உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரி,நான், முன்னாள் ராணுவ வீரன் மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி நிலைய பொறியியல் உதவியாளர்; மேலும், 2003 - 2012 வரையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணி. கடந்த, இரு ஆண்டுகளாக கிராமத்தில் குறு விவசாயம் செய்து வருகிறேன். நான், என் தாய்மாமன் மகளைத் தான் திருமணம் செய்துள்ளேன். வரும் ஜனவரி, 15ல் எங்களது, 52வது திருமண ஆண்டாகும்.என் உடன் பிறந்தோர் இரு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள்; என் தாய்மாமனுக்கு ஒரே பெண், என் மனைவி மட்டுமே! என் தாய் மாமன் நடத்தை கெட்டவர்; மனைவி எதிரிலேயே ஊர் சுற்றியவர். அதனாலேயே என் மாமியார், 40 வயதிலேயே இறந்து விட்டார்.எங்களுக்கு மூன்று பையன்கள், ஒரு பெண். பெண்ணுக்கு மணமாகி, ஒரு ஆண்டிலேயே மரணமடைந்து விட்டாள்.மூன்று மகன்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. மூத்தவனின் மகன், பொறியியல் முதலாம் ஆண்டும், மகள் பிளஸ்1ம் படிக்கின்றனர். மகனுக்கு வெளிநாட்டில் வேலை. நடுமகன் சிவில் பொறியாளர், மருமகள், கல்லூரியில் பணிபுரிறாள். அவர்களுடைய மூத்த மகள் இன்ஜினியரிங்கும், இரண்டாவது மகள் ஏழாவதும் படிக்கின்றனர். மூன்றாவது மகன் வெளிநாட்டிலும், மருமகள் சென்னையில் தனியார் அலுவலகத்திலும் பணிபுரிகிறார். அவர்களுக்கு ஒரே மகன், இரண்டாவது படிக்கிறான்.சென்னை புறநகரில் வீடு உள்ளது. கீழ்தளத்தில் மூத்த மருமகள், முதல் தளத்தில் கடைசி மருமகளுடன், நாங்கள் இருந்தோம். என் தாயார், 2008ல் மரணமடைந்து விட்டார். இது, என் மனைவியை பாதித்து விட்டது. மரணத்திற்கு என் இரண்டாவது மருமகள் வந்திருந்தார். நான், அவரிடம் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக, என் மனைவி அபாண்டமாக பழி சுமத்தினார்.இதனால், மூத்த மருமகளும், கடைசி மருமகளும் வீட்டைக் காலி செய்து, தங்கள் தாய் வீட்டிற்கே சென்று விட்டனர்.என் மகன்கள், தன் தாயின் கொடுஞ்சொல் தாளாமல், அவளிடம் பேசுவதுமில்லை, பார்க்க வருவதுமில்லை. பேரன், பேத்திகள் போனில் பேசுவதோடு சரி; யாரும் வருவது இல்லை.ஒருமுறை, என் மீது ஆசிட் வீசப் போகிறேன் என்று மனைவி மிரட்டினாள். என் மரணத்திற்கு பின், மகன்களுள் சொத்து பிரச்னை வரக் கூடாது என்பதற்காக, மறுநாளே உயில் எழுதி விட்டேன்.அதன்பின், சென்னை வீட்டை காலி செய்து, கிராமத்தில், வீடு கட்டி வசித்து வருகிறோம். மருத்துவத்திற்காக சென்னைக்கு அடிக்கடி வந்து போகிறோம். என் வயது, 72; மனைவி வயது 68. இன்று வரை சந்தேகப் பேய், அவரை விட்டு போகவில்லை. 52 ஆண்டுகளாக ஒழுக்கத்துடன் வாழ்ந்தும், என் மனைவி இன்று வரை என்னை சந்தேகிப்பதும், சுடு சொல் கூறுவதும் வேதனையாக உள்ளது. எனவே, உங்கள் உதவியை நாடுகிறேன்.'தினமலர் - வாரமலர்' அன்புடன் அந்தரங்கம் பகுதியை, என் மனைவி விரும்பி படிப்பார். நல்லதோர் அறிவுரை கூறுங்கள்.அன்புடன்,பெயர் வெளியிட விரும்பாத வாசகர்,அன்பு சகோதரருக்கு,பொதுவாக எல்லா பெண்களுமே, தம் புருஷன் தமக்கு மட்டும்தான் என, இருப்பர். ஆனால், சில பெண்கள் இன்னும் சிலபடிகள் மேலே போய் சுயநலம் கொண்டாடுவர். இவர்களுக்கு கணவன் பேரழகனாகவும், அவனை பங்குபோட பல பெண்கள் முயற்சிக்கின்றனர் என கற்பனை, கொடிகட்டி பறக்கும். இதில், மாமியாராய் இருக்கும் பெண்களுக்கு, மகன்களை பங்குபோட வந்தவர்கள் என்ற விதத்தில், மருமகள்களை பிடிக்காது. உங்கள் மனைவியோ, மருமகள்களை, தன் கணவரோடு தொடர்புபடுத்தி அவதூறு பேசுகிறார்.தன் அவதூறு பேச்சுகளால், மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகளின் மனங்களை காயப்படுத்தி விட்டார். மகன்கள் பெற்ற தாயுடன் பேசுவதில்லை; பேரன், பேத்திகள் பாட்டி வீட்டுக்கு வருவதில்லை என்பது, எவ்வளவு அவலமான விஷயம்.உங்கள் மீது ஆசிட் ஊற்ற முயன்ற மனைவியை சகித்து, 52 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளீர்களே... இதற்கே உங்களுக்கு, விருது கொடுக்கலாம்.மூச்சு திணறல் நோய் உள்ள, 72 வயது கிழவனை, எந்த இளம் பெண் சீந்துவாள் என்கிற யதார்த்தம், உங்கள் மனைவிக்கு உறைக்கவில்லை. மாமனார் - மருமகள் என்கிற கண்ணியமான உறவை, சந்தேகக் கண்கொண்டு பார்த்திருக்கிறார் உங்கள் மனைவி. அந்த சந்தேகம் தொற்றுநோயாய் மற்ற மருமகள்கள் மீதும் தாவியிருக்கிறது.உங்களின், 52 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், ஏதோ ஒரு சம்பவம், உங்கள் மனைவியின் மனதை பெரிய அளவில் பாதித்துள்ளது. நீங்கள் திருமணமான புதிதில், இளம் பெண்களுடன் ஆர்வமாய் பேசி, பழகுவதை, உங்கள் மனைவி கண்ணுற்று இருக்கிறார். தாம்பத்யத்தில் உங்களுக்கு இருந்த அதீத ஈடுபாட்டை உங்கள் மனைவி தவறாக புரிந்திருக்கக் கூடும்.உங்களது மாமனார், ஒரு ஸ்திரிலோலனாக இருந்திருக்கிறார். உங்களது மாமியார், கணவனின் துர்நடவடிக்கைகளை பார்த்து, மனம் வெதும்பி இளம் வயதிலேயே இறந்திருக்கிறார். தன் தந்தையை போலவே, உலகின் அனைத்து ஆண்களும், குறிப்பாக கணவன் ஸ்திரிலோலனாகதான் இருப்பார் என்கிற முடிவுக்கு வந்திருப்பார் உங்கள் மனைவி. அதனாலேயே கணவனை சேர்ந்துள்ள அனைத்து உறவுகளையும் சந்தேகப்பட்டிருக்கிறார்.இனி, நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?உங்களது மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் எல்லாரையும் வரவழைத்து, உங்கள் முன்னிலையில், அவர்களை உங்கள் மனைவியிடம் மனம் விட்டு பேசச் சொல்லுங்கள். அவரது அவதூறு பேச்சு, அவர்களின் மனங்களை எந்தளவுக்கு பாதித்துள்ளது எனக்கூறி, அவரை நல்வழிப்படுத்துங்கள்.இந்த சமாதான முயற்சி எடுபடா விட்டால், உங்களது மனைவியை, ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்து போய், தகுந்த மருத்துவம் பாருங்கள்.உங்களின் மனைவியின் சந்தேக வியாதி குணமாகி நீங்களிருவரும், 75வது திருமண நாளை கொண்டாட வாழ்த்துகள்!— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !