அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரி —வயது, 58. எனக்கு திருமணமாகி, 32 ஆண்டுகள் ஆகின்றன. மாமனார், தொழிலதிபர். நான், அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அவருக்கு, என்னை மிகவும் பிடிக்கும்.நானொரு கடின உழைப்பாளி என்பதை உணர்ந்து, எம்.பி.ஏ., கோல்ட் மெடலிஸ்ட் மகளை, எனக்கே கட்டி வைத்து, நிறுவனத்துக்கும் தலைவனாக்கினார்.திருமணமான புதிதில், என் மனைவி மிகவும் வெகுளியாக இருந்தாள். தாம்பத்யம் பற்றி ஒரு புள்ளியும் தெரியாது. ஒரு தேவதை போல் இருப்பாள். எங்களிருவரின் நேரடி கட்டுப்பாட்டில் நிறுவனம், மிக சிறப்பாக வளர்ந்தது.எங்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன். 'ஆஸ்ட்ரோபிஸிக்ஸ்' படித்த மகன், 'இஸ்ரோ'வில் வேலைக்கு சேர்ந்தான். தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து மணந்து கொண்டான்.'பேஷன் டிசைனிங்' படித்த மூத்த மகள், 'பிலிம் இன்ஸ்டியூட்'டில் டைரக் ஷன் படித்த இளைஞனை மணந்து கொண்டாள். மின் பொறியியல் படித்த இரண்டாவது மகள், மின் சாதன பொருட்களை ஏஜன்சி எடுத்து நடத்தும் இளைஞனை காதலித்து, திருமணம் செய்து கொண்டாள்.பத்து ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், மனைவியிடம், 'உலகம் தெரியாமல் இருக்கிறாய். உன்னை, முகநுாலில் நானே இணைக்கிறேன். அதன்பின், நாளும் பொழுதும் உனக்கு எப்படி ஓடுகிறதென்று பார்...' என்றேன். முகநுாலில் உறுப்பினராக்கியதும், சிறிது சிறிதாக மனைவியின் குணாதிசயம் மாற ஆரம்பித்தது.தன், 'செல்பி'களை புதிது புதிதாக, 'போஸ்ட்' செய்ய ஆரம்பித்தாள். எங்களின் மூத்த மருமகன், மனைவியுடன் மிக அன்பாக பழகுவான். 'ஹாய் சீனியர்' என கொஞ்சுவான்.மூத்த மருமகனை, உப்பு மூட்டை துாக்கியபடி, புகைப்படம் போட்டாள். இளைய மருமகனை, இடுப்பில் துாக்கி வைத்து, புகைப்படம் போட்டாள். அதே நேரம், எங்கிருந்து தேடி பிடிப்பாளோ பயங்கரமான ஆபாச ஜோக்குகளை, 'போஸ்டிங்' போடுவாள்.என்னை, 'எங்கள் வீட்டு மக்கு;- எங்க வீட்டு ட்யூப்லைட்; எங்க வீட்டு தெம்மாங்கு;- எங்க வீட்டு சாப்பாட்டு ராமன்...' என, 'கமென்ட்' அடிப்பாள். அவளுக்கு, 5,000 முகநுால் நண்பர்கள். அதில், 4,900 பேர் ஆண் தான். 'இன்பாக்ஸை' திறந்தால், 'ஹாய் டார்லிங் குட்மார்னிங்; ஹாய் ஸ்வீட்டி, குட்நைட்; மாமா ஒர்த் இல்லைன்னா, ஏன் வச்சுக்கிட்டு அவதிப்படுற... அவரை விவாகரத்து பண்ணிட்டு எங்கிட்ட வா. உன்னை சூப்பரா பாத்துக்கிறேன்; நீ, உன் இரண்டு மகள்களை விட அழகா இருக்க... ஐ லவ் யூ...' என, குறுஞ்செய்திகள்.எப்போதுமே மிதமிஞ்சிய, 'மேக் - அப்'பில் தான் திரிவாள்.முகநுாலில், 24 மணி நேரமும் மூழ்கி கிடக்கிறாள். முகநுால் நண்பர்களை, மாதம் இருமுறை வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கிறாள். தொழிலை நானே கவனிக்க வேண்டியதாய் உள்ளது. விருந்துக்கு வரும் முகநுால் நண்பர்கள், என்னை நேரில் பார்த்ததும், 'அந்த டொக்கு மாமா நீங்க தானா?' என வினவுகின்றனர்.மகள்கள் இருவரும், 'அப்பா... பெத்த தாயே, எங்களுக்கு வில்லி ஆயிடுவா போலிருக்கு. அம்மாவை கண்டிச்சு வைங்க. இனிமேலும் அம்மா திருந்தலைன்னா, நாங்க ரெண்டு பேரும் உங்க வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்...' என, கண்ணீர் விட்டு அழுகின்றனர்.இந்த கிளுகிளுப்பு, 'ரொமான்டிக்' கிழவியை எப்படி திருத்துவது என்று, நீங்கள் தான் யோசனை கூற வேண்டும், சகோதரி.— இப்படிக்கு,அன்பு சகோதரன்.அன்பு சகோதரருக்கு —பெண்கள், 'மெனோபாஸ்' காலம் வரைக்கும், அதாவது, 45 வயது வரை, கணவன் அல்லாத பிற ஆண்களுடன் பேச மாட்டார்கள்; சமூகம் எதையெல்லாம் ஆபாசம் என்கிறதோ, அதை ஒரு துளி உச்சரிக்க மாட்டார்கள்; வயதுக்கு வந்த மகனை கூட தொட்டு பேச மாட்டார்கள்.மொத்தத்தில், தன்னைச் சுற்றி ஒரு கோடு போட்டு வாழ்வர். 45 வயதுக்கு பின், கணிசமான பெண்களின் மனோபாவம் மாறி விடும். எல்லா வயது ஆண்களுடனும் சகஜமாய் பழகுவர். ஆண்களை தொட்டு பேசுவர். சமூகம் தடை செய்த ஆபாச விஷயங்களை நொடிக்கு நுாறு வார்த்தைகளாய் பேசி குவிப்பர்.அவர்களை பொறுத்தவரை, இது ஆபத்தற்ற செயல். 45 வயது வரை தடுத்து வைத்திருந்த அனைத்து வகை, 'செக்ஸ்' எண்ணங்களுக்கும் தற்சமய நடவடிக்கை, ஒரு வடிகால்.உங்களின் மனைவி இன்னுமே சொக்கத்தங்கம் தான். உங்களுக்கு, இரண்டு மகள், ஒரு மகனை பெற்றுக் கொடுத்துள்ளாள். மூவருமே சிறப்பான குடும்ப வாழ்க்கையை அமைத்து கொண்டுள்ளனர். உங்களைப் பற்றி, மனைவி முகநுாலில் போடுவது எல்லாம் செல்ல, 'கமென்ட்'கள். அதில், உங்கள் மனைவியின் காதல் வழிந்தோடுகிறது.முகநுாலில், மனைவிக்கு, ஆயிரம், 'குட்மார்னிங், குட்நைட்'டுகள் போடுபவன், திருமணமானதிலிருந்து, அவனது மனைவிக்கு, இதுநாள் வரை ஒருமுறை கூட, 'குட்மார்னிங், குட்நைட்' சொல்லி இருக்க மாட்டான். உங்கள் மனைவி, 56 வயது பெண்மணி என்பது, முகநுால் ஆண்களுக்கு நன்கு தெரியும். சும்மா கிழவியை கொஞ்சி விளையாடுகின்றனர். இந்த கொஞ்சல்களை இருதரப்பும் கண்டு ஏமாந்து விடக்கூடாது.மருமகன்கள் மீது, எதிரினபால் ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். அவர்களை உப்பு மூட்டை துாக்குவதும், இடுப்பில் துாக்கி வைத்துக் கொள்வதும் விகற்பம் இல்லா விஷயங்களே. மனைவியிடம் கீழ்க்கண்ட விஷயங்களை பேசி பாருங்கள்.1. 'தங்க குட்டி... காலை, மாலை மற்றும் இரவு, தலா ஒரு மணி நேரம் ஒதுக்கி, முகநுால் பார் போதும். கம்பெனி விஷயங்களை என்னுடன் சேர்ந்து கவனி...' - என, கூறுங்கள்.2. என்னை பற்றி, 'நெகடிவ் கமென்ட்'கள் போடாதே. அது வெறும் ஜாலிக்காக என்றாலும், நம்மைப் பற்றி தவறான புரிதலை ஏற்படுத்தி விடும்.3. மருமகன்களை மகன்களாய் பாவித்து பழகுகிறாய். தப்பில்லை. அவர்களை துாக்கி வைத்துக் கொள்ளும் புகைப்படங்களை, மகள்களின் கோரிக்கைக்காக, முகநுாலில் போடாதே.4. முகநுாலில் எதை, 'போஸ்ட்' செய்தாலும் சுய தணிக்கை செய்.5. 'குட்மார்னிங், குட்நைட், ஹாய் டார்லிங்' என, குறுஞ்செய்திகளை அனுப்பும், அரை வேக்காடு முகநுால் நண்பர்களை, 'பிளாக்' செய்.6. இளம் தொழில் முனைவோருக்கு தேவைப்படும், 'டிப்ஸ்'களை அள்ளி வழங்கு. 7. முகநுால் நண்பர்களை, ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து, நட்பு பாராட்டு.8. முகநுாலில், மகள்களின் புகைப்படத்தை போடாதே. 9. முகநுால் நண்பர்கள், அலைபேசி வரை என்பதை, தத்துவார்த்தமாக உணர்ந்து, பழகு. 10. முகநுாலில் எல்லையை மீறாதே; எல்லையை மீற விடாதே.முகநுாலின் ராணிக்கு வாழ்த்துகள்! - — என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.