திண்ணை!
பக்கிங்ஹாம் அரண்மனையில், பிரிட்டிஷ் ராணியுடன் விருந்துண்ண போகிறீர்களா? பல அதிசயங்களும், அதிர்ச்சிகளும் காத்திருக்கும், ஜாக்கிரதை. பரம்பரை பரம்பரையாக வந்துள்ள பழக்கங்கள் பலவற்றை, நீங்கள் காண நேரிடும்.இனிப்புகள் பரிமாறப்படும் போது, உடனே நீங்கள் சுவைக்கத் துவங்கி விடக் கூடாது. ஸ்காட்லாந்து ராணுவ இசைக்குழு ஒன்று, 'டாக், டாக்'கென்று இசையுடன், விருந்து மண்டபத்தினுள் நுழையும். பாடிக் கொண்டே வலம் வந்து விட்டு, அகலும். குழுவின் தலைவர், ராணியின் நாற்காலி அருகில், ஒரு காலைத் தூக்கி வைத்துக் கொண்டு நிற்பார். ராணி, ஒரு கிளாஸ் விஸ்கியை கொடுப்பார், அவரிடம். ஒரே மடக்கில் அதை வாங்கிக் குடித்துவிட்டு, அவர் செல்வார். பிறகு தான், இனிப்புகளை சாப்பிடலாம்.விருந்து மேஜையில், முள் கரண்டிகள் கவிழ்த்து வைக்கப்படுமேயன்றி, நிமிர்த்தி வைக்கப்படுவதில்லை. ஏன்? முன்பொருமுறை, ஒரு பிரிட்டிஷ் மன்னர், உற்சாகமாக பேசிய வண்ணம், மேஜை மீது ஒரு குத்து விட்டார். முள் கரண்டி, அவர் கையை பதம் பார்த்து விட்டது. அதன் பிறகு, முள் கரண்டிகள் கவிழ்த்தே வைக்கப்படுவது வழக்கமாகி விட்டது.முன்பெல்லாம், அரண்மனை விருந்துகளில், தங்கக் கத்திகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், எதையாவது வெட்டினால், கத்தி வளைவதைக் கண்டார் ஒரு மன்னர். அதன் பின், பிறப்பிக்கப்பட்ட கட்டளை, கத்திகளில் பிடி மட்டுமே தங்கம்; கத்தி, இரும்பால் ஆனதாக இருக்க வேண்டும்.பக்கிங்ஹாம் அரண்மனையில் சாப்பிடும் இடத்துக்கும், சமையல றைக்கும் அரை கி.மீ., தூரம் இருக்கிறது. சமையலறையில் நவீன வசதிகளும் கிடையாது. அதனால், எலிசபெத் ராணி, தம் விருந்துகளை விண்ட்சர் மாளிகையில் தான் அதிகமாக நடத்துகிறார். இங்கே வராத அயல் நாட்டு பிரமுகரோ, மன்னரோ கிடையாது. இரவு சாப்பிட்டு விட்டு, அங்கேயே படுத்து தூங்கிவிட்டு போகுமாறு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம்.பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்து நடைபெற்றால், ஒரு சினிமா காட்சியும் உண்டு. ஒரு சிறிய தியேட்டர், அரண்மனையில் உள்ளது. செய்திப் படமும், ஹாஸ்யப் படமும் திரையிடப் படுகின்றன.அயல்நாட்டு பிரமுகருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை முன் கூட்டியே அறிந்து, அதற்கேற்றபடி, ஏற்பாடுகள் செய்கின்றனர். முன்பொருமுறை, ஒரு அரபு நாட்டு இளவரசர் விஜயம் செய்த போது, அவருடைய சாப்பாட்டுக்கான ஆடுகளை, அவரே கொண்டு வருவார் என்று அறிவிக்கப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனை சமையலறையில், அந்த ஆடுகளுக்காக, ஒரு தனிக் கொட்டில் கட்டி வசதி செய்து தந்தனர்.தோட்ட விருந்துகளின் போது, விருந்தினர்கள் ஆங்காங்கே நின்று, சிற்றுண்டி அருந்துவர். ராணியார் அருகில் வரும் போது, வாய் நிறைய பலகாரத்துடன் இருப்பது, ராணியாரை அவமதிப்பதாகும். ஒரு பிரமுகர், ரொட்டியைக் கடித்துக் கொண்டிருக்கையில், ராணி அருகில் வருவதைக் கவனித்து விட்டார். சமயோசித புத்தியுள்ள அவர், சட்டென்று வாயில் இருந்ததை, தன் தொப்பியில் துப்பி, தொப்பியை மார்போடு அணைத்தவாறு குனிந்து, வணக்கம் செலுத்தினாராம்.— 'ராஜ பரம்பரையும், சில வழக்கங்களும்' நூலிலிருந்து...நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. பெங்களூரு நாடக அரங்கு ஒன்றில், ஒரு நாள் மாலை...நாடகம் துவங்கும் நேரம். அணைந்த விளக்குகள் திடீரென்று மீண்டும் எரிய ஆரம்பித்தன. அரங்கில் ஒரே சலசலப்பு. காரணம், முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு கிழவர் திடீரென்று கீழே விழுந்து விட்டார். ஒலி பெருக்கியின் மூலம், 'தயவு செய்து அரங்கில் யாரேனும் டாக்டர் இருந்தால் வரவும்...' என்று கோரப்பட்டது.விரைந்து வந்த டாக்டர் ஒருவர், கிழவரை பரிசோதித்தார். போலீஸ் அதிகாரிகள் சிலரும் அரங்கில் நுழைந்தனர்.டாக்டரும், போலீஸ் அதிகாரிகளும் கலந்து பேசிய பின்னர், ஒலி பெருக்கி மீண்டும் ஒலித்தது. 'இந்த பெரியவர் இறந்து விட்டார். போலீஸ் விசாரணை முடியும் வரை அரங்கிலுள்ள யாரும் வெளியே போக வேண்டாம்!'அரங்கத்தில் ஒரே சலசலப்பும், குழப்பமும் நிலவின. சில வினாடிகள் கழித்து மீண்டும் ஒலித்தது ஒலி பெருக்கி... 'இதுவரை நீங்கள் பார்த்தது, பெங்காலி அசோசியேஷன் அளிக்கும் நாடகத்தின் முதல் காட்சி. அடுத்த காட்சி உடனே தொடரும்!'***நடுத்தெரு நாராயணன்