இங்கேயும் சில பூக்கம் மலரும்!
''வாசுகி... உனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லயே... அப்புறம், வந்த பின் குத்தம், குறை சொல்லி, அவங்க மனச நோகடிக்கக் கூடாது...''''ரெண்டு பேரும் கலந்து பேசித்தானே இந்த முடிவ எடுத்துருக்கோம்... அப்புறம் எதுக்கு ஆட்சேபிக்கப் போறேன்... நாம சேந்தே போயி, அவங்கள அழைச்சிட்டு வரலாம்...'' என்றாள், என் மனைவி வாசுகி. ''இல்ல... எதுக்கு கேக்குறேன்னா, அழைச்சிட்டு வந்த பின், அவங்க மனசு நோகுற மாதிரி பேசி, ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்துடக்கூடாது பாரு... அதுக்குத் தான்...'' என்றேன்.''நீங்க ஒரு முடிவு எடுத்துட்டீங்க; அப்புறம், என்கிட்ட பேசி, என்னை சம்மதிக்க வச்சீங்க; நானும் மறுத்துப் பேசாம, பரிபூர்ண சம்மதம் சொல்லிட்டேன். பிறகென்ன...''''பாத்தியா... ஏதோ, எனக்கு மட்டும் தான் விருப்பம்; நீ என்னோட கட்டாயத்துக்காக ஒத்துக்குற மாதிரி பேசுறியே... நீயும் மன நிறைவோட சம்மதம்ன்னு சொல்; போயி கூட்டிட்டு வரலாம்; இல்லன்னா வேணாம்...'' என்றேன்.''நான் ஒண்ணும் பழச மறக்கல... நம்மோட குழந்தைகளுக்கும், பெரியவங்களோட துணை வேணும்; அவங்க சொல்ற கதைய கேட்டபடி அவங்க மேலே காலைப்போட்டு தூங்கணும்...'' என்றாள், வாசுகி.''அப்ப, பிள்ளைகளோட மகிழ்ச்சிக்காக தான் அவங்கள கூட்டி வர நினைக்குறே... பிள்ளைக ஏதாவது குறை சொல்லிட்டாங்கன்னா, மறுபடியும் அவங்கள அனுப்பிடுவே அப்படித்தானே...'' ''ஏன் இப்படி எதுக்கெடுத்தாலும் ஏறுக்கு மாறா பேசுறீங்க... நான் தான் சரின்னு ஆயிரம் முறை சொல்லிட்டேன். அவங்க வரட்டும்; அவங்க மனசு கோணாத மாதிரி நானும், என் பிள்ளைகளும் நடந்துக்க தயாரா இருக்கோம். அதிலயும், நம்ம மகன், 'தாத்தா, பாட்டி எப்ப வருவாங்க'ன்னு, தொண தொணத்துக்கிட்டு இருக்கான்,'' என்றாள்.உண்மைதான்... அன்று, பள்ளியிலிருந்து வந்த மகனின் முகம் வாடியிருந்தது. வாசுகி கேட்டதற்கு, 'ஒண்ணுமில்ல'ன்னு மழுப்பினான். திரும்பத் திரும்ப கேட்ட போது, 'அப்பா வந்ததும், சொல்றேன்'னு சொல்லி, வாசலுக்கு ஓடி விட்டான். மாலையில், அலுவலகம் முடிந்து, வீட்டிற்குள் நுழைந்ததும், வேகமாக என்னிடம் வந்தவன், 'அப்பா... எங்களோட தாத்தா, பாட்டி எங்க இருக்காங்க... இன்னிக்கு பள்ளிக்கூடத்துல, 'ஸ்டோரி டெல்லிங்' வகுப்புல எல்லாரும், அவங்க பாட்டி, தாத்தா சொன்னதா, நிறைய கதை சொன்னாங்க. எனக்கு சொல்லத் தெரியல. உடனே, எல்லா பசங்களும் சிரிச்சாங்க... டீச்சர் என்கிட்ட, 'உனக்கு உங்க தாத்தா, பாட்டி ஒரு கதையும் சொல்லலயா'ன்னு கேட்டாங்க. எனக்கு அவமானமாப் போச்சு...' என்று கூறி அழுதான், மூன்றாம் வகுப்பு படிக்கும், என் மகன்.கூடவே, எல்.கே.ஜி., படிக்கும் மகள், 'அப்பா... தாத்தா, பாட்டி இருந்தா, என்னை தினம் ஸ்கூலுக்கு அழைச்சுட்டு போவாங்க; நான் கேட்டதெல்லாம் வாங்கித் தருவாங்க. நம்ம வீட்ல மட்டும் ஏன் தாத்தா, பாட்டி இல்ல...' என்று, தன் மழலை குரலில் கேட்க, அவள் மன ஏக்கத்தை உணர்ந்து, அப்பா, அம்மாவை அழைத்து வருவது என்று முடிவெடுத்தேன். பின், வாசுகியிடம் கலந்து பேசினேன்.முதலில், 'முடியாது' என, பிடிவாதமாக கூறியவள், பின், மெல்ல ஒத்துக் கொண்டாள்.நான் தான் அப்பா, அம்மாவை எப்படி சம்மதிக்க வைத்து, அழைத்து வருவது என்று யோசித்தேன்.பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி, ஒருவழியாய் அவர்களைச் சம்மதிக்க வைத்தேன். இனி, ஒரு நல்ல நாளில், குடும்பத்துடன் சென்று, அவர்களை அழைத்து வர வேண்டியது தான் என எண்ணிய போது, மனம் மகிழ்ச்சியாய் இருந்தது. இப்போது, மீண்டும் வாசுகியிடம் பேசி உறுதி செய்து கொண்டேன்.ஞாயிற்றுக்கிழமை காலை, குடும்பத்துடன், முதியோர் இல்லம் புறப்பட்டோம். வழியெல்லாம், மகிழ்ச்சியோடு ஏதேதோ பேசியபடி வந்தனர், பிள்ளைகள். முன்னதாகவே, எங்கள் வருகையை, முதியோர் இல்ல மேலாளருக்குத் தெரிவித்து இருந்ததால், வாசலில் வந்து வரவேற்று, அழைத்துச் சென்றார்.'அப்பா... தாத்தா, பாட்டி இங்கயா இருக்காங்க...' கோரஸாக குரல் எழுப்பினர், பிள்ளைகள்.''ஆமாடா செல்லங்களா... உங்க தாத்தா, பாட்டி இங்கே தான் இருக்காங்க; வாங்க அவங்களப் பாக்கலாம்...'' என்றேன்.முதியோர் இல்ல மேலாளர் நேசன், அவருடைய அலுவலக அறையில் எங்களை உட்கார வைத்தார். அங்கே, சுந்தரமும், மீனாட்சியும் உட்கார்ந்திருந்தனர். ஏற்கனவே, எங்களுக்கு அறிமுகமானவர்கள் என்பதால், பரஸ்பரம் புன்னகைத்தோம்.சுந்தரத்தைக் காட்டி, ''குழந்தைகளா... இவர் தான் உங்க தாத்தா,'' என்றார், நேசன்.உடனே, மீனாட்சியின் அருகில் சென்று, ''அப்ப, இவங்க தான் எங்க பாட்டியா,'' என்றவாறு, அவளை அணைத்தாள், என் மகள்.''ஏன் தாத்தா, நீயும், பாட்டியும் எங்க வீட்டுக்கு வராம, இங்கேயே இருக்கீங்க. எங்களுக்கு கத சொல்ல, விளையாட ஆளில்லாம எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா... நீங்க ரெண்டு பேரும் மோசம்; இங்கேயே இருந்துட்டு, எங்களப் பாக்கக்கூட வரல...'' என்றான், மகன்.'இப்பத்தான் நாங்க வந்துடப் போறோமில்ல...' என்று கண்ணிர் மல்க கூறி, குழந்தைகளை அணைத்துக் கொண்டனர்.''இங்கே பாருங்க குழந்தைகளா... உங்க தாத்தா, பாட்டியோட பிரண்ட்ஸ் நிறைய பேர் உள்ளே இருக்காங்க... உங்களப் பாக்க, ஆசையா இருக்காங்க,'' என்று கூறி, முதியவர்கள் இருவரிடமும், ''நீங்க இவங்கள அழைச்சிட்டுப் போயி, உங்க நண்பர்களுக்கு எல்லாம் காட்டுங்க. வாசுகி... நீங்களும் போங்க. இங்கே சில, 'பார்மாலிட்டிஸ்' முடிச்சிட்டு நானும், உங்க கணவரும் வந்திடுறோம். 'லன்ச்' தயாராயிட்டுருக்கு; எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்,'' என்று, அவர்களை உள்ளே அனுப்பி வைத்தார், நேசன். பின், என் கைகளைப் பிடித்து, ''சங்கர்... உண்மையில் நீங்க ரொம்ப உயர்ந்துட்டீங்க... இதுக்கு, ரொம்ப பெரிய மனசு வேணும். அது, உங்க குடும்பத்தில எல்லார்கிட்டேயும் இருக்கு,'' என்றவாறே, சில படிவங்களை நீட்டினார். அதைப் படித்து, கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பியவாறு, ''ஐயா... இதுல பெருமிதப் பட எதுவும் இல்ல; நானும், என் மனைவியும் ஆதரவற்றோர் இல்லத்தில் தான் வளர்ந்தோம்; படிச்சோம்.''பெத்தவங்க பாசம் கிடைக்காம ஏங்கியவங்க, நாங்க. ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளே என்னை நல்லா படிக்க வச்சாங்க. படிப்பு முடிஞ்சதுமே வேலை கிடைச்சது; கை நிறைய சம்பளம். இல்லத்தில் வளர்ந்த வாசுகியை எனக்குக் கட்டி வச்சாங்க. நல்ல மனைவி; நிறைவான குடும்பம்; பாசமான குழந்தைகள்... ஆனா, பெத்தவங்க பாசம் மட்டும் ஏக்கமாகவே இருந்துச்சு. அதான், இப்பவாவது, எங்களுக்கு பெத்தவங்க பாசமும், எங்க பிள்ளைங்களுக்கு தாத்தா, பாட்டி பிரியமும் கிடைக்கட்டுமேன்னு விரும்பினேன். அதுதான் இந்த முடிவு. அதுக்கு, நீங்களும் வழிகாட்டினீங்க...'' என்றேன்.''இருந்தாலும், ஆதரவற்ற ரெண்டு முதியோரை அப்பா, அம்மான்னு சொல்றதுக்கும், பிள்ளைங்ககிட்டே தாத்தா - பாட்டின்னு காட்டுறதுக்கும் ஒரு மனசு வேணுமே...'' என்றார், நேசன்.''இல்ல சார்... எங்களப் பிள்ளைகளா ஏத்துக்குறதுக்கும், எங்க பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டியா இருக்குறதுக்கும் தான் பெருந்தன்மை வேணும். மீனாட்சியம்மாவும், சுந்தரம் அய்யாவும் கணவன், மனைவியா ஒரே வீட்டில இருக்க சம்மதிச்சாங்களே... அதுக்கு எவ்வளவு பெரிய மனசு வேணும்... இனி, எங்க வீடு பாசமும், நேசமும் உள்ள கோவிலா மாறிடும்,'' என்றேன்.''உண்மை தான்; அதோ பாருங்க... உங்க பசங்க இங்க வந்ததோட நினைவா ரோஜாவும், செம்பருத்திச் செடியும் நட்டு வைக்குறாங்க. எல்லாம் உங்க அப்பா, அம்மா ஏற்பாடு தான். உங்க பிள்ளைங்கள பாருங்க... எவ்வளவு மகிழ்ச்சியா இருக்காங்க...'' என்று நேசன் கூற, என்னையும் அறியாமல், கண்களில், ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.இளவல் ஹரிஹரன்இயற்பெயர் : டி.கே.ஹரிஹரன்வயது: 61, கல்வி: எம்.காம்., - பி.எல்., - ஹெ.டி.சி., - ஆர்.பி.பி., ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி. கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே இலக்கிய ஆர்வம் உள்ளவர். இதுவரை, ஏராளமான கவிதைகளும், 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். இடையில், வேலை பளு காரணமாக, தற்காலிகமாக எழுத்துப் பணியை நிறுத்தி, தற்சமயம் பணி ஓய்வு பெற்ற பின், மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார்.இதுவரை, இவர் எழுதிய ஐந்து கவிதைத் தொகுப்புகள், மற்றும் நான்கு ஆன்மிக நூல்கள் வெளிவந்துள்ளன.டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், முதல் முறையாக கலந்து கொண்டதில், முதல் பரிசு பெற்றது குறித்து, மிகவும் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.