உள்ளூர் செய்திகள்

திண்ணை

'குண்டூசி' பி.ஆர்.எஸ்.கோபால் எழுதிய, 'திரை மணிக்கோவை' நுாலிலிருந்து:சமயோசித நகைச்சுவை திறமை மிக்கவராய் இருந்தார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவர், 'கிந்தனார்' காலட்சேபம் செய்து வந்தது, நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில், ஒரு தனவந்தரின் வீட்டு கல்யாணத்தின்போது, அவர் காலட்சேபம் செய்த சமயம், பாகவதர் நடித்த, சிவகவி படம் வெளி வந்து, 'வள்ளலை பாடும் வாயால்' என்ற பாட்டு, மூலைக்கு மூலை ஒலித்துக் கொண்டிருந்தது.கிந்தன், மூர்மார்க்கெட்டில் ஒரு லட்டு உருண்டையை திருடிய கட்டம் வந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில், 'முட்டையை தின்னும் வாயால், இனிய லட்டையும் தின்னுவேனோ' என்று சமயோசிதமாக பாடினார், கலைவாணர். உடனே, கொட்டகை அதிரும்படி கரகோஷம், மகிழ்ச்சி, ஆரவாரம்.என்.எஸ்.கே.,யை மெச்சியவராய், 'அட பாவி மனுஷா, கொன்னுட்டியே...' என்றார், பாகவதர்.சபீதா ஜோசப் எழுதிய, '100 தலைவர்கள் 100 தகவல்கள்' நுாலிலிருந்து:காங்கிரசுக்கு எதிராக, 'சுதந்திரா' என்ற கட்சியை ஆரம்பித்தார், ராஜாஜி. 1962ல் நடைபெற்ற பொது தேர்தலில் நின்ற எல்லா இடங்களிலும் அக்கட்சி மண்ணை கவ்வி, படுதோல்வி அடைந்தது.அப்போது, தன் கட்சிக்கு என்று தனியாக ஒரு அலுவலகம் வைத்திருக்கவில்லை, ராஜாஜி. அவரது சுதந்திரா கட்சி, சென்னை கல்வி அலுவலகத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தது.கட்சியின் கூட்டம் நடந்து முடிந்த ஒருநாள், ராஜாஜியும், கோவை அய்யாமுத்துவும் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது, 'நம் கட்சிக்கு ஒரு அலுவலகம் வேண்டும்...' என்றார், அய்யாமுத்து.'எதற்கு சீட்டு விளையாடுவதற்கா...' என்றார், ராஜாஜி.'கட்சிக்கு என்று நாளிதழ் ஒன்றும் வேண்டும்...' என்றார், அய்யாமுத்து.'எதற்கு, சுய விளம்பரத்திற்கா...' என்றார், ராஜாஜி.பொறுமை இழந்த, அய்யாமுத்து வேகமாக எழுந்து, 'உங்கள் கட்சி உருப்படாது...' என்று சொல்லி போய் விட்டார்; இதைக் கேட்டு மவுனமானார், ராஜாஜி.அமெரிக்காவின் முதல் அதிபரான, ஜார்ஜ் வாஷிங்டன், ஒருசமயம், காலதாமதமாக அலுவலகம் வந்த தம் செயலரை அழைத்து, 'தாமதத்திற்கு என்ன காரணம்...' என்று கேட்டார்.'கால தாமதம் ஆனதற்கு, என்னிடம் இருக்கும் கை கடிகாரம் தான் காரணம்; என்னை மன்னியுங்கள்...' என்று வேண்டினார், செயலர்.'அப்படியா... இந்த தவறு நீடிக்காமல் இருக்க வேண்டுமானால், இரண்டில் ஒரு காரியம் உடனே செய்தாக வேண்டும். ஒன்று, நீ வேறு கடிகாரம் வாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது நான் வேறு செயலரை அமர்த்திக் கொள்ள வேண்டும்...' என்று, சாந்தமாக கூறினார், ஜார்ஜ் வாஷிங்டன்.அன்று முதல் அந்த செயலர், தினமும் சரியான நேரத்திற்கு அலுவலகம் வர துவங்கி விட்டார்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !