திண்ணை!
விஜயா பதிப்பகம், ச.தனம் எழுதிய, 'இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்' நுாலிலிருந்து: வியாபாரத்திற்காக, கிழக்கிந்திய கம்பெனி, டிசம்பர் 31, 1600ல், இந்தியாவிற்குள் நுழைந்தது* ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக தோன்றிய மாபெரும் எதிர்ப்பான, தென்னிந்திய புரட்சி, 1800ல் ஏற்பட்டது* முதன் முதலில், கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய பாளையக்காரர், புலித்தேவன்* புலித்தேவன் போராட்டத்தை தொடர்ந்து, கிளர்ச்சியில் ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர், வீரபாண்டிய கட்டபொம்மன்* அடுத்து, ஆங்கிலேயரை தீரத்துடன் எதிர்த்த, மருது சகோதரர்கள், விடுதலை வேட்கையை, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் பரவச் செய்தனர். மக்களின் கவனத்தை புரட்சியின் மீது திருப்ப, ஒரு அறிக்கை தயாரித்தனர். அதற்கு பெயர், 'திருச்சிராப்பள்ளி அறிக்கை அல்லது திருச்சிராப்பள்ளி பிரகடனம்!'* மைசூர் மன்னர்களான ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றோர், ஆங்கிலேயரை தீரத்துடன் எதிர்த்து, தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர்* வெற்றிலைகுண்டு எனப்படும், வத்தலக்குண்டில், ஊமைத்துரையின் தலைமையில் ஆங்கிலேயருடன் போரிட்ட, 65 கிளர்ச்சியாளர்களும், வீரமரணம் அடைந்தனர்* ராணி வேலு நாச்சியார், வீரத்தின் விளை நிலம். இவர், தமிழகத்தின் ஜான்சி ராணி என போற்றப்படுகிறார்* வேலுார் கிளர்ச்சி, 1806, ஜூலை 13ல் துவங்கப்பட வேண்டும் என, திட்டமிடப்பட்டது. ஆனால், ஜூலை 9ம் தேதியே துவங்கப்பட்டது.* ஜான்சி ராணி லட்சுமி பாயின் வீர தீர செயல்கள், வரலாற்றில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. ஆங்கிலேயரை எதிர்த்து, குவாலியரில், ஆண் உடை அணிந்து, தீரத்துடன் போரிட்டார். அவரது குதிரை, கால் இடறியதால் கீழே விழுந்தவர், மீண்டும் எழவே இல்லை* கல்கத்தாவில் (இன்றைய கோல்கட்டா) 1896ல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில், 'வந்தே மாதரம்' பாடல், முதன் முதலாக பாடப்பட்டது* 'நாங்கள் பிச்சைக்காரர்களல்ல; எங்கள் கட்சி இரந்து உயிர் வாழும் கட்சியன்று; நாங்கள், மக்களின் துாதுவர்கள்...' என கூறியவர், மிதவாதிகளின் தலைவர், கோபாலகிருஷ்ண கோகலே. இந்திய இளைஞர்களை, தேச சேவையில் ஈடுபட செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் அதற்காக, 'இந்திய ஊழியர்கள் சங்கம்' என்ற அமைப்பை, 1905ல் ஆரம்பித்தார். 'சுயராஜ்யம் நமது பிறப்புரிமை. அதை நாம் அடைந்தே தீருவோம்' என, முழக்கமிட்டவர், திலகர்* அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம் ஆகியவற்றின் மூலம், இந்திய மக்களின் மனதை வென்றார், காந்திஜி* இந்தியர்களுக்கு எதிராக, 1919ல் கொண்டு வரப்பட்டது, ரவுலட் சட்டம். இதை, 'கருப்பு சட்டம்' என, அழைத்தனர், இந்தியர்கள்* ரவுலட் சட்டத்தை அரசு விலக்கிக் கொள்ளாவிட்டால், சத்தியாகிரகத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார், காந்திஜி* ஜாலியன் வாலாபாக் படுகொலை, பஞ்சாப் படுகொலை என்றும், அமிர்தசரஸ் படுகொலை என்றும் அழைக்கப்படுகிறது* இந்திய அரசு செயலராக இருந்த, பிர் கன்ஹெட், 1925ல், இந்தியாவிற்கு, டொமினியன் அந்தஸ்து வழங்குவதை ஆதரித்தார்* 'இந்திய பிரச்னைகள் பற்றி ஆராய, 1927, நவ., 8ல், குழு ஒன்று அமைக்கப்படும்...' என அறிவித்தார், பிரிட்டிஷ் பிரதமர், பால்குவின்* காங்கிரஸ் செயற்குழு, 1930, பிப்., 14ல், சபர்மதி ஆசிரமத்தில் கூடியது. சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு, காந்திஜிக்கு அளிக்கப்பட்டது* சட்டமன்ற இயக்கத்தின் முக்கிய நிகழ்வாக, உப்பு சட்டத்தை மீறி, போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார், காந்திஜி. உப்பு சத்தியாகிரகத்தை, மிகவும் வலிமை வாய்ந்த அறப்போராக கருதினார்* சுதேசி துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல், கதர் பிரசாரம், வரி கொடாமை ஆகியவையும் சட்டமறுப்பு இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது* காந்தி - இர்வின் ஒப்பந்தம், பரஸ்பர நம்பிக்கையின்படி செய்து கொள்ளப்பட்ட உடன்பாடாகும். 'இந்த உடன்படிக்கை, காந்திஜிக்கு கிடைத்த வெற்றி...' என கூறியபோது, 'இது, இருவருக்கும் கிடைத்த வெற்றி...' என, கூறினார், காந்திஜி* இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில், இந்தியர்கள், பிரிட்டனுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இந்தியர்களின் ஒத்துழைப்பை பெற, ஆகஸ்ட் அறிக்கையை, 1940, ஆக., 8ல் வெளியிட்டார், அப்போதைய வைசிராய், லின்லித்கோ* 'இந்திய அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்...' என, காந்திஜியை கேட்டுக் கொண்டது, காங்கிரஸ். அதற்காக, இந்திய மக்கள் அனைவரையும் பங்கேற்கும் வகையில், ஒரு இயக்கம் உருவானது. அதுவே, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம்* இரண்டாம் உலகப் போருக்கு பின், இங்கிலாந்து அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனில் நடைபெற்ற பொது தேர்தலில் தொழிற் கட்சி வெற்றியடைந்தது* தொழிற் கட்சி வேட்பாளர், கிளமண்ட் அட்லி, இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். இந்திய அரசியல் நிலையை ஆராய, அமைச்சரவை துாது குழுவை இந்தியாவிற்கு அனுப்பினார்* இந்தியர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான பணியை துரிதப்படுத்தவே, அமைச்சரவை துாதுக்குழு இந்தியாவிற்கு வந்தது* ஜவகர்லால் நேருவை, 1946, ஆக., 12ல், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார், வைஸ்ராய் வேவல்பிரபு* இங்கிலாந்து பிரதமர், அட்லி தான், அந்த அதிசயத்தை செய்தவர். '1948, ஜூன் 1ம் தேதிக்குள், பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிற்கு அதிகார மாற்றம் செய்து விடும்...' என்று அறிவித்தார்* வரலாற்று சிறப்பு மிக்க, அட்லி அறிக்கை, 1947, பிப்., 20ல் வெளியானது* அட்லி பிரபுவின் அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவில் பதற்றம் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில், இந்திய வைஸ்ராயாக, 1947, மார்ச் 24ல் பதவியேற்றார், மவுண்ட்பேட்டன் பிரபு* நிலைமையை சமாளிக்க, முதலில், நேருவையும், படேலையும் சந்தித்து பேசியவர், 'இந்திய அரசியல் மற்றும் இனச்சிக்கல் தீர வேண்டுமானால், இந்தியாவை பிரிவினை செய்வதை தவிர வேறு வழியில்லை...' என கூறினார், மவுண்ட் பேட்டன் பிரபு* மவுண்ட்பேட்டன், கடைசியாக ஒரு, 'செக்' வைத்தார். 'இந்திய அரசியல் கட்சிகள், சமாதானமான முறையில், அரசியல் பிரச்னைக்கு தீர்வு கண்டால், அதிகார மாற்றம், 1948, ஜூனுக்கு பதிலாக, 1947, ஆகஸ்ட் 14 நள்ளிரவில் வழங்கப்படும்...' என்பதே அது* இந்திய பிரிவினை முடிவானதும், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், ஜூலை 4, 1947ல் நிறைவேறியது* இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு டொமினியன்கள், 1947, ஆகஸ்ட் 15ம் நாளில் உருவாகின. ஆகஸ்ட் 14 - 15 நள்ளிரவில், இந்தியாவிற்கு வெளிச்சம் கிடைத்தது. ஆம், பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவில் முடிவுக்கு வந்தது* யூனியன் ஜாக் பறந்த கொடி மரத்தில், அசோக சக்கரம் பொறித்த மூவர்ண இந்திய சுதந்திர கொடியை பறக்க விட்டார், மவுண்ட் பேட்டன் பிரபு. இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. நடுத்தெரு நாராயணன்