உள்ளூர் செய்திகள்

திண்ணை

'அண்ணாவும், தி.மு.க.,வும்' நுாலிலிருந்து: கடந்த, 1957ல், பொதுத் தேர்தலில், தி.மு.க., போட்டியிடுவது என முடிவானது. ஆனால், கட்சியில் போதுமான நிதி வசதி இல்லை. அப்போது, திரையுலகில் உள்ள, தி.மு.க.,வை சேர்ந்த கலைஞர்களை பிரசாரம் செய்ய கேட்டுக் கொண்டார், அண்ணாதுரை.அதற்காக, ஒரு நடிகர் பட்டாளமே காத்திருந்தது. அப்போது, 'நான், பிரசாரம் செய்வதுடன், லட்சக்கணக்கான பண உதவி செய்யவும் தயார்...' என்றார், எம்.ஜி.ஆர்.,இதைக் கேட்ட அண்ணாதுரை, 'ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்த்து கனிகிற நெல்லிக்கனி, எம்.ஜி.ஆர்., அது யார் மடியில் விழும் என்று எல்லா அரசியல்வாதிகளும் காத்திருந்தனர். அது, என் மடியிலே விழுந்து விட்டது. இந்த தேர்தலில், அவர், பல லட்சம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.'எனக்கு, நிதி முக்கியமில்லை. எம்.ஜி.ஆர்., முகத்தை காட்டினால், 30 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும். அவர், தெருவில் ஊர்வலமாக வந்தால் போதும், காங்கிரஸ் கட்சியை, துாள் துாளாக்கி காட்டுவேன்...' என்றார்.'முகலாயர் படையெடுப்பு' நுாலிலிருந்து: டில்லியை ஆண்ட முகலாய சக்கரவர்த்தி, அவுரங்கசீப், தட்சிண பீடபூமியை வெல்ல, தன் கடைசி ஆண்டுகளை செலவழித்தார். ஆனாலும், ஒரு வலி மிகுந்த வெற்றியாகவே அது அமைந்தது. லட்சக்கணக்கான வீரர்களை அவர் இழந்தார்.தலைநகரமே இடம் பெயரும்படி படையெடுப்பு இருந்தது. பின், பச்சை பசுமையை காலி செய்து, அதன் வளத்தை சுரண்டிட, பஞ்சம் ஏற்பட்டது. அவுரங்கசீப்பிற்கே, தன், 90வது வயதில், எதற்காக இந்த வியர்த்தமான விளையாட்டு என்ற குழப்பம் ஏற்பட்டது. 'நான் தனியாக வந்தேன்; அந்நியனாக செல்கிறேன்...' என்று, மரண வாக்குமூலம் கொடுத்தார்.டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின், 'சாதனைக்கோர் பாதை' நுாலிலிருந்து: பிறரை தாழ்த்துவதன் மூலம் நாம் எப்படி உயர்ந்துவிட முடியும். பிறரை தாழ்த்துவதன் மூலம் நாமும் தாழ்கிறோம்* நம்மைப் பற்றி தீர்ப்பு கூற, நாம் சாகும் வரை காத்திருக்கிறார், கடவுள். ஆனால், மனிதர்களான நாமோ, 'நான் உபயோகமற்றவன். எதையும் ஒழுங்காக செய்து முடிக்க திறமையற்றவன்...' என்று, சதா சர்வ நேரமும் நம்மைப் பற்றி தீர்ப்பு வழங்கியபடி இருக்கிறோம்* நம் நாட்டில், புழு, பூச்சியாக வாழ்கிறான், மனிதன். எப்படியோ வாழ்ந்தால் சரி என்று, குப்பை மேட்டில் குடும்பம் நடத்துகிறான். பொது இடங்களில் மல ஜலம் கழிக்கிறான்* வெற்றியும் - தோல்வியும், பயமும் - தைரியமும், சோகமும் - மகிழ்வும், நம் மனதை எப்படி பழக்கப்படுத்தி இருக்கிறோம் என்பதை பொறுத்தே அமையும்* நாம் தோல்வி கண்டோம் என்பது உண்மை. ஆனால், 'நாம் தோல்வியாளன்' என்பது உண்மையல்ல* செக்கு மாடு வாழ்வை உதறித் தள்ளுங்கள். சவால்களை நாடுங்கள். புதிய சவால்களை மேற்கொண்டவர்களால் தான் உலகம் முன்னேறி இருக்கிறது. அந்த சாதனைகளை நாமும் எட்ட, இதோ அதற்கான ஐந்து படிக்கட்டுகள்: 1.பெரிய விஷயங்களில் ஈடுபாடு. 2.மாற்றங்களைப் பயன்படுத்தும் குணம். 3.தோல்வியை சமாளிக்கும் இயல்பு. 4.எது முக்கியம் என்ற தெளிவு. 5.வாழ்வில் ஒரு நிறைவு. நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !