உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா —என் வயது: 32. எனக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. கடைகளுக்கு விளம்பர போர்டு வரையும் பணியை செய்து வருகிறார், கணவர். எங்களுக்கு ஆறு வயதில் மகனும், நான்கு வயதில் மகளும் இருக்கின்றனர்.எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பத்தார் குடியிருக்கின்றனர். அதன் குடும்ப தலைவர், சவுதி அரேபியாவில், 25 ஆண்டுகள் பணிபுரிந்து, 10 ஆண்டுகளுக்கு முன், இந்தியா திரும்பினார். அவருக்கு, மனைவியும், மூன்று குழந்தைகளும் இருந்தனர்.மூத்த மகள், நர்சிங் முடித்து, தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார். அவருக்கு, ஒரு இன்ஜினியரை திருமணம் செய்து வைத்தனர். இன்ஜினியர் ஆண்மை இல்லாதவர் எனக்கூறி, திருமணமான மறுநாளே, பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டாள். குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, விவாகரத்தும் பெற்றாள்.இரண்டாவது மகளுக்கு, 32 வயதாகிறது. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்து, வீட்டில் இருக்கிறாள். அவளும், நானும் உயிர் தோழிகள்.மூன்றாவதாக பிறந்தவன், மகன். அவனை டாக்டருக்கு படிக்க வைத்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன், ஒரு சாலை விபத்தில், அவன் இறந்து போனான்.ஒரே மகன், இறந்த சோகத்தில் வீடு மூழ்கியது. சோகத்தின் காரணமாக, மூத்த மகளுக்கு மறுமணம் செய்து வைக்கவோ, இளைய மகளுக்கு, காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்கவோ மறந்தனர், பெற்றோர். 'தம்பி இறந்த துக்கத்தை மறந்து, நீயும், உன் அக்காவும் எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?' என கேட்டால், 'எனக்கு கல்யாணமே தேவையில்லை. காலம் பூராவும் அம்மாவுடன் கழித்து விடுவேன்...' என்பாள்.ஒருநாள் துணிந்து, தோழியின் பெற்றோரிடம் பேசினேன். 'உங்களுக்கு பின், மகள்களின் நிலை என்னாகும் என யோசித்தீர்களா... முதலில், உங்க மூத்த மகளுக்கு மறுமணம் செய்து வைப்போம். அடுத்து, இளைய மகளுக்கு...' என்று கூறினேன்.அவர்களின் மனதை மாற்றி, 'மேட்ரிமோனியலில்' மூத்த மகளுக்கு, வரன் தேடி விளம்பரம் கொடுத்தேன். முதலிரவு அன்றே காதலனுடன் ஓடிப்போன, மனைவியை விவாகரத்து செய்த வரன் கிடைத்தார். நானே முன் நின்று பேசி, திருமணமும் நடத்தி முடித்தேன். மூத்தவளுக்கு திருமணமான மூன்றாவது மாதத்திலேயே, இளையவளுக்கும் வரன் பார்க்க வற்புறுத்தினேன்.ஓராண்டு சாக்குபோக்கு சொல்லி, வரன் பார்க்காமல் காலம் தாழ்த்தினர். இளையவள், நன்றாக குண்டாக கொழு கொழுவென, ஆனால், அழகாக மூக்கும் முழியுமாக இருப்பாள். குண்டாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மை அவளுக்கு இருந்தது.வரன்களை வேண்டாம் என ஒதுக்கி, மேலும் ஓராண்டை போக்கி விட்டாள். 30 வயதுக்கு மேலானதால், தனக்கெதற்கு திருமணம் என்கிற எண்ணமும் அவளுக்குள் ஓடியிருக்கிறது. 'கொரோனா'வில் மேலும், 10 மாதங்கள் ஓடின.திடீரென, '35 வயது, இரண்டரை ஆண்டுகள் குடித்தனம் நடத்தி, விவாகரத்து பெற்ற, 120 கிலோ குண்டனை திருமணம் செய்து கொள்வேன்...' என, அடம் பிடிக்கிறாள்.சொந்தத்திலேயே, இவளை விட ஆறு மாதம் இளைய, அழகிய மாப்பிள்ளை, திருமணம் செய்து கொள்ள ஒற்றைக்காலில் நிற்கிறான்.'எனக்கு குண்டு மாப்பிள்ளை தான் வேண்டும். வேறு யாரையும் திருமணம் செய்து வைத்தால் தற்கொலை செய்து கொள்வேன்...' என மிரட்டுகிறாள்.நான் எவ்வளவோ எடுத்து கூறியும், தன் முடிவில் பிடிவாதமாக இருக்கிறாள். நீங்கள் தான் அவளுக்கு தகுந்த அறிவுரை கூறி, அவள் மனதை மாற்ற வேண்டும், அக்கா.— இப்படிக்கு, அன்பு மகள்.அன்பு மகளுக்கு —என்னுடைய பதிலை, உன் தோழியிடம் படிக்கக் கொடு.மகளே, சவுக்கியமா... உன் குடும்ப விஷயங்களை, உன் தோழி வெளிப்படையாக எனக்கு எழுதி விட்டாளே என, கோபப்படாதே.உன் அப்பா, தன்னுடைய ஆசாபாசங்களை கருக்கி தான், வெளிநாட்டில், 25 ஆண்டுகள் வேலை செய்திருப்பார். இரண்டு மகள்கள் மீது அன்பை செலுத்தியிருந்தாலும், கூடுதல் அன்பை, மகன் மேல் செலுத்தியிருப்பார்.மகனின் படிப்புக்கு செலுத்திய பல லட்ச ரூபாயும், ஆசை மகனும் கையை விட்டு நிரந்தரமாக போய் விட்டானே என்ற ஆற்றாமையும், அப்பாவுக்குள் இருக்கும்.அதனால் தான், மூத்த மகளின் மறுமணத்தையோ, இளைய மகளின் திருமணத்தையோ யோசிக்காமல் வீட்டுக்குள்ளேயே புதைந்து கிடந்திருக்கிறார். நல்லவேளையாக, குளிர்நிலை துக்கத்தில் ஆழ்ந்த உங்கள் குடும்பத்தை எழுப்ப, பக்கத்து வீட்டுக்காரி முன் வந்திருக்கிறாள்.குண்டாக இருக்கிறோமே என்ற தாழ்வுமனப்பான்மை தேவையில்லை. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடைபயிற்சி மூலம் மேலும் குண்டாவதை தடுக்க பார். இப்போதைய இளம்பெண்களில், 60 சதவீதம் பேர், குண்டாக தான் இருக்கின்றனர்.அழகான, குண்டான பெண்களை, ஆண்கள் விரும்பதான் செய்கின்றனர். ஒல்லியமாக இருக்கும் பெண்களில், 80 சதவீதத்தினர், முதல் குழந்தை பெற்ற பின், குண்டாகி விடுகின்றனர்.உன் தம்பியை, ஏதோ ஒரு காரணத்துக்காக, கடவுள் இந்த பூமியில் பிறக்க வைத்தார்; ஏதோ ஒரு காரணத்துக்காக, அதே கடவுள், அவனை இறக்க வைத்தார். யார் கண்டது, அக்காவின் மகனாகவோ, உன் மகனாகவோ அவன் மறு பிறவி எடுத்தாலும் எடுப்பான்.உன் அக்கா, விவாகரத்து ஆனவள். விவாகரத்து ஆன, ஆணை மணந்து கொண்டாள். நீ, ஏன் விவாகரத்து ஆன ஆணை மணந்து கொள்ள வேண்டும்?குண்டான பெண்ணை, குண்டான ஆண் திருமணம் செய்து கொண்டால், பிரச்னை வராது என்பது, குருட்டு நம்பிக்கை.தெரிந்தே பாழும் கிணற்றில் குதிக்காதே. உன் முடிவை மறுபரிசீலனை செய். தற்கொலை செய்வதாக மிரட்டுவது அபத்தமான செயல்.என்னைக் கேட்டால், உன்னை விட ஆறு மாதம் இளைய, சொந்தக்கார மாப்பிள்ளையையே நீ, திருமணம் செய்து கொள்வது உத்தமமானது.— என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !