உள்ளூர் செய்திகள்

கதை சொல்லி!

மின் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அரங்கத்தினுள், 250 தமிழ் வாசகர்கள் அமர்ந்திருந்தனர். கதை கேட்கவே, கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர், தமிழ் இலக்கியம் வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்கள். ஒலி பெருக்கியின் முன், காத்தவராயன் வந்து நின்றதும், கூட்டம் நிசப்தமானது.காத்தவராயன் வயது, 62. காக்கை நிறம். லேசர் கண்கள். நவரசம் சிந்தும் குரல்வளம். 50 ஆண்டுகளில், 35 ஆயிரம் புத்தகங்களை வாசித்தவர். ஒட்டு மொத்த தமிழ் எழுத்தாளர்களின் ஜாதகமும் அவர் கையில்.கடந்த, 30 ஆண்டுகளாக, பிரபல தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, உணர்ச்சி கொப்பளிக்க, ஒரு நபர், நாடகம் நடத்தி, சிறந்த கதை சொல்லியாக திகழ்கிறார். காத்தவராயன் பெயரில், 5,000 'யூ டியூப்'கள் காணக் கிடைக்கின்றன.காத்தவராயன் எப்போது கதை சொல்ல ஆரம்பித்தாலும், 'புதுமைப்பித்தன் வாழ்க!' எனக்கூறி தான் ஆரம்பிப்பார். அன்றும் அப்படிதான், ''இன்று, நான் உங்களுக்கு சண்முகராஜா எழுதிய, 'பூனை மருத்துவன்' என்ற கதையை கூற போகிறேன்.''''சொல்லுங்கள் அய்யா.''''சண்முகராஜா, திருவனந்தபுரத்தில் வசித்தவர். தற்சமயம், சென்னையில் இருக்கிறார். வயது, 60. இதுவரை, 1,000 சிறுகதைகளும், 500 நாவல்களும், 500 கட்டுரைகளும் எழுதியுள்ளார். பூனை மருத்துவன் கதையை சிற்றிதழ் ஒன்றில், 1998ல் எழுதினார்.''கூட்டம் நிமிர்ந்து அமர்ந்தது.சில பல நிமிடங்களில், காத்தவராயனின் முகம் மின்னியது. தான் வாசித்த சில சிறப்பான கதைகளுடன் பூனை மருத்துவனை ஒப்பிட்டார். 1,200 வார்த்தைகள் அடங்கிய சிறுகதையை அரைமணி நேர சுகானுபவமாய் மாற்றினார்.கதையை சொல்லி முடிக்கும்போது, கூட்டம் மொத்தமும் எழுந்து நின்று, கை தட்டியது. கூட்டத்தின் கடைசி வரிசையில், ஒரு நபர் மட்டும் கை தட்டாமல் அமர்ந்திருப்பதை கண்டார், காத்தவராயன்.'இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே... யார் இவர்?' நொடியில் சூரியனித்தார்.'வாவ்! வந்திருப்பது, எழுத்தாளர் சண்முகராஜா! அவருடைய கதையை நான் வாசிப்பதை மறைந்து நின்று கேட்டிருக்கிறார்!'கடைசி வரிசைக்கு ஓடி, குனிந்திருந்த சண்முகராஜாவை வாஞ்சையாக தொட்டார், காத்தவராயன்.''நல்லாருக்கீங்களா நண்பா?''''ம்... ம்...''''உங்கள் கதையை நான் எப்படி வாசித்தேன்?''''உலகத்தரமான கதையை, வழிப்போக்கர் வாசித்தாலும் நன்றாகதான் இருக்கும்.''''இருங்கள், இரவு உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டபடியே கதைப்போம்.''''நான் கதைக்க வரவில்லை; முறையிட வந்திருக்கிறேன்.''''சரி, என் அறையில் ஓய்வெடுங்கள்; கூட்டத்தை வழியனுப்பி விட்டு வருகிறேன்.''காத்தவராயனை நெருங்கினர், கூட்டத்தினர்.''இந்த நுாற்றாண்டின் இணையற்ற கதை சொல்லியே, உனக்கு என் நமஸ்காரம். நீ கதை சொன்னபோது, என்னிரு காதுகளில் மலைத்தேன் பொங்கி வழிந்தது. உன் கதையை கேட்க, 1.20 லட்சம் செலவு செய்து வந்திருக்கிறேன். உன்னை கடத்தி போய் ஸ்விஸ் நாட்டில் பாதுகாக்கவா?'' சிரித்தார், காத்தவராயன். சிலர், காலில் விழுந்தெழுந்தனர். பதறி, அவர்களை தடுத்தார்.''உங்களை பார்த்து நுாற்றுக்கணக்கான நகல்கள் பூத்துள்ளன. அவை எதுவும் உங்களின் தரத்தில் 5 சதவீதம் கூட இல்லை.''''அப்படி யாரையும் குறைத்து கூறக் கூடாது.''''அடுத்து கதை சொல்லல் எங்கே அய்யா?''''டில்லி தமிழ் சங்கத்தில்.''''தேதி?''''பின்னர் அறிவிப்போம்.''அனைவரையும் அனுப்பிய பின், சண்முகராஜாவிடம் வந்தார், காத்தவராயன்.டீச்சர்ஸ் விஸ்கி, இரு மது கோப்பைகள், ஒரு சோடா, மசால் வடை ஒரு பிளேட், முந்திரி பருப்பு ஒரு பிளேட், இரு ஊறுகாய் பாக்கெட்கள், பெப்சி ஒரு பாட்டில், பிஸ்லெரி ஒரு பாட்டில், கோவில்பட்டி காராசேவ் ஒரு பிளேட் மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா நான்கு பாக்கெட்கள் மேஜையில் தயாராய் இருந்தன.''சண்முகராஜா, உங்களுக்கு மிகவும் பிடிச்ச நாட்டுக்கோழி பிரியாணி தயாராயிட்டு இருக்கு. 'வெட் பார்ட்டி' முடிஞ்சதும் சாப்பிடலாம்.''''குடிக்க கொடுத்து, சமாதானப்படுத்துறியா?''''நமக்குள் சண்டை என்று ஒன்றிருந்தால் தானே சமாதானம் தேவை.''ஆளுக்கொரு பெக் ஊற்றி, ''சோடாவா, பெப்சியா?''''சோடா!''மதுபான கிண்ணங்களை உயர்த்தி, 'சியர்ஸ்' சொல்லினர்.''இப்ப சொல்லுங்க, உங்க ஆவலாதி என்ன?''''நான் எழுத்தாளர்களின் ஆசிரியன். நான் எழுதுவது மட்டுமே கதை.''''இது உங்கள் வித்வ கர்வம். எனக்கு மாற்றுக் கருத்துகள் உள்ளன.''''காத்தவராயன், 30 ஆண்டுகளுக்கு முன், நீ ஒன்றுமில்லாதவன். என் கதைகளை வாசித்து வாசித்து, பணமும், புகழும் அடைந்து விட்டாய். இனி, என் கதைகளை நீ வாசித்தால், எனக்கு ராயல்டி தர வேண்டி இருக்கும்.''''கொடுத்துட்டா போச்சு.''''சிரித்து மழுப்புகிறாயா?''''சண்முகராஜா... பேச்சு என வந்துவிட்ட பிறகு நானும் பேசுவது தான் முறை. கடந்த, 30 ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்துள்ளேன். எனக்கு சண்முகராஜாவும், முத்துலிங்கமும் ஒன்று தான். அடிப்படையில் நானும் ஒரு எழுத்தாளன். ''நான், உங்கள் கதையை வாசிப்பதற்கு முன், 100 - 200 வாசகர்கள் தான் வாசித்திருந்தனர். நான் வாசித்த பிறகு, உங்கள் கதை பல லட்சம் பேருக்கு போய் சேருகிறது. இன்றைய உங்கள் பாப்புலாரிட்டி, என் கதை சொல்லலின் விளைபொருள்.''''என்னை எதிர்த்து பேச துணிந்து விட்டாயா? ''புதுமைபித்தன், ஜெயகாந்தன், கு.ப.ரா., எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு திஜா, கு.அழகிரிசாமி எல்லாம் கதை சொல்லிகளால் தான் பிரபலம் ஆனார்களா?''''அவர்கள் காலத்தில் என்னை போன்ற கதை சொல்லிகள் இருந்திருந்தால், அவர்கள் இன்னும் அதிக புகழ் பெற்றிருப்பர்.''''இது தலைக்கனம்.''''வாசிப்பு பழக்கம் அருகி வருகிறது. முகநுால் பதிவு, 10 வரிகளை தாண்டினாலே யாரும் படிப்பதில்லை. இணைய இதழ்களில் வரும் கதைகளை, 100 - 200 பேர் படிச்சாலே பெரிய விஷயம். வாசகர் எண்ணிக்கையை விட, எழுத்தாளர், கவிஞர் எண்ணிக்கை பெருத்து விட்டது. ''இலக்கியத்தை விட அன்றாட வாழ்க்கை பிரச்னைகளை சமாளிப்பது, மக்களுக்கு பெரிய விஷயமாக போய்விட்டது. இளைய தலைமுறை எழுதும், 10 வரிகளில், 20 இலக்கணப் பிழைகள். ''பொதுவாக, மக்களுக்கு சோம்பல் அதிகரித்து விட்டது. வாழைப்பழத்தின் தோலை உரித்து ஊட்டினால்தான் சாப்பிடுவர். எழுத்தாளர்களே வாசிப்பதில்லை. ''புத்தகக் கண்காட்சிக்கு போகும் மக்கள், அப்பளம், பஜ்ஜி சாப்பிட்டு விட்டு, சமையல் ஜோதிட புத்தகங்களை வாங்கி, வீடு திரும்புகின்றனர். மெகா சீரியல்கள், பத்திரிகையில் வரும் தொடர் கதைகளை கொன்று விட்டன.''இலக்கியம், வரி வடிவத்திலிருந்து ஒலி - ஒளி வடிவத்துக்கு ஏறக்குறைய முழுமையாக தாவி விட்டது. இப்போதைய தமிழ் எழுத்தாளர்கள், வாழும் புதைபடிவம் ஆகிவிட்டனர். ''பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு இல்லை. வீடுகளில், தாத்தா - பாட்டிகள் பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்வதில்லை. காத்தவராயன் எனும் கதை சொல்லி, ஒன்பது கோடி தமிழருக்கு, தாத்தா - பாட்டியாகி காதில் கதை சொல்கிறான். கதை சொல்லிகளுக்கு, 'ரோல் மாடல்' நான் தான். கதை சொல்லிகள் இல்லாவிட்டால், தமிழ் இலக்கியம் செத்துப் போகும் நண்பரே.''''உன் மனசில் ஒளிஞ்சிருக்கிறது எல்லாம் ஒண்ணொன்னா வெளிய வருது பார். இஸ்லாமில், 1.24 லட்சம் நபிகள் வந்ததாகவும், அதில் இறுதி நபி, நபிகள் நாயகம் எனவும் கூறப்படுகிறது. தமிழ் இலக்கியத்தின் இறுதி மகா எழுத்தாளன் நான் தான். கதை சொல்லிகள் எல்லாம் என் காலடியில் தான்.''''நான் இல்லாவிட்டால் நீ செல்லாக்காசு தான்,'' ஒருமைக்கு தாவினார், காத்தவராயன்.''நான் சூரியன், நீ நிலா. என் வெளிச்சத்தை இரவல் வாங்கி அல்லது திருடி தான் பவுர்ணமி என, தம்பட்டம் அடிக்கிறாய்.''''நான், இனி உன் கதைகளை வாசிக்க மாட்டேன். என்ன கதி ஆகிறாய் என பார்க்கிறாயா?''''என் கதையை வாசிக்கா விட்டால் நீ நடுத்தெருவுக்கு வந்து விடுவாய்.''''பார்ப்போமா?''''பார்ப்போம்யா.''சட்டென்று சண்முகராஜா பாய்ந்து, காத்தவராயனின் கழுத்தை பற்றினார். காத்தவராயன் சண்முகராஜா கழுத்தை பிடித்து, ''இப்போதே நான் உன் கதையை முடித்து விடுகிறேன்.'' இருவரும் சுற்றிச் சுழன்றனர்.காட்சி அமைப்புக்குள் ஒரு பூகம்பம் வெடித்தது. இருவரின் இடையே வந்த காத்தவராயனின் மனைவி, ''ரெண்டு பேரும் கழுத்தை விடுங்க. கதை சொல்லியும், எழுத்தாளனும் உலகத்தமிழர் முன், தமிழ் இலக்கியத்தின் முன், ஒரு மைக்ரோ துாசு. ''கதையோ, கட்டுரையோ, ஒலி - ஒளி வடிவமோ... எந்த மீடியத்துக்கும் எழுத்துதான் கச்சாபொருள். வாசிப்பு குறைஞ்சு போச்சுன்னு முதலை கண்ணீர் வடிக்காதீர்கள். சேவல் கூவுவது போல, ஒரு பூ மலர்வது போல, உங்களின் பணிகளை எண்ணிக்கை பாராமல் தொடருங்கள்.''எழுத்தாளன், இலக்கிய சமுத்திரத்தில் சிறு மீன். சிறு மீன் சமுத்திரமாகாது. 'ஈகோ'வை தொலைத்து, நல்ல மனிதனாய் வாழ பாருங்கள்.'' காத்தவராயனும், சண்முகராஜாவும் லட்சம் துண்டுகளாய் நொறுங்கி சமனித்தனர்.ஆர்னிகா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !