உள்ளூர் செய்திகள்

சாண்டோ சின்னப்பா தேவர்! (14)

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'எம்.ஜி.ஆர்., கால்ஷீட்டை மொத்தமா கொடுத்திட்டாரு; வர்ற பொங்கலுக்கு படம் ரிலீஸ். சரோஜாதேவி கால்ஷீட் கிடைக்குமா, கிடைக்காதா...' என்று கறாராக கேட்டார் தேவர்.'இப்படிப் பேசினா எம் பொண்ணு உங்க படத்துல நடிக்காது...' என்று பட்டென்று சொன்னார் சரோஜாதேவியின் அம்மா ருத்ரம்மா!உடனே, தேவருக்கும் கோபம் வந்து, 'உங்க மக என் படத்துல நடிக்கறதா, வேணாமான்னு நீங்க மட்டுமில்ல, நானும் முடிவு செய்யணும்...' என்று எரிமலையாக வெடித்து, தன் அங்க வஸ்திரத்தை இழுத்துப் போர்த்தியபடி வெளியேறினார்.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரோஜாதேவி, ஓடி வந்து தேவரை தடுத்தார். அதை சட்டை செய்யாமல் கிளம்பியவருக்கு பழைய நினைவுகள் வந்தன.அப்போது, அவர், நீலமலைத் திருடன் தயாரித்துக் கொண்டிருந்த சமயம். அதில், ஒரு நடனக் காட்சி. ஏற்கனவே நாட்டியம் அறிந்த அஞ்சலிதேவியும், ஈ.வி.சரோஜாவும் அதில் ஒப்பந்தம் ஆகியிருந்தனர். அதனால், அந்நடனக் காட்சியில், 'யாராவது குரூப் டான்சர் ஆடட்டும்...' என்று கூறி விட்டார் தேவர். அந்த வாய்ப்புக்காக, மகளை அழைத்து வந்திருந்தார் ருத்ரம்மா.தங்கமலை ரகசியம் மற்றும் பூலோக ரம்பை போன்ற பிரபலமான படங்களில் ஆடி, ஓரளவு மக்களுக்கு அறிமுகமாயிருந்தார் சரோஜாதேவி. அதனால், அவருக்கு சம்பளமாக, 300 ரூபாய் தருவதாக கூறினார் தேவர். ருத்ரம்மாவோ, 500 ரூபாய் கேட்டார்; தர முடியாது என்றார் தேவர். பேரம் படியவில்லை; திரும்பிப் போய் விட்டனர்.மகள் பிரபலமாகாத நாளிலேயே, பணமே பிரதானம் என்று நினைத்தவர், இப்போது பிரபலமான பின், உதாசீனப்படுத்தியதில் வியப்பில்லை என நினைத்தார் தேவர்.'எம்.ஜி.ஆரே வந்து வற்புறுத்தினாலும், இனி, சரோஜாதேவி என் படத்தில் நடிக்க மாட்டார்...' என்று திட்டவட்டமாக அறிவித்தார் தேவர்.நீண்ட இடைவெளிக்குப் பின், எம்.ஜி.ஆரும், சாவித்திரியும் நடித்த, பரிசு என்ற படம், 1963ல் தீபாவளி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதனால், வேட்டைக்காரனில் அதே ஜோடியைப் பயன்படுத்த முடிவு செய்தார் தேவர்.வேட்டைக்காரன் படத்தில், சாவித்திரிக்காக காட்சிகள் வலுவூட்டப்பட்டன. அதை, எம்.ஜி.ஆரும் வரவேற்றார். 'மெதுவா மெதுவா தொடலாமா...' என்ற பாடலில் சரோஜாதேவிக்கும் மேலாகவே, கவர்ச்சியாக எம்.ஜி.ஆருடன் ஆடிப் பாடினார் சாவித்திரி. ஆனாலும், தேவருக்கு திருப்தி இல்லை. அப்போது தான், திரையுலகில் தடம் பதிக்க ஆரம்பித்திருந்த நாகேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மனோரமாவுடன் ஒரு காமெடி பாடல் காட்சி வைத்தார். 'சீட்டுக்கட்டு ராஜா...' என்ற அந்த பாடல், பட்டி தொட்டி முதற்கொண்டு எங்கும் பிரபலமானது!எம்.ஜி.ஆரின் புதிய, 'கெட் அப்' அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. சென்னை சித்ரா தியேட்டர் அல்லோலகல்லோலப்பட்டது. திரையிலும், தியேட்டருக்குள்ளேயும் தொப்பிகளாகவே தெரிந்தன.எம்.ஜி.ஆருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர் தேவர். பிரமாண்டமான, 'செட்'களில் அவரது படங்களில், கனவு பாடல் காட்சிகள் வரவே வராது. 'செட்டை எவன்டா பாக்குறான்; அண்ணனைத் தான்டா ரசிக்க வரான்...' என்பார்.வேட்டைக்காரனுக்காக சித்ரா தியேட்டர் வாசலில், ரசிகர்களே காடும், மலையும் சூழ்ந்த அரங்கம் அமைத்தனர். அதில், வேட்டைக்காரன் தோற்றத்தில், எம்.ஜி.ஆருக்கு சிலை வைத்தனர். ஏறக்குறைய ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவானது. தீ அணைப்பு இன்ஜின்களுக்கு மட்டும், 7,000 ரூபாய் கொடுத்தனர்.'வாள் வீச மட்டுமே எம்.ஜி.ஆருக்குத் தெரியும்; அவர் பேன்ட் ஷர்ட் அணிந்து நடித்தால் படம் ஓடாது...' என்ற கருத்து, கோடம்பாக்கத்தில் நிலை பெற்றிருந்தது. அதை மாற்றிக் காட்டி, சமூகப் படங்களிலும் எம்.ஜி.ஆர்., சாதிக்க முடியும் என்று நிரூபித்தார் தேவர்.தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பொற்காலம் என்று கூறத்தக்க அளவு, 1963ல் அவர் நடிப்பில் ஒன்பது படங்கள் வெளிவந்தன. எல்லாம் தேவருடன் இணைந்த பின், ஏற்பட்ட இனிய மாற்றம். எம்.ஜி.ஆரைத் தேடி, மற்ற பட அதிபர்களும் நம்பிக்கையோடு வரத் துவங்கினர்.முக்கியமாக, சிவாஜி கணேசனின் தயாரிப்பாளர்கள் ஜி.என்.வேலுமணி, பி.ஆர்.பந்துலு போன்றோர், எம்.ஜி.ஆரிடம் சரண் புகுந்தனர்; நினைத்ததை முடித்த திருப்தி எம்.ஜி.ஆருக்கு!ஆனால், மீண்டும் தேவர், எம்.ஜி.ஆருக்காகக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை. தேவருக்கு, எம்.ஜி.ஆரோ, எம்.ஜிஆருக்கு தேவரோ, தேவை கிடையாது என்ற அளவு, இருவருமே பிரமாதமாக சினிமாவில் சம்பாதித்தனர்.தேவர் பிலிம்ஸை, எம்.ஜி.ஆருக்காக மட்டுமே நடத்துவது என்று முடிவு செய்து, ஓடிக் கொண்டிருந்தார் தேவர். இந்நிலையில், எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கிடைக்காத போது, அவருக்கு அடுத்த வரிசை கதாநாயகர்களை வைத்து, சின்ன பட்ஜெட்டில் படம் தயாரிப்பதற்காக, 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற புதிய சினிமா கம்பெனியை துவக்கினார்.தாய் சொல்லைத் தட்டாதே முதல், வேட்டைக்காரன் வரை, எம்.ஜி.ஆரை வைத்து அரை டஜன் படங்களை தயாரித்ததால் கிடைத்த லாபத்தில் உருவானது, தண்டாயுதபாணி பிலிம்ஸ்! 'எனக்கு முதல் கடவுள் முருகன்; இரண்டாவது, எம்.ஜி.ஆரே என் கண்கண்ட தெய்வம். அவராலேயே நான் கோடீஸ்வரனானேன்...' என்பார் தேவர்.தன் வாழ்நாளில் ஒரு படத்தையாவது தான் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் தேவர். அதனால், தண்டாயுதபாணி பிலிம்சின் முதல் தயாரிப்பிலேயே, தன்னை இயக்குனராக அறிவித்துக் கொண்டார். அசோகன் கதாநாயகனாக சில படங்களில் தோன்றிய நேரம் அது! தேவர் பிலிம்ஸ் கம்பெனி நடிகரான அசோகனை, தன் முதல் இயக்கத்தில் கதாநாயகனாக்கினார். தேவருக்கு படத்தை இயக்கத் தெரியுமா என்றெல்லாம் அசோகன் கவலைப்படவில்லை. எம்.ஜி.ஆருக்குப் பின், தேவர் தன்னை கதாநாயகனாக்கி விட்டாரே என்று, ஏக குஷியில் இருந்தார். அவருடன் முத்துராமன், சந்திரகாந்தா, நாகேஷ் மற்றும் மனோரமா நடித்தனர்.சென்டிமென்ட் இல்லாமல் தேவர் தும்மக் கூட மாட்டார். தன் முதல் படத்துக்கு, தெய்வத் திருமகள் என்று மங்கலகரமாக பெயர் சூட்டினார். வழக்கமான காளை மாட்டு சண்டை, நாய் சாகசம் எல்லாம் இருந்தன. எப்போதும் கேமராவுக்கு முன் காமெடி செய்யும் நாகேஷ் மனோரமா ஜோடி, தேவரின் இயக்கத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது. படத்தில் நடித்த நகைச்சுவைக் காட்சிகளை விட, தேவரது இயக்கம் படு தமாஷாக இருந்தது. விளைவு, வேட்டைக்காரன் வெற்றிக்கு திருஷ்டி கழித்து விட்டார் தேவர்.'தேவரின் அல்சேஷன் நாய்க்கு, 'முருகா' என்று வாய்விட்டுச் சொல்லத் தெரியாது; மற்றதெல்லாம் தெரியும்...' என்று குமுதம் பத்திரிகையில் விமர்சனம் வந்தது.அடுத்து, தொழிலாளி படத்தில், எங்க வீட்டு பிள்ளையில் நடித்த ரத்னாவை எம்.ஜி.ஆரின் கதாநாயகியாக ஆக்கினார்.தேவருக்கு, கதாநாயகிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மொத்தமாக பதினைந்து கால்ஷீட்டுகள் தருவதுடன், அவர்களது படங்களின் வெற்றி விழாவுக்கு, வெளியூர் போக நேர்ந்தாலும், தேவரின் அனுமதியோடு தான் போக வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.சரோஜாதேவிக்கு அடுத்து தேவிகாவும் பிரபலமாகி இருந்தார். ஆனால், ஆனந்த ஜோதி படத்துடன் தேவிகாவுக்கு, 'குட் பை' சொல்லி விட்டார் எம்.ஜி.ஆர்.,— தொடரும்.நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,சென்னை.பா. தீனதயாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !