சூரியனின் மாமனார்!
மே 5 - சித்ரா பவுர்ணமிசித்திரை மாதம் மட்டும் மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாக இருக்கும் பெருமைக்குரியது. சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தை ஒட்டியே சித்ரா பவுர்ணமி வரும்.ஜோதிட புத்தகங்களில் சித்திரை நட்சத்திரத்துக்குரிய அதிதேவதை, ஸ்வஷ்டா என குறிப்பிடப்பட்டிருக்கும். இவர் வேறு யாருமல்ல, தேவலோக சிற்பியான விஸ்வகர்மா தான். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தைக் கொண்டாடுபவர்கள், விஸ்வகர்மாவையும் வணங்க வேண்டும்.சித்ரா பவுர்ணமி என்றால், சித்திரகுப்தரை வணங்குவதும், ஒரு சாரார் பெருமாளின் அம்சமான கள்ளழகரை வணங்குவதுமான பழக்கம் இருக்கிறது.அன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதன் மூலம், 'எங்கள் பாவங்களை இதோடு தலை முழுகுகிறோம், இனி பாவம் செய்யாத மனதைக் கொடு...' என, சித்ரகுப்தரிடம் வேண்டுதல் வைக்கும் ஒரு நாளாக இருக்கிறது. இத்துடன், இன்று நாமெல்லாம் அனுபவிக்கும் ஒவ்வொரு கைவினை பொருளுக்கும் உரிய கடவுளான விஸ்வகர்மாவையும் மறக்காமல் வணங்க வேண்டும் என்பது, புது தகவல்.குரு பகவானின் சகோதரியான புவனாவுக்கும், பிரபாச மகரிஷிக்கும் பிறந்தவர், விஸ்வகர்மா என்றும், ஒரு சில புராணங்களில், வாஸ்துதேவரின் புத்திரர் என்றும், சிலவற்றில், பிரம்ம புத்திரர் என்றும் தகவல்கள் உள்ளன. ஆனால், இவர் தேவலோக சிற்பி என்பதில் மாறுபட்ட கருத்து ஏதுமில்லை.இவருக்கு ஐந்து மகன்களும், மூன்று மகள்களும் உண்டு. மகள்களில் ஒருத்தியான சஞ்சனாவை இவர், சூரிய பகவானுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். இவள், சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல், தன் நிழலிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தாள். இவளை பிரத்யுஷா என்றனர். இவளுக்கு, எமி, எமன் என்ற குழந்தைகள் உண்டு.உலகிலுள்ளோர் ஆயுளை நிர்ணயிக்கும் சக்தியைப் பெற்றான், எமதர்மன். ஒரு நதியாக மாறி, யமுனை என்ற பெயருடன் ஓடினாள், எமி. ஆக, கண்கண்ட தெய்வமான சூரியனின் மாமனாராக விளங்கினார், விஸ்வகர்மா. சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காட்சி தருவார், விஸ்வகர்மா. இவர், தேவலோகத்தில் மட்டுமின்றி, பூலோகத்திலும் இரண்டு புகழ் பெற்ற நகரங்களை ஸ்தாபித்தார். அவையே இந்திரபிரஸ்தம், அஸ்தினாபுரம் எனப்பட்டன. பாண்டவர்களும், கவுரவர்களும் இங்கு வசித்தனர்.இந்திரபிரஸ்தம் என்பது இன்றைய டில்லி. அஸ்தினாபுரம் என்பது உத்தரபிரதேசத்திலுள்ள மீரட் நகரம். விஸ்வகர்மாவுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில தலைநகரான சண்டிகர் அருகிலுள்ள ஜிரக்பூர்; ஆந்திர மாநிலம், மசூலிபட்டினம்; அசாமிலுள்ள கவுகாத்தி மற்றும் கேரளாவில் காசர்கோடு மாவட்டம் ககான்கட் அருகிலுள்ள அஜனுார் கிராமம் என, இன்னும் சில இடங்களிலும் கோவில்கள் உள்ளன.கல், தங்கம், பிற உலோகங்கள், மரம் என, அனைத்துப் பொருட்களிலும் இருந்தும், பல்வேறு பொருட்கள் கிடைக்க காரணமாயிருக்கும் விஸ்வகர்மாவை, சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று வணங்குவோம்.ஆவணி கடைசி அல்லது புரட்டாசி துவக்கத்தில் (செப்டம்பர் மத்தி) வரும் அவரது ஜெயந்தி நாளிலும், அவருக்கு பூஜை செய்து இன்னருள் பெறுவோம். தி. செல்லப்பா