அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —மருத்துவரான என் தந்தைக்கு, இரு மனைவியர். காதலித்து மணந்த முதல் மனைவிக்கு, இரு மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக, அவர் தற்கொலை செய்து கொள்ள, அதன்பின் என் அம்மாவை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார், என் அப்பா.என் உடன் பிறந்தோர், ஒரு அண்ணன் மட்டுமே! தற்போது, அப்பாவின் வயது, 63; அம்மாவின் வயது, 51. அண்ணனுக்கு, 26; எனக்கு, 21 வயது. மூத்த தாரத்திற்கு பிறந்த அண்ணன்களுக்கு, 36 மற்றும் 32 வயதாகிறது.என் தந்தை, மிகவும் கண்டிப்பானவர். அவருக்கு குடலில், 'கேன்சர்' கட்டி இருந்து, ஆபரேஷன் செய்துள்ளார். அத்துடன், சர்க்கரை நோயும் இருப்பதால், ஆபரேஷன் செய்த இடத்தில், 'இன்பெக் ஷன்' ஆகி, சீழ் வடிகிறது.அதனால், அவர் பணியாற்றிய மருத்துவ மனையிலேயே, 'அட்மிட்'யாகியுள்ளார். என் உடன்பிறந்த அண்ணன் மிகவும் வெகுளி. வயதுக்குரிய பக்குவம் இல்லாதவன். என் அம்மா எல்லாம் தெரியும் போல் பேசினாலும், எதுவும் தெரியாத ஏமாளி. இதுவரை, என் அப்பா சம்பாதித்த பல லட்சம் ரூபாய்களும் மூத்த அண்ணன்களிடம் தான் உள்ளது. ஆபரேஷன் செய்ய, அவர்களிடம் பணம் கேட்டும் கிடைக்க வில்லை.மூத்தவருக்கு திருமணம் ஆகவில்லை; இரண்டாமவனுக்கு இரு மனைவியர். அவன், மகாபாரத சகுனியையே மிஞ்சிவிடும் அளவுக்கு கிரிமினல். அவன் மனைவியோ, என் அம்மாவை அடிக்க வந்தவள்.அம்மா... நான் பிளஸ்2 படிக்கும் போதே, என் மாமா மகனை, விரும்பி திருமணம் செய்து கொண்டேன். அப்போது, எனக்கு, 17 வயது; அவருக்கு, 23. எந்த வேலையும் தெரியாது. இரு குடும்பங்களின் ஆதரவும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம்.என் கணவருக்கு, அம்மா கிடையாது; சிறு வயது முதலே தன் அண்ணனிடம் வளர்ந்தார். அவர் அப்பா, இரண்டாம் திருமணம் செய்து, தனி குடித்தனம் போய் விட்டார். அவரது அண்ணன், என் கணவருக்கு குடிப்பழக்கத்தை கற்றுத் தந்திருந்தார். இரண்டாண்டு போராட்டத்திற்கு பின், தனிக்குடித்தனம் அழைத்து வந்து, குடிப்பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, தற்சமயம், நான் அனுமதித்தால் மட்டும், வீட்டில், 'பீர்' குடிக்கும் அளவிற்கு மாற்றி விட்டேன். தமிழ் கூட எழுத தெரியாத என்னவரை, ஆங்கிலம் பேசி, எழுதி, படிக்கும் அளவிற்கு முன்னேற்றியுள்ளேன்.தற்போது, வெளிமாநிலத்தில் வேலை செய்கிறார். எங்களுக்கு, 11 மாத ஆண் குழந்தை உள்ளது. என் கணவரின் அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள, குழந்தைகள் காப்பகத்தில், மகனை விட்டுவிட்டு, நான், அப்பாவுடன் மருத்துவமனையில் தங்கி, அவருக்கு பணிவிடை செய்து வருகிறேன். கழிவுகளை சுத்தம் செய்து, உணவு கொடுத்து, குளிப்பாட்டி, உடை மாற்றி, மகனை போல் பார்த்துக் கொள்கிறேன். ஆனாலும், என்னை, ஓடிப்போனவள் என கடுஞ்சொல் கூறுகிறார்.இதனிடையில், என் அண்ணியும், எங்களை கேவலமாக பேசுகிறார். ஆனால், அவரை நம்பி தான், அப்பா சொத்துக்களை கொடுத்து உள்ளார். ஆபரேஷன் ஆகி, மூன்று மாதங்களாகியும் அவர்கள் வந்து, அப்பாவை பார்க்கவில்லை.இராண்டாவது அண்ணன், ஒருநாள் என்னிடம், 'இங்க பாருடீ... உங்கப்பன் சீக்கிரம் மண்டையப் போட்டுருவான்; அதுக்கப்புறம் நீயும், உன் அம்மாவும், அண்ணனும் கட்டுன துணியோடு ஊரை விட்டு ஓடி போயிடணும்; இல்ல நடக்கிறதே வேற...' என, மிரட்டுகிறான். இதற்கிடையில், அவனின் நண்பன் ஒருவன், என்னிடம் ஆபாசமாக பேசி, ஆதரவு அளிக்கிறேன் என்று, அசிங்கப்படுத்த நினைக்கிறான்.அப்பா, அம்மா மற்றும் அண்ணனால், எனக்கு பாதுகாப்பு இல்லை; என்னை தவிர, அவர்களுக்கு, தற்சமயம் ஆதரவும் இல்லை. அப்பாவை தனியே விட்டு, வெளியூரில் இருக்கும் கணவரிடம் செல்ல, மனம் கேட்கவில்லை. இங்கு, எனக்கு வீடு உள்ளது. என் கணவர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வரும் போது மட்டும், அவ்வீட்டிற்கு சென்று, ஒரு வாரம் தங்குவோம்.இப்போது என் மனதில் உள்ள குழப்பம், என் குடும்பநிலை என்னாகும், இவர்களை எப்படி சமாளிப்பது...என் தந்தையை வீட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி கொடுத்து விட்டனர்; ஆனால், அவர் வர மறுக்கிறார். 'எழுந்து நடக்கும் நிலை வந்தபின் தான், வீட்டிற்கு வருவேன். அதுவரை நீ எனக்கு சேவை செய்...' என்று, கட்டளை இடுகிறார்.எனக்கு நல்ல பதில் தாருங்கள் அம்மா...—இப்படிக்கு,அன்புமகள்.அன்பு மகளுக்கு —மகன்கள், தந்தைக்கு பணிவிடை செய்ய மறுக்கின்றனர். மகளோ, தன் குடும்பத்தை பிரிந்து, தந்தைக்கு ஊழியம் செய்கிறாள். பெற்ற குழந்தைகளை சிரமப்படுத்தாமல் நாமே, நம் கணவனை கவனித்து கொள்வோம் என, ஏன் உன் தாய் முன் வரவில்லை... உன் தந்தைக்கும், தாய்க்கும் உறவு விரிசல் இருப்பதாக நினைக்கிறேன்.தன் தாய் தற்கொலை செய்து கொண்டதும், தந்தை மறுமணம் செய்தது உன் அண்ணன்களை, மூர்க்கமடைய செய்துள்ளது. அக்கோபத்தில் தான், தந்தைக்கு ஊழியம் செய்ய மறுக்கின்றனரோ என்னவோ!மூத்த தாரத்து மகன்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்தே சொத்துகளை, அவர்கள் பெயரில் எழுதி வைத்துள்ளார், உன் தந்தை. அதனாலேயே, தனக்கு ஊழியம் செய்ய அவர்களை அழைக்க, திராணியற்று உன்னை கட்டாயப்படுத்துகிறார்.உன் தந்தையிடம் சொல்...ஒரு மாதத்தை, ஐந்தாக பிரித்து, முதல், ஆறு நாட்கள், உன் அம்மாவையும், அடுத்த, ஆறு, ஆறு நாட்கள் தன் மகன்களையும், கடைசி ஆறு நாட்களுக்கு உன்னையும் அவருக்கு பணிவிடை செய்வதை பகிர்ந்தளிக்கச் சொல் அல்லது அவரை முழு நேரமும் கவனித்து கொள்ள, ஒரு செவிலியரை பணியமர்த்தி, அவருக்கான, சம்பளத்தை, நான்கு பிள்ளைகளும் கொடுக்கும் விதமாக ஏற்பாடு செய்யக் கூறு.இதற்கு உன் தந்தை ஒத்துவரவில்லை என்றால், இருதரப்பு பெரியவர்களை அழைத்து பஞ்சாயத்து வைத்து, உன் தந்தையை, குடும்ப உறுப்பினர்கள் ஐவரும் கவனித்துக் கொள்ளும் திட்டத்தை நடைமுறை படுத்து.அத்துடன், மனதை கல்லாக்கி, உன் அம்மாவிடம், 'நீயாச்சு, உன் கணவர் ஆச்சு; நான், என் கணவர், குழந்தையுடன் சேர்ந்து வாழப் போகிறேன்...' என, உன் கணவரிடம் சென்று விடு.இதையெல்லாம் செய்ய உனக்கு மனம் வராவிட்டால், எப்படியும் உன் தந்தை எழுந்து நடக்க, இன்னும் அதிகபட்சம், மூன்று மாதங்கள் ஆகும். அதுவரை, எந்த பஞ்சாயத்தும் கூட்டாமல், அண்ணன்களுடன் சண்டையிடாமல் தந்தையை கவனி. அதன்பின், குடும்ப உறவுகளை தலை முழுகி, கணவன், குழந்தையுடன் செட்டிலாகு.கொடுமைக்கார தந்தையாக இருந்தாலும், அவருக்கு ஊழியம் செய்வது, ஆயுட்கால புண்ணியத்தை தரும். அந்த புண்ணியம், உன் மகனுக்கு தான். பாதி கிணற்றை தாண்டி விட்டாய், மீதி கிணற்றையும் தாண்டு!உனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் அண்ணனின் நண்பன் மீது, உன் கணவனின் அனுமதி பெற்று, மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்!சோர்வுறாமல், தைரியமாக பிரச்னைகளை சமாளி; எல்லாம் நல்லதே நடக்கும்!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்