அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மா,நானொரு இஸ்லாமிய பெண்; வயது 23. பெற்றோர் இருவரும் அரசுப்பணியில் உள்ளனர். நான் மூத்தவள், இளையவள் பிளஸ் 2 படிக்கிறாள். நான், இளங்கலை பல் மருத்துவம் முடித்துவிட்டு, பயிற்சி மருத்துவராக கல்லுாரிக்கு சென்று வந்தேன்.'கொரோனா' காரணமாக, மார்ச் மாதத்திலிருந்து பயிற்சி வகுப்புகளை கல்லுாரி நிர்வாகத்தினர் ரத்து செய்துள்ளனர். இளங்கலை பல் மருத்துவம் முதலாமாண்டு படிக்கும் போது, உடன் படிக்கும் ஒன்பது பெண்கள், நெருங்கிய உயிர் தோழிகள் ஆயினர்.எங்களுக்கு, 'தசாவதாரம் கேர்ள்ஸ்' என்ற பட்டப்பெயர் உண்டு. நாங்கள் அனைவருமே இளங்கலை, முதுகலை டாக்டரேட் முடித்து, 30 வயதில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, சபதம் எடுத்திருந்தோம்.'கொரோனா' காரணமாக நான் வீட்டில் இருந்தபோது, உறவுக்கார பையன் ஒருவன், என்னை பெண் கேட்டு வந்தான். அவன், முதுகலை பல் மருத்துவம் முடித்து, தனியார் பல் மருத்துவக் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறான். பகுதி நேர, பி.ஹெச்.டி.,யும் சேர்ந்திருப்பதாக, அவனது பயோடேட்டா கூறியது.'வரதட்சணை எதுவும் வேண்டாம். நீ மட்டும் கிடைத்தால் போதும். திருமணத்திற்கு பின் நீ தொடர்ந்து விரும்பியதை படிக்கலாம். நானும், என் பெற்றோரும் உன் படிப்புக்கு உறுதுணையாக நிற்போம்...' என, உறுதி அளித்ததால், திருமணத்துக்கு ஒத்துக் கொண்டேன்.திருமணம் முடிந்ததும், அவன் பேச்சை மாற்றிக் கொள்ளமாட்டான் என்பது என்ன நிச்சயம்... பயிற்சி மருத்துவ படிப்பை முடிக்காவிட்டால், என் கல்வித்தகுதி பிளஸ் 2 தானே...இவனை இப்போது திருமணம் செய்து கொண்டால், என் தோழிகளுடன் நான் செய்து கொண்ட சபதம் என்னாவது... திருமணத்திற்கு பின் குழந்தை பிறந்து விட்டால், அதை கவனிப்பேனா அல்லது மேற்படிப்பை படிக்க போவேனா?திருமணத்திற்கு பின் மீண்டும் பயிற்சி மருத்துவராக போனால், ஒட்டு மொத்த கல்லுாரியும் கேலியும், கிண்டலும் செய்யுமே...'ஓராண்டு கழித்து திருமணத்தை பற்றி பரிசீலிப்போம்...' என கூறினால், 'இல்லை இல்லை, இப்போதே திருமணம் செய்து கொள்வோம். ஓராண்டு இடைவெளியில் இருதரப்பும் மனம் மாற வாய்ப்பிருக்கிறது...' என்கிறான்.அவனது அவசரத்துக்கு என்ன அர்த்தம்... நான் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை, நீங்கள் தான் கூற வேண்டும், அம்மா.— இப்படிக்கு,அன்பு மகள்.அன்பு மகளுக்கு— நீயும், உன், 'தசாவதாரம் கேர்ள்சும்' போட்ட சபதம், கவைக்கு உதவாதது. 'கடல் வற்றினவுடன் கருவாடு தின்போம்...' என, காத்திருப்பதற்கு சமம். அர்த்தப்பூர்வமான திருமணம் எப்போதும், லட்சியத்துக்கு குறுக்கே நிற்காது; லட்சியம் நிறைவேறவே உதவும்* இப்போதைய ஆண்கள், 'மனைவியும் படிக்கட்டும், வேலைக்கு போகட்டும். இரட்டை சம்பளம் வந்தால் தான், குடும்பத்தை பொருளாதார சிக்கல் இல்லாமல் நடத்த முடியும்...' என, நம்புகின்றனர். ஆகவே, பெருந்தன்மையாக இல்லாவிட்டாலும், சுயநலத்திற்காவது வருங்கால கணவன், உன்னை படிக்க வைப்பான்* திருமணம் முடிந்து ஓராண்டிற்காவது, கர்ப்பம் ஆகாமல் தவிர். பயிற்சி மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடி. 'நீட்' தேர்வுக்கு தயாராகு. தேர்வில் நல்ல மதிப்பெண் பெறு. கணவன் பணிபுரியும் கல்லுாரியிலோ அல்லது அதே ஊரிலுள்ள வேறொரு பல் மருத்துவக் கல்லுாரியிலோ, முதுகலை பல் மருத்துவம் படிக்கலாம், நீ* திருமணத்திற்கு பின் கல்லுாரி சென்றால், தோழிகள் கிண்டல் செய்வர் என, எழுதியிருந்தாய். கிண்டல் செய்தால் ரசி. கிண்டல் எல்லை மீறினால், 'திருமணம் செய்து கொள்வது, என் தனிப்பட்ட விருப்பமும், உரிமையும். யாரும் கிண்டல் செய்து, என் மனதை காயப்படுத்தாதீர்கள்...' எனக்கூறு* திருமணத்திற்கு பின், இரு பெண் குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்கியபடியே, உன் அம்மா, அரசு பணிக்கு செல்லவில்லையா... அந்த நுட்பத்தை, அவரிடமிருந்து கற்றுக்கொள். உனக்கு குழந்தை பிறந்த ஆறு மாதத்திலிருந்து, மூன்று வயது வரை, தன் பராமரிப்பில் வைத்து வளர்க்க, மாமியார் தயாரா என்பதை, கேட்டு தெரிந்து கொள்* நான் ஒரு யோசனை கூறுவேன்... நீ கோபித்து கொள்ளக் கூடாது. நீ முதலில் பயிற்சி மருத்துவ படிப்பை முடித்து, இளங்கலை பல் மருத்துவ பட்டத்தை பெறு. கணவன் பணிபுரியும் ஊரிலேயே, எதாவது ஒரு சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பை முடிநீயும், கணவனும் சேர்ந்து, 'கிளினிக்' ஆரம்பியுங்கள். காலை, 9:00 மணியிலிருந்து பகல், 1:00 மணி; மாலை, 3:00 - 5:00 மணி வரை, 'கிளினிக்'கை, நீ பார். மாலை, 5:00 முதல், இரவு, 9:00 மணி வரை, விரிவுரை பணி முடித்து விட்டு வரும் கணவன், 'கிளினிக்'கை கவனிக்கட்டும்வெறும் இளங்கலை பல் மருத்துவம் முடித்துவிட்டு, மிக சிறப்பாக, 'கிளினிக்'கை நிர்வகிக்கும் பெண்களை பார்த்துள்ளேன். பல் மருத்துவருக்கு மதிப்பெண்ணை விட, கைவேலைதான் முக்கியம். தினம், 10 நோயாளி வந்தாலே, உங்கள், 'கிளினிக்' வெற்றியடைந்து விட்டது என அர்த்தம்கணவனின், பி.ஹெச்.டி., படிப்புக்கு உதவு. 'டெண்டல் சேர்' உள்ள, 'கிளினிக்'கை, வங்கிக்கடன் பெற்று ஆரம்பித்து, பெரிய வெற்றி பெறலாம். பொதுவாக, ஆண்களை விட பெண்களே சிறந்த பல் மருத்துவர்களாக பிரகாசிக்கின்றனர்* 'டெண்டல் கிளினிக்' வெற்றிபெற, குறைந்தபட்சம் ஓராண்டும், அதிகபட்சம் மூன்றாண்டும் ஆகும். இந்த மூன்றாண்டு இடைவெளியில், கணவன், பகுதி நேர, பி.ஹெச்.டி., முடித்து விடுவார். அவரது, பி.ஹெச்.டி., படிப்பு, பதவி உயர்வு கிடைக்க பெரிதும் உதவும்* கணவனுடன் கலந்தாலோசி. முதுகலை பல் மருத்துவம் படிக்கப் போகிறாயா அல்லது பகல் பொழுது, 'கிளினிக்' கவனிக்க போகிறாயா... கூட்டு முடிவு எடுங்கள்* 'கிளினிக்'கை வைக்கும் போது, ஏனோதானோ மனநிலையில் இருக்காதீர்கள். 'நம்பர் ஒன் கிளினிக்'காக மாற்ற வேண்டும். எந்த பல் பிரச்னையுடன் நோயாளி வந்தாலும், குணமாகி போக வேண்டும். பணக்காரர்களிடம் அதிக கட்டணமும், ஏழைகளிடம் குறைந்த கட்டணமும் கேட்டு பெறுங்கள். மிகச்சிறந்த பல் மருத்துவ தம்பதியாக திகழ வாழ்த்துகிறேன். எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன் மகளே!— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.