அன்புடன் அந்தரங்கம்
அன்பு சகோதரிக்கு,எனக்கு திருமணம் ஆகி, 17 ஆண்டுகள், ஆகிறது. எங்களுடையது காதல் திருமணம். இரு தரப்பையும் எதிர்த்து, திருமணம் முடித்தோம். 15 ஆண்டுகள், எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கை ஓடியது.நான் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையுடையவள். கணவரே உலகம் என்று வாழ்ந்தேன். அவர் மேல் வெறித்தனமான அன்பு வைத்திருந்தேன். இந்த சமயத்தில், என் கணவருடைய திடீர் நண்பன் ஒருவன், அடிக்கடி வீட்டிற்கு வருவான். என் கணவரை, அவன் வீட்டிற்கு கூட்டிக் செல்வான். அவன் மேல் ஆரம்பத்தில், எனக்கு சந்தேகம் எழவில்லை. அவனுடைய மனைவி, என் கணவருடன் வேலை பார்க்கிறாள். அவளுக்கும், என் கணவருக்கும், இரண்டு வருடமாக தொடர்பு இருந்திருக்கிறது. இதை, அவளுடைய கணவன் தெரிந்து, என்னுடைய கணவரை, அவனே கூப்பிட்டுப் போய் மனைவியிடம் விட்டு, என் கணவரிடம், ஏகப்பட்ட பணத்தை பறித்துக் கொண்டான்.சமீபத்தில் தான் இந்த விஷயம் எனக்கு தெரிய வந்தது. என் கணவரிடம் இதைப் பற்றிக் கேட்டேன். உண்மை என்று ஒத்துக் கொண்டவர், 'அவளுடன் நெருங்கி பழகி விட்டேன். என்னால், அவளை பிரிய முடியாது. அவள் தற்கொலை பண்ணிக் கொள்வாள். அதனால், அவளை நான் ஏற்றுக் கொள்வேன்...' என்று சொன்னார்.என்னால், இதை ஜீரணிக்க முடியவில்லை. மனம் நொறுங்கிப் போனேன். என் கணவரிடம், 'பிள்ளைகளின் நலன் கருதி, நீங்கள் செய்ததையெல்லாம் மறந்து விடுகிறேன். அவளை தூக்கி எறிந்து விட்டு, என்னுடன் வாழுங்கள். அவள் வேண்டுமானால், அவளை எங்காவது கூப்பிட்டுப் போய் வாழுங்கள்...' என்றேன்.அவளையும் நேரில் சந்தித்து, 'திருமணம் முடித்த பிறகு பெண்கள் கோவில் கோபுர கலசமாகத் திகழ வேண்டும். தெருப்புழுதியாக மாறினால், கண்டவனும், காலில் மிதித்து விட்டுப் போய் விடுவான். ஒரு பெண்ணே பெண்ணுக்குத் துரோகம் பண்ணலாமா... உன் கணவன், இன்னொருவன் மனைவியோடு தொடர்பு வைத்திருந்தால், உனக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்... என் கணவன்தான் வேண்டுமென்றால், உன் கணவன் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்து விட்டு, என் கணவனோடு எங்காவது போய் வாழு. இங்கிருந்து எனக்கும், என் பிள்ளைகளுக்கும் கெட்ட பெயரை உண்டாக்காதே...' என்று சொல்லி விட்டேன்.என் கணவர் என்னையும் விட முடியாமல், அவளையும் விட முடியாமல் தவிக்கிறார்.இரட்டை வாழ்க்கை வாழுகிற, என் கணவரோடு வாழ, என் மனம் இடம் கொடுக்கவில்லை. என் கணவர் மிகவும் நல்லவர்; நல்ல வேலையில் இருக்கிறார். எனக்கு இரு பெண் குழந்தைகள்; இரண்டு பேரும் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கின்றனர். நானும் நல்ல வேலையில் இருக்கிறேன். என் கணவருடைய இரட்டை வாழ்க்கையை, என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.என் வாழ்க்கையை விட்டுக் கொடுத்து, பிள்ளைகளை படிக்க வைத்து, நல்ல உத்தியோகத்தில் அமர்த்தி, வாழ்க்கையை ஓட்டி விடலாமா?கணவனைப் பிரிந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல், பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த சமுதாயத்தில் ஒரு கெட்ட பெயரும் இல்லாமல் வாழ முடியுமா? எனக்கு வயது 36. என் பிள்ளைகளும், 15, 12 வயதுள்ளவர்கள். இவர்களை நினைத்து, என் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள், குழப்பங்கள்.எனக்கு, என் உறவினர்களோ, என் கணவர் வழி உறவினர்களோ கிடையாது. இந்த சூழ்நிலையில் தனிமரமாக நிற்கும் எனக்கு, உங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். எந்த சூழ்நிலையிலும் சலனத்திற்கு ஆளாகாமல் மனக்கட்டுப்பாடோடு, என்னால் வாழ முடியும்.எச்சிலையில் சாப்பிட நினைக்கும் ஆண்களுக்கும், பெண்ணே பெண்ணுக்குத் துரோகம் நினைக்கும் பெண்களுக்கும், கணவனே தெய்வம் என்று வாழ்ந்து ஏமாறுகிற பெண்களுக்கும், உங்களுடைய பதில், ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.இப்படிக்கு,உங்கள் சகோதரி.பிரியமான சகோதரிக்கு,உன் பிரச்னைகளை அழகாக கோர்வையாக எழுதி உள்ளீர்கள். காதல் திருமணம் ஆகி, 15 ஆண்டுகள், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து, இரண்டு குழந்தைகளைப் பெற்று, வாழ்க்கையை வெற்றிகரமாகவும் வாழ்ந்திருக்கிறீர்கள். அப்படி இருக்க, உன்னவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஏன் திருமணம் ஆன வேறொரு பெண்ணை நாடுகிறார் என்று, * சற்றே தீவிரமாக, மனம் திறந்து, சிந்திக்க வேண்டும்.* என்ன கருத்து வேறுபாடு உங்கள் இருவருக்கும்?* அவருக்கு பிடிக்காதவைகளை நீ செய்தாயா?* என்ன எதிர்பார்க்கிறார் உன் கணவர்? அந்த எதிர்பார்ப்பை உன்னால் நிறைவேற்ற முடியுமா?* வெறித்தனமான அன்பு செலுத்துகிறேன்...' என்ற பெயரில் அவரை நீ அதிகம் காயப்படுத்துகிறாயா?* அவரை, 'எல்லா வழியிலும்' கவனிக்காமல், உன் குழந்தைகளிடமே அதிக நேரம் செலவழிக்கிறாயா?* உன்னிடம் இல்லாத ஒன்று அல்லது பல என்ன அப்பெண்ணிடம் இருக்கிறது?சற்றே யோசித்துப் பார்த்தால் பல நிதர்சனமான உண்மைகள் புலப்படும்.பதினைந்து வருடங்களுக்கு பின் ஒருவன், மனைவியை விட்டு, இன்னொரு பெண்ணிடம் செல்வது என்றால், நிச்சயமாக, 'செக்ஸ்' மாத்திரம் காரணமாகாது. அப்படி, 'செக்ஸ்' வேண்டும் என்று நினைத்திருந்தால், உன் கணவர், எப்போவோ பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்க முடியும்.எனவே, மேற்கூறிய கேள்விக்கான பதில்களை தேட ஆரம்பி...உன் கணவரின் நண்பருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், எக்கச்சக்கமான பிரச்னைகள் இருக்கக் கூடும். மிக ஆணித்தரமாக சொல்கிறேன் தன் மனைவியை, தன் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள, அனுபவிக்க ஏற்பாடு செய்வது நிச்சயமாக பணத்திற்காக மட்டும் இருக்காது. அந்த நண்பரின் உடல் ரீதியான, மனம் ரீதியான பிரச்னைகள் கூட, காரணமாக இருக்கலாம். எனவே, உன் கணவரின் நண்பரும், அவரது மனைவியும் உடனே நல்ல மனநல ஆலோசகரை சந்தித்து உதவி பெறுவது மிக அவசியம்.நீ என்ன செய்ய வேண்டும் என்பதற்கு சில ஆலோசனைகள்...* தனிமையில் உட்கார்ந்து, பிரச்னைகளை உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல், நடை முறைக்கு ஏற்றாற் போல சிந்திக்க வேண்டும்.* கோபப்படாமல், உன் கணவரிடம் அன்பாக பேசி, மனதில் என்ன நினைக்கிறார், ஏன் இப்படி செய்கிறார், அவரது திட்டங்கள் என்ன என்பதை, ஆராய வேண்டும்.* அவரது பார்வையில் நீயும், மற்றவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக, தெரிந்து கொள்ள வேண்டும்.* அந்த பெண்ணிடம் இருந்து விலகி, அவரால் வாழ முடியுமா, பழைய மாதிரி உன்னிடமும், உன் குழந்தைகளுடனும் அன்பாக இருக்க முடியுமா, அப்படி முடிந்தால், அதற்கு நீ என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொள்.* மிகத் தெளிவாக உன் குழந்தைகளின், எதிர்கால வாழ்க்கைப் பற்றி, உன் கணவரிடம் பேசி முடிவெடுக்க வேண்டும்.* உன் கணவரிடம், உன்னால் பேசி தீர்வு காண முடியாது என்றால், உங்களைப் புரிந்து கொண்ட, உங்களின் வாழ்க்கையில் அக்கறை கொண்ட பெரியவர்களின் உதவியை அல்லது திறமையான குடும்ப நல ஆலோசகரை அணுகி அவர்களது உதவியைப் பெறலாம்.சகோதரியே... உச்சி வெயிலில் நின்றால், நம் நிழல் கூட நமக்கு தெரியாது. அதற்காக, நமக்கு நிழலே இல்லை என்று அர்த்தமாகாது. சிறிது நேரம் சென்றதும், தள்ளி நின்று பார்த்தால், நமது நிழல், நமக்குத் தெரியும். ஒன்றை நன்கு புரிந்து கொள். நம் வாழ்க்கையில் வாழுகிற வரை, பிரச்னைகள் யாவும் நம் நிழல் போல தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவைகளை சமாளிக்க நாம் காலம் தாழ்த்தி, சற்றே அவைகளை விட்டு விலகி நின்று புரிந்து கொண்டால், பிரச்னையின் வீச்சு தெரிய வரும். அவைகளுக்கு பதிலும், சமாளிக்கும் முறைகளும் தெளிவாக தெரிய வரும்.எனவே, உன் கணவர், குழந்தைகளுடன் நன்கு கலந்து ஆலோசனை செய்து, தெளிவாக சிந்தித்து, நல்ல முடிவையே எடுப்பாய் என்ற நம்பிக்கையிருக்கிறது.உன் மனம் போல வாழ்வு சிறக்க, என் வாழ்த்துகள்!— என்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.