உள்ளூர் செய்திகள்

மவுனமான நேரம்!

திருச்சி எக்ஸ்பிரஸ் கிளம்பியதும், மனைவி ஜானகியிடம் புலம்பலானான் ராஜன். கும்பகோணம் கல்யாண மண்டபத்திலிருந்து துவங்கியவன், இன்னமும் நிறுத்தவில்லை.''ச்சே...எத்தனை வருஷம் கழிச்சு பார்க்கிறேன். பல வருஷம் பழகினவனைப் பார்த்ததும், ஐஸ்ட்... ஒரு ஹலோ சொல்லக் கூட தோணலை பாரு, ஜானகி.''''ப்ச்சு... என்னென்னவோ நடந்து, எப்படியோ முடிஞ்சு போயாச்சு! இனிமே, வருத்தப்பட என்ன இருக்கு. கோபப்பட வேண்டிய நானே சாதாரணமாயிட்டேன். நீங்க எதுக்கு இப்படி வருத்தப் படறீங்க,'' என்றாள் ஜானகி.''அவ சைடுல தப்பு இருக்கு; அதுதான் அவ பேசலை.''''அடடா... விடுங்களேன். பெண்கள்ன்னா அப்படித்தான் இருப்பாங்க. இதுக்குப் போயி இத்தனை பேசுறீங்க...''''இல்லடி...ஒரு காலத்துல, அவளும், நானும் எவ்வளவு, 'க்ளோஸ்' தெரியுமா! திருவாரூர் பேபி தியேட்டர்ல ஆரம்பிச்சு, தியாகராஜர் கோவில், மடப்புரம் வளாகம் வரை, எத்தனை எத்தனை ஞாபகங்கள், நினைவுகள். 'என்ன நல்லா இருக்கியா, எப்படி இருக்கன்னு' ஒரு வார்த்தை, அவ்ளோ தான்! பட், அவ என்னை யாருன்னே கண்டுக்கவே இல்லை; கண்டும் காணாதது போல போனா பாரு அப்பத்தான் புரிஞ்சுது...''''என்ன புரிஞ்சுது?''''ஹும், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்ன்னு புரிஞ்சுது. ஆசைப்பட்டு பழகி, என்னோட நல்லா சுத்திட்டு, அப்பா பேச்சை கேட்டு, என்னை அம்போன்னு விட்டுட்டு போனாள்ல. அது தப்புன்னு, அவளுக்கே தெரியுது. அதான் பேச வாய் வரலை.''கடுப்பானாள் ஜானகி.''த்ஸ். கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்ல ஆரம்பிச்சது... இன்னும் நிறுத்த மனமில்லையா... போதும். சிதம்பரம் வந்துடுச்சு தூங்குங்க.''அமைதியானான் ராஜன் ; ஹையர் பெர்த்தில், ஏறி படுத்துக் கொண்டான். ஜானகிக்குள் பல்வேறு யோசனைகள் பரவின.உறவுக்காரர் திருமணத்திற்காக சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு வந்த போதே, கணவர் ராஜனுக்கு, ஒரே குஷி. சொந்த ஊருக்கு வந்ததால் இருக்கும் என நினைத்தாள். எசகு பிசகாக வந்த இடத்தில் ராஜன், அவன் முன்னாள் காதலியை சந்தித்தது தான் வம்பா போயிற்று. ராஜன், அந்த பெண்ணை பார்த்தாலும், அவள், அவனிடம் பேசவும் இல்லை. ஏன்... கண்டு கொள்ளவே இல்லை.அதனால் தான், இத்தனை புலம்புகிறான்.திருமணமான ஓரிரு மாதங்களிலேயே, ராஜன் தன் முன்னாள் காதல் கதையை, ஜானகியிடம் சொல்லி விட்டான். திருவாரூரில் படித்த காலத்தில் காதலித்ததையும், காதலியின் தகப்பனார் மறுத்ததால், காதலுக்கு காதலி தலை முழுகியதையும், தாடி வளர்த்து திரிந்தது, பின், காலப் போக்கில், அவளை மறந்து, ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, ஜானகியை மணந்ததென எல்லாமும் சொல்லியிருந்தான்.முடிந்த கதையை எதற்கு கிளற வேண்டுமென, ஜானகியும் பெரிதுபடுத்தவில்லை. ராஜன் தான் அவ்வப்போது பேசுவான் அது பற்றி. இன்று, அந்த முன்னாள் காதலியைப் பார்த்ததும் சும்மாவா இருப்பான்...ரயில் விழுப்புரத்தை நெருங்கியிருந்தது. காபி, டீ எல்லாம் வண்டிக்குள்ளே வியாபாரமாகத் துவங்கியிருந்தன. ராஜன் எழுந்து காபி வாங்கி, ஜானகிக்கு கொடுத்துவிட்டு, தானும் குடித்த பின், ஜன்னலோர இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான்.ஜானகி மெல்ல ராஜனைக் கேட்டாள்.''ஏங்க...இப்ப கொஞ்சம் நார்மலா ஆயிட்டீங்களா... புலம்பிக்கிட்டு இருந்தீங்களே...''''ஆங்... அதை விடு. அதெல்லாம் மறக்கற விஷயமா? பாதில விட்டுட்டுப் போனவளை, பத்து வருஷம் கழிச்சு, கும்பகோணத்துல பார்க்கறது சரியான காமெடி.''மெல்லிய குரலில் பேசினாள் ஜானகி .''உங்களுக்கு அது காமெடி; எனக்கு டிராஜடிங்க.''''என்ன சொல்ற?''''சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க. ஆனாலும், மறைக்க வேணாம்ன்னு சொல்லிடுறேன். எந்தக் கல்யாணத்துல, உங்க முன்னாள் காதலியை சந்திச்சீங்களோ, அதே கல்யாணத்துல என்னை காதலிச்சவனை, நானும் பார்த்தேன். இது எப்பேர்ப்பட்ட டிராஜடி பாருங்க.''''வாட்! உனக்கும் காதல் தோல்வியா?''''பெரிசா ஒண்ணுமில்லங்க. என்னை காதலிக்கறேன்னு பாபநாசத்துல, நான் படிச்சப்ப, லவ் லெட்டர் கொடுத்தான். ரெண்டு வருஷம், என் பின்னாடியே அலைஞ்சான். நான் ஒத்துக்கவே இல்லை. என் அப்பா கிட்ட பேசுன்னு சொல்லிட்டு ஓடிடுவேன். அப்படியே முடிஞ்சிடுச்சி அது.''''அப்படியா...கல்யாணத்துல அவனோட பேசினியா...அவன் உன்கிட்ட பேச முயற்சித்தானா?''''சேச்சே... அதெல்லாம் முடிஞ்சு எவ்ளோ வருஷமாச்சு. யாருக்கு நினைப்பிருக்கும். ஏதோ, நீங்க காமெடின்னு ‌சொல்ல, நான் ரைமிங்கா என்னோடதைச் சொன்னேன்.''''சரி...சரி அதையெல்லாம் யோசிக்காதே ஜானகி. குழந்தை எழுந்துக்கப் போறான்... தூங்கு.''''சரிங்க,'' என்று தூங்க ஆரம்பித்தாள்.ரயில் சென்னையை வந்தடைந்தது.அவரவர் வேலை, அன்றாட வாழ்க்கை என, இருவரும் பிசியாகி விட்டனர். கல்யாணத்தை பற்றி விசாரித்த மாமியார், மாமனாருக்கு கதை சொல்லவே ஜானகிக்கு நேரம் போதவில்லை.குழந்தையை, பள்ளியில் கொண்டு விட்டு, அழைத்து வர, என, நாள் முழுக்க சரியாயிருந்தது.மறுநாள் - ராஜன் வழக்கத்திற்கு மாறாக சற்று சீக்கிரமே ஆபீசிலிருந்து வந்தான். முகம் சற்று வாடியிருந்தது.''இந்தாங்க...காபி.'' ''ம்ம்... ஜானகி மெரினா பீச் வரை போயிட்டு வரலாமா?''''இப்ப எதுக்கு மெரினா பீச்! குழந்தை அங்க விளையாடிட்டு வந்தா...வீட்டுல படிக்க மாட்டான்?''''குழந்தை அப்பா, அம்மாகிட்ட இருக்கட்டும். நாம மட்டும் போய்ட்டு வரலாம். சீக்கிரம் கிளம்பு.''பேசாமல் கிளம்பினாள் ஜானகி. அமைதியாய் வண்டியோட்டினான். காமராஜர் சாலையில் திரும்பி, சிவாஜி சிலை அருகே வளைந்து மணலோரம் அமர்ந்தனர்.ராஜன் கேட்டான்.'' நீ காதலிச்ச கதையெல்லாம், இதற்கு முன் நீ சொன்னதில்லையே... ரயில்லே வரும் போது எதுக்கு திடீர்ன்னு சொன்ன... அவன் உன் கிட்ட ஏதாவது பேசினானா?''சிரித்தாள் ஜானகி; நிதானமாய் புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தாள்...''இதுதான், இதுதான் ஆம்பிளைங்க வீக்னஸ், பயம். ஆம்பிளைங்க பயத்தை பற்றி உங்க எக்ஸ் லவ்வருக்கு தெரிஞ்சிருக்கும். அதனால் தான், உங்ககிட்ட பேசலைன்னு புரிய வைக்க தான் நேற்று அப்படிச் சொன்னேன்...''பொதுவா ஆம்பிளைங்களுக்கு, தங்களோட முன்னாள் காதல் கதை, லீலை பத்தி மனைவிகிட்ட, அதுவும், கொஞ்சம் விட்டு கொடுத்து போகும் குணமுள்ள மனைவி கிட்ட பேசறது ஒருவகை ஈகோ! என் பின்னாடி எத்தனை பேர் சுத்தினாங்கன்ற பெருமையை காட்டிக்கிற சந்தோஷம்...''அதே அவுங்க மனைவி, அவளோட முன்னாள் காதல் கதையைச் சொல்லிட்டா போதும்... அடுத்த நிமிஷம் சந்தேகம், கோபம், பயம் எல்லாம் வந்திடும். அடுத்தது, இப்ப நீங்க கேட்டா மாதிரி ஆரம்பிப்பாங்க...''கவலைப்படாதீங்க... எனக்கு எந்த முன்னாள் காதலனும் கிடையாது; கதையும் கிடையாது. சும்மா சொன்னேன்...''உங்ககிட்ட உங்க எக்ஸ் லவ்வர் பேசியிருந்தா... நீங்க அப்படியே ஓவரா வழிஞ்சிருப்பீங்க... பேசியிருப்பீங்க. பேச்சிலயொ, பேசற விதத்துலயோ குஷியா இருந்திருப்பீங்க. அதை, அவங்க புருஷன் பார்த்திருப்பார். அவங்களை வீட்டுல ‌‌போய், இப்ப நீங்க கேட்ட மாதிரி ‌கேட்டிருப்பார். அப்படிக் கேட்கற வம்பு எதுக்குன்னு, உங்க எக்ஸ் ‌பேசாம போயிருப்பாங்க... இப்ப புரியுதா!''உங்களுக்கு பேசணும்ன்னு ஆசையிருக்கிற மாதிரி, பேசாம இருக்கறதுக்கும் அவங்களுக்கு காரணம் இருக்கும்ன்னு புரிஞ்சுக்கங்க. அனாவசியமா முடிஞ்ச கதையை பேசி, இப்ப இருக்கற வாழ்க்கையில குழப்பத்தை உருவாக்கிக்காதீங்க, ஓ.கே.,''''ஹி...ஹி...எனக்கு, உன்னைத் தெரியாதாடி ஜானகி,'' என்று வழிந்தான் ராஜன்.***ச. பிரசன்னா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !