அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 39 வயது பெண். படிப்பு: எம்.ஏ., தனியார் நிறுவனம் ஒன்றில், பொறுப்பான பதவியில் இருக்கிறேன்.நான், எட்டாம் வகுப்பு படிக்கும்போது, என் அப்பா, வேறு ஒரு பெண்ணை மணந்து, எங்களை அனாதையாக விட்டுச் சென்று விட்டார்.பாட்டியின் அரவணைப்பில் தான், நாங்கள் இருந்தோம். பாட்டியும், அம்மாவும் சிறியதாக இட்லி கடை நடத்தி, என்னை படிக்க வைத்தனர்.நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும், கொஞ்சம் வசதியான வீடு வாங்கி குடியேறினோம். பாட்டி இறந்த பின், அக்கம் பக்கம் வீடுகளுக்கும், தனியாக வசிக்கும் முதியோர்களுக்கும் சமையல் செய்து தருவார், என் அம்மா.என் துாரத்து உறவினர் ஒருவர் மூலமாக நல்ல வரன் வர, எனக்கு திருமணம் செய்து வைத்தார், அம்மா.புகுந்த வீட்டுக்கு சென்ற சில நாட்களிலேயே, 'டார்ச்சர்' செய்ய ஆரம்பித்தார், மாமியார்.புது புடவை கட்டி, அலுவலகம் செல்லக் கூடாது; தாலி கயிறு, கம்மல், வளையல் தவிர வேறு எதுவும் அணியக் கூடாது. சிம்பிளாக அலங்காரம் செய்து, அலுவலகம் கிளம்பினாலும், 'யாரை மயக்க இவ்வளவு அலங்காரம்...' என்பார்.அலுவலகத்தில் நான் வகிக்கும் பதவிக்கு, இதெல்லாம் தேவை என்றால், வாய்க்கு வந்தபடி திட்டுவார். மாமியாருக்கு சற்றும் சளைத்தவரல்ல, கணவர். ஏற்கனவே, அப்பா மீதான கோபம் ஒட்டுமொத்த ஆண்கள் மீதும் திரும்பியது.இதற்கிடையில், எனக்கு ஒரு மகள் பிறந்தாள். ஒரு கட்டத்தில் இவர்களது, 'டார்ச்சர்' அதிகமாக, மகளின் எதிர்காலம் கருதி, அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். இப்போது, நான்காம் வகுப்பு படிக்கிறாள், மகள்.அப்பா இல்லாத ஏக்கம், மகளை வாட்டியது. அதிலிருந்து மீட்டெடுக்க, உறவினர் ஒருவரது, 20 வயது மகனை, மேற்படிப்பு படிக்க வைப்பதாக கூறி, கிராமத்திலிருந்து வரவழைத்து, கல்லுாரியில் சேர்த்து விட்டேன்.என் மகளை பள்ளிக்கு கொண்டு விடுவது, மாலை அழைத்து வருவது, வெளியே கூட்டிச் செல்வது என்று பாசமாக இருந்தான், அவன்.ஒருநாள், அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வீடு திரும்ப, அந்த நாய், என் மகளிடம் தப்பாக நடந்து கொள்வதை பார்த்தேன். உடனே, அவனை வீட்டை விட்டு விரட்டியடித்தேன்.பயந்து அலறிய மகளை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.இப்போது, என் மகள், அந்த சம்பவத்தை மறந்து விட்டாலும், முரட்டுத்தனமான ஆண்களை கண்டாலே, பயந்து நடுங்குகிறாள்.ஆண்கள் மீது எனக்கு வெறுப்பு என்றால், மகளுக்கு பயம் ஏற்பட்டு விட்டது.எப்போதும் துரு துருவென்று இருக்கும் அவள், இப்போதெல்லாம் ஒரு மூலையில் அமர்ந்து, வெற்று பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறாள். படிப்பிலும் கவனம் இல்லை. பள்ளியிலும், சரியாக பாடங்களை கவனிப்பதில்லை என்று, இரண்டு முறை அவளது ஆசிரியர் கூறி விட்டார்.அவளை எப்படி பழைய நிலைக்கு கொண்டு வருவது என்று தெரியவில்லை. அம்மா, நீங்கள் தான் ஒரு நல்ல வழியை கூற வேண்டும்.— இப்படிக்கு, உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —ஒரு பெண் மீது, ஒரு ஆண் காட்டும் பொறாமையை விட, ஒரு பெண்ணின் மீது இன்னொரு பெண் காட்டும் பொறாமை மகாவீர்யமானது, கொடூரமானது.மகளின் தனிமையை போக்க கிராமத்திலிருந்து, 20 வயது பையனை கூட்டி வந்து படிக்க வைத்தது, நீ, செய்த மிகப்பெரிய தவறு.அவன் எப்படி உன் மகளின் அப்பா இல்லாத ஏக்கத்தை போக்குவான்?அவனுக்கும், உன் மகளுக்கும் 11 வயது வித்தியாசம். அண்ணன் -- தங்கை பாவனை கூட செல்லுபடி ஆகாது.இனி நீ செய்ய வேண்டியது... -உன் மகளிடம் கனிவாக பேசு. நீ கண்டுபிடிப்பதற்கு முன், அந்த கிராமத்து இளைஞன் உன் மகளிடம் எத்தனை முறை பாலியல் அத்துமீறல்கள் செய்தான் என்பதை கேட்டுத் தெரிந்து கொள். உன் மகளின் உடலில் எதாவது காயங்கள் உள்ளதா என சோதி.பெண் மனநல ஆலோசகரை நீயும், மகளும் அணுகுங்கள்.மன ஆலோசனை முடிந்ததும், மகள் வயது குழந்தைகளுடன், அவளையும் சேர்த்து ஒரு விளையாட்டுக் குழு அமை. நீ கோபமாய் இருக்கும் போது, உன் மகளின் செய்கைகளை ஒழுங்குபடுத்த நினைக்காதே. உன் வார்த்தைகள் மகளை புண்படுத்தாமல் பார்த்துக் கொள். மகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வண்ணம், உன்னை மேம்படுத்திக் கொள். மகளின் அடிப்படை உரிமைகளை சொல்லிக் கொடு. இனிவரும் நாட்களில் பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்து கொள்ள, அவளுக்கு கற்றுத்தா. பாலியல் அத்துமீறல்களை தயங்காமல் புகார் செய். உன் மகளின் புறச்சூழலை மேம்படுத்து.உனக்கும், உன் செல்ல மகளுக்கும் வாழ்த்துகள்!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.