திண்ணை!
டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து: தேசிய ஒருமைப்பாட்டை பற்றி ஒரு கவியரங்கம். அதில், ஒரு கவிதை பாட ஆரம்பித்தார், கவிஞர் வாலி. அவர், படிக்க வந்ததும், கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.'மொத்தம், 80 கோடி கைகள் எடுத்து உண்பது என்ன, ஒரு வாய் உணவு... 80 கோடி கால்கள் நடந்து செல்வது எங்கே...' என்று ஆரம்பித்ததும், 'யோவ், நிறுத்துய்யா...' என்று எழுந்தார், ஒருவர். 'மொத்தம், 80 கோடி கைகள், 80 கோடி கால்கள்ன்னு பாடறியே... அப்ப, இந்தியாவோட ஜனத்தொகை, 40 கோடின்னு தானே அர்த்தம்... அது, 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை. இப்போது அது, 50 கோடியாயிருச்சு... இது கூட தெரியாமல் பாட்டெழுத வந்துட்டியா...' என, சத்தமாக கத்தினார்.உடனே, 'இந்திய ஜனத் தொகை, 50 கோடிங்கறது எனக்கு தெரியும். ஆனா, எல்லாருக்குமா கை - கால் இருக்கு... கை - கால் இல்லாத, ஊனமுற்றோருக்காக, 10 கோடியை குறைச்சுட்டேன்... அது புரியாம பேசறியே... வாயை மூடிட்டு உட்காரு...' என, ஒரு போடு போட்டார், வாலி.ஆவேசப்பட்ட நபர், அமைதியாக உட்கார்ந்தார். அரங்கமே கை தட்டலில் அதிர்ந்து, ஆர்ப்பரித்தது.திரைப்பட வசனகர்த்தா, ஆரூர்தாஸ் எழுதிய,'கோட்டையும், கோடம்பாக்கமும்' நுாலிலிருந்து: இந்திய சுதந்திர தினத்துக்கு முன், 1939ல், சென்னை, கெயிட்டி தியேட்டரில், தியாக பூமி படம் வெளியானது. சுதந்திர வேட்கையை துாண்டும் வகையில் அப்படம் இருந்ததால், பிரிட்டீஷ் அரசால் தடை விதிக்கப்பட்டு, திரையிடுவது நிறுத்தப்படும் என, வதந்தி பரவியது.இதனால், அப்படத்தை பொதுமக்களை பார்க்க வைக்க, படத்தின் இயக்குனர், கே.சுப்ரமணியம் புதிய யுக்தியை கையாண்டார்.'காலையில் துவங்கி, இரவு வரையில், தியாக பூமி படம், தொடர் காட்சிகளாக நடைபெறும். அனைவரும் டிக்கெட் வாங்காமலே, இலவசமாக படத்தை கண்டுகளிக்கலாம்...' என்று விளம்பரப்படுத்தினார்.உடனே பெரும் கூட்டம் கூடியது. தொடர் காட்சியாக ஓடிய முதல் படம், தியாக பூமிதான்.அன்பினி பதிப்பக வெளியீடு, முல்லை பி.எல்.முத்தையா எழுதிய, 'சான்றோர் உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து: ஈ.வெ.ரா.,வின் தந்தை, ஈரோட்டில் கோவில் கட்டி, அன்ன சத்திரமும் நிறுவி, தினமும் ஏழைகளுக்கு உணவு அளித்து வந்தார். தன், 25வது வயதில், தந்தையின் கோபத்துக்கு ஆளாகி, வீட்டை விட்டு வெளியேறினார், ஈ.வெ.ரா.,முதலில் விஜயவாடா, பின், காசி சென்று, கடைசியாக, எல்லுார் வந்து தங்கினார். எல்லுாரில் ஒருவர் அடையாளம் கண்டு, ஈ.வெ.ரா.,வின் தந்தையிடம் கூற, அங்கு சென்று, மகனை அழைத்து வந்தார்.ஈ.வெ.ரா.,வுக்கு சிறிய வயதில் போடப்பட்ட, காது கடுக்கன், மோதிரம் அப்படியே இருந்ததை கண்டு அதிர்ந்து, 'இவ்வளவு நாள் சாப்பாட்டுக்கு என்ன செய்தாய்...' என கேட்டார்.'பிச்சையெடுத்து சாப்பிட்டேன்...' என கூறினார், ஈ.வெ.ரா., மனம் வருந்தினார், தந்தை.'சோம்பேறிகளுக்கு சோறு போடக் கூடாது...' என்று கூறி, அதுநாள் வரை இயங்கி வந்த, அன்ன சத்திரத்தை மூடி விட்டார், ஈ.வெ.ரா.,நடுத்தெரு நாராயணன்