்சி தியேட்டர், பாழடைந்த நிலையில் இருந்தது. புதர்களை வெட்டி, பாம்புகளை அடித்து, நாடக கொட்டகையாக மாற்றி, தோழர், மு.கருணாநிதியை வைத்து, துாக்கு மேடை நாடகத்தை எழுதி, தயாரித்து நாடகமாக்கினேன். அப்போது, கருணாநிதி என்னுடன் பணிபுரிந்ததுடன், நாடகத்திலும் நடித்து வந்தார்.ஒரு தடவை, ஈ.வெ.ரா., தலைமை தாங்க, மீண்டும், தடை பயம் தொற்றியது. ஆனால், நாடகத்தில், அங்கும் இங்குமாய் சில காட்சிகளை முன்னுக்கு பின்னாக, பெயரை மாற்றி வைத்து, துாக்கு மேடை மற்றும் போர்வாள் நாடகத்தையும் தொடர்ந்து நடத்தி வந்தேன்.பத்திரிகையாளர், ராணி மைந்தன் எழுதிய, 'ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்' நுாலிலிருந்து: ஆர்.எம்.வீரப்பன், அமைச்சராக இருந்த காலம். இலக்கிய ஆர்வம் காரணமாக, ஆன்மிகம், பொது கட்டுரைகள் என, பலவற்றை படித்து, ஆன்மிக, இலக்கிய கூட்டங்களில் பங்கேற்று வந்தார்.மேம்போக்காக, மூன்று, நான்கு நிமிடம் பேசி, சென்று விட மாட்டார்; நன்றாக பேசுவார். அத்துடன், தன் கருத்துக்களை தெளிவாக பதிவு செய்வதிலும், குறியாக இருப்பார்.ஒருமுறை, தஞ்சை கோவில் மேம்பாட்டு செயல்முறை துவக்க விழாவில், 'இந்த நாட்டிலே, நாத்திகர்கள் விரல் விட்டு எண்ணிவிட கூடிய அளவில் தான் இருக்கின்றனர். நாத்திகம் என்பது, ஒரு தனி மனிதனின் கொள்கையாக இருக்க முடியுமே தவிர, ஒரு சமுதாயத்தின் தத்துவமாக இருக்க முடியாது. 'ஒரு தனி மனிதனின் உணர்வாக இருக்க முடியுமே தவிர, ஒரு சமுதாயத்துக்கு, வழி காட்டுகிற தத்துவமாக மாற முடியாது. ஆனால், நாத்திகம் என்றென்றும் இருந்துகொண்டே தான் இருக்கும். எனவே, நாத்திகர்களால், இந்த நாடே கெட்டு விட்டது என்று, யாரும் எண்ணிக் கொண்டிருக்க தேவையில்லை...' என்று பேசினார். அறந்தை நாராயணன் எழுதிய, 'தமிழ் சினிமாவின் கதை' நுாலிலிருந்து: 'சினிமாவில், வில்லனாக நடிப்பவர்கள் எல்லாம், வாழ்க்கையிலும் வில்லனாக தான் இருப்பர் என்று, மக்கள் நினைக்கின்றனர். அதை நினைத்து தான், வருத்தமாக இருக்கிறது...' என்று கூறிய, ஆர்.எஸ்.மனோகர், அதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக கூறினார். அது:ஊட்டியில் படப்பிடிப்பு. எனக்கும், நடிகர் முத்துராமனுக்கும் தனித்தனியே சிறு, 'காட்டேஜ்' ஒதுக்கியிருந்தனர். ஊட்டியை சுற்றிப் பார்க்க வந்த, ஐந்தாறு பெண்கள், எங்களை பார்க்கவும் வந்தனர். என்னுடன் இருந்த நண்பரிடம், 'முதலில், அந்த பெண்கள், முத்துராமனை பார்க்க தான் செல்வர்...' என்றேன்.அதேபோல, முத்துராமனிடம் கையெழுத்து வாங்கிய பின், என்னிடம் வந்தனர். அப்போது, நெருங்க பயந்து, துாரத்திலேயே நின்று விட்டனர். ஒரே ஒரு பெண் மட்டும் தயங்கி தயங்கி, என்னிடம், 'கையெழுத்து சார்...' என்றாள்.'ஏம்மா நடுங்குகிறீர்கள்...' என்றேன்.'நீங்கள் வில்லனாச்சே சார்...' என்றாள்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !