உள்ளூர் செய்திகள்

சாண்டோ சின்னப்பா தேவர் (20)

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —அன்று வாகினி ஸ்டுடியோவில் திருவிழாக் கூட்டம். ஆயிரக்கணக்கான துணை நடிகர்களும், சினிமா புள்ளிகளும் வாரியாரைப் பார்க்க ஆர்வமாகத் திரண்டு வந்திருந்தனர். கேமரா ஓட ஆரம்பித்தது. வாரியார் வழக்கம் போல்மருவும் அடியார்கள்மனதில் விளையாடும்மரகத மயூரப் பெருமான்குழந்தை வேலன்கருத மலையானே கார்அமர் பெற்ற மருதமலைவேலவனை வாழ்த்து!- என்ற வரிகளை பாடி, அதற்கு விளக்கம் கூற முற்பட்டார். அப்போது, அவர் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்த தேவர், அவர் பாதங்களைப் பற்றி கதறினார்.'கட் கட்...' என்றார் இயக்குனர் திருமுகம்.தேவர் அப்படி உணர்ச்சி வசப்படுவார் என்று வாரியார் கனவில் கூட நினைக்கவில்லை; பின், அன்றைய ஷூட்டிங் தொடர்ந்தது.மறுநாள் வாரியாரைக் காணவில்லை. அலறியடித்து, வாரியார் வீட்டுக்கு ஓடினார் தேவர். 'என்ன சாமி புறப்படலயா... என் பட ஷூட்டிங் எக்காரணத்தைக் கொண்டும் கேன்சல் ஆகாது; எம்.ஜி.ஆர்., உட்பட எல்லாரும், 7:00 மணிக்கே தயாரா நிப்பாங்க...' என்றார்.பதில் பேசாமல் காகிதம் ஒன்றை நீட்டினார் வாரியார்.கோபிசெட்டிபாளையத்திலிருந்து வந்திருந்த கடிதம் அது:இதுவரை உங்களால் தேவருக்கு எவ்வளவு பணம் நஷ்டமாகி இருக்கிறதோ, அதை நான் தருகிறேன். நீங்கள் அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தவும்...- என்று எழுதப்பட்டிருந்தது.இதைப் படித்ததும், தேவருக்கு ரத்த அழுத்தம் எகிறியது. 'தான் பிறந்த பூமியிலிருந்து எதிர்ப்பா... எம்.ஜி.ஆர்., இல்லாமல், தேவர் பிலிம்ஸ் தயாரிக்காமல், தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூலமாக, என்னால், நூறு நாள் படங்களை கொடுக்க முடியும் என்று நிரூபித்தாக வேண்டும்...' என்று நினைத்தார். தேவர் எடுத்த, அக்கா தங்கை படம் ஏற்கனவே, அதற்கு பிள்ளையார் சுழிப் போட்டு விட்டது. ஜெய்சங்கர் நடித்தாலும், படம் நூறு நாள் ஓடும் என்று காட்டியாகி விட்டது. துணைவன் படம் எம்.ஜி.ஆர்., படங்களுக்கு நிகரான வசூலைப் பெறும் என்று நம்பினார்.'முருகா... வாரியாரால் என் ஆசையில் மண் விழப் போகிறதா... மவனே... உன்னைச் சும்மா விட மாட்டேன். ஒழுங்கு மரியாதையா வாரியார் மனசுல பூந்து, அவரை வாகினிக்கு அனுப்பி வை; இல்லன்னா நீ, எங்கிட்ட தாராந்து பூடுவே!'மறுபடியும், கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லி, வாரியாரை அழைத்தார் தேவர். நீண்ட யோசனைக்குப் பின், புறப்பட்டார் வாரியார்.'பக்திப் படத்தில் ஒரு திருப்பம்...' என்று குமுதம் இதழில் பாராட்டி, இரண்டு பக்கம் விமர்சனம் வந்தது. துணைவன் படம் நூறு நாட்கள் ஓடி, வசூலில் தூள் கிளப்பியது. சிக்கனத்துக்கு ஒரு சின்னப்பா தேவர் என்பர்; ஆனால், துணைவன் படத்துக்கு நூறாவது நாள் விழா கொண்டாடி, ஷீல்டும் கொடுத்தார்.ஒரு படம் ஓஹோ என்று ஓடினால், அதை ரீ - மேக் செய்ய, தயாரிப்பாளர்கள் அவசரம் காட்டுவர். குறைந்தபட்சம், 'டப்'பிங்காவது செய்ய வேண்டும் என நினைப்பர். ஆனால், துணைவன் படத்துக்கு, இவை இரண்டையுமே செய்யவில்லை தேவர். இத்தனைக்கும், அப்போது, அவர் இந்திப் பட உலகில் புகுந்த நேரம்.இந்தியில், கதாநாயகனை, கிருஷ்ண பக்தராக மாற்றச் சொன்னார்கள்; மறுத்து விட்டார் தேவர்.'நான் கும்புடுற முருகனுக்கு, நானே ஒரு சோதனை வெச்சேன்; அதில் அவன் ஜெயிச்சி, என்னையும் மனங்குளிர வெச்சான். பணம், காசை எப்படியும் சம்பாதிக்கலாம்... கடவுளோட அருள், நமக்குக் கிடைக்கிறது கஷ்டம். முருகன் தமிழ் கடவுள்; பணத்துக்காக முருகனைத் தூக்கிட்டு, நீங்க சொல்ற மாதிரி கிருஷ்ணனைப் போட்டு, 'ஸ்ரீ கிருஷ்ண லீலை' எடுக்க மாட்டேன். எனக்கு ஒரே கடவுள்; அவன் மருதமலை முருகன். அவன் பெருமையைச் சொல்ற படத்தை மட்டுமே, என்னால எடுக்க முடியும்...' என்றார் தேவர்.'நீங்க ரீ - மேக் செய்யலன்னா பரவாயில்ல. எங்களுக்கு தெலுங்கு மற்றும் இந்தியில படமெடுக்கிற உரிமையைக் கொடுத்தா போதும்...' என்றனர்; ஒப்புக் கொண்டார் தேவர். தெலுங்கில் என்.டி.ராமாராவும், இந்தியில் ராஜேஷ் கன்னாவும் நடித்தனர்; அவர்கள், தேவரது முடிவே சரி என்று புரிந்து கொண்டனர். துணைவன் மற்ற மொழிகளில் படுதோல்வி. 'கலாசார வேறுபாடு காரணம்...' என்றனர் கோலிவுட் சினிமா பண்டிதர்கள்.தான் வணங்கும் மருதமலை, மருதாசல மூர்த்தி மற்றும் தன் தந்தையின் பெயரான அய்யாவு சின்னப்பா தேவர் என இரண்டு பெயர்களின் முன் எழுத்தை, ஆங்கிலத்தில், சுருக்கமாக, எம்.எம்.ஏ., என, தனக்கு, 'இன்ஷியலாக' அமைத்துக் கொண்டவர் தேவர்.மருதமலையை, ஏழாவது படைவீடாக உயர்த்துவதே தன் லட்சியமாக கருதி, தேவர் பிலிம்ஸ் தயாரிப்புகளில் கிடைத்த லாபத்தில், முதல் பங்கை, மருதமலை முருகனுக்காக செலவழித்தார். தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூலம் பெற்ற வருவாயை, அறுபடை வீடுகள் மற்றும் சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலுக்காக வாரி வழங்கினார்.தன் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், கிருத்திகை மற்றும் தமிழ் வருடம் பிறக்கும் ஏப்.,14லிலும் மருதமலை முருகன் கோவிலிலேயே தன் பொழுதை கழித்தார்.தன், 60வது பிறந்தநாளின் போது, இரவு மருதமலையில் தங்கியிருந்தார் தேவர். மறுநாள், அவருக்கு சென்னையில் மணி விழா நடைபெறவிருந்தது. ஆனால், 'மழைத் துளிகளை விழ வைத்து, முருகன் என்னை ஆசிர்வதித்தால் தான், மருதமலையை விட்டு இறங்குவேன்...' என அடம்பிடித்து, கோவிலிலேயே உட்கார்ந்திருந்தார் தேவர். ஆனி மாதம், வறண்ட வானிலையில் மழை எப்படி பெய்யும்? அவருடன் வந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை; ஏதேதோ சொல்லிப் பார்த்தனர். ஆனால், பிடிவாதமாக, 'நான் இதுவரை முருகன் அடிமையா வாழ்ந்தது சத்தியம்ன்னா, இப்ப மழை பெய்யுமடா...' என்று உணர்ச்சி வசப்பட்டார் தேவர்.சிறிது நேரத்தில், மேகம் இருண்டு, மழை பொழிய ஆரம்பித்தது.ஆறுமுகனோடு அவர் காட்டிய அன்யோன்யம், பல சமயங்களில் சிரிப்பை ஏற்படுத்தும்.'டேய் முருகா... கல்லெடுத்து அடிப்பேன்; உடனே, சூரியன வர சொல்லு...' என்பார்.ஒவ்வொரு வாரமும், பழனி தண்டாயுதபாணி அணிந்த கோவணங்கள், தேவருக்கு வந்து சேரும்; காலையில் எழுந்து, பல் துலக்கியதுமே அவரும், அவர் மனைவி மாரிமுத்தம்மாள் மற்றும் மகன் தண்டபாணியும் முருகனின் கவுபீனங்களை, தூய நீரில் தோய்த்தெடுத்து, அதை, புனித தீர்த்தமாக குடிப்பர். அத்துடன், அத்துணிகளை பயபக்தியுடன் பாதுகாத்து வைப்பார் தேவர்.ஒருமுறை, தேவரின் வீட்டை, வருமான வரி இலாகாவினர் சோதனை செய்தனர். அவர்களின் கைகளில் சிக்கியதெல்லாம், பழனி பஞ்சாமிர்தம், அபிஷேக சந்தனம், விபூதிப் பொட்டலங்கள் மற்றும் முருகனின் கோவணங்கள்!அரண்டு விட்டனர் அதிகாரிகள்.தன் சொந்த ஊரான, கோவை ராமநாதபுரத்தில், வீடு கட்ட எண்ணிய தேவர், வீட்டிலிருந்து பார்த்தால், மருதமலையான் சன்னிதி தெரிய வேண்டும் என்பதற்காகவே, நான்கு மாடிகள் எழுப்பினார்.— தொடரும். நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,சென்னை.பா. தீனதயாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !