உள்ளூர் செய்திகள்

தீயவனுக்கு தான் அதிக பயிற்சி தேவை!

பாடசாலையில், சிவகுரு என்ற ஆசிரியரிடம், மாணவர்கள் பலர், பாடம் பயின்றனர். அங்கு, மற்றவர் பொருட்களை திருடினான், மாணவன் ஒருவன். கையும் களவுமாக பிடிபட்ட அவனை, ஆசிரியர் முன் நிறுத்தினர்.'திருடுவது, குற்றம் என்று தெரியாதா...' என்று கேட்டார், சிவகுரு.'இனிமேல் திருட மாட்டேன்...' என்று அவன் உறுதி அளித்ததால், மன்னித்தார்.ஒரு வாரத்தில், மீண்டும், அவன் கைவரிசையை காட்ட, இம்முறை மன்னிக்காமல், பாடசாலையிலிருந்து அவனை வெளியேற்ற வற்புறுத்தினர், மற்ற மாணவர்கள். ஆனால், வழக்கம்போல, 'திருடுவது, குற்றம் என தெரியாதா...' என்று கேட்டார், சிவகுரு.'திருடிய இவனை வெளியேற்றா விட்டால், நாங்கள் வெளியேறுவோம்...' என்று, மற்ற மாணவர்கள் குரல் எழுப்பினர். 'நல்லது; நீங்கள் அனைவரும் செல்லலாம்...' என்றார், சிவகுரு.இதை, சற்றும் எதிர்பாராத அவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, 'நல்லது, கெட்டதை விளங்க செய்வதே கல்வி. அதை அறிந்த நீங்கள், எங்கு சென்றாலும், நல்வழியில் நடப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், திருடுவது குற்றம் என அறியாத இவனுக்கு தான், நிறைய போதிக்க வேண்டியிருக்கிறது...' என்றார்.குருவின் கருணையை எண்ணி, அனைவரும் வாயடைத்து நின்றனர். 'ஆசிரியர் மட்டுமல்ல... அன்பு காட்டும் தாயும், அறிவூட்டும் தந்தையும் நீங்களே...' என்று சொல்லி, அழுதான், திருடிய மாணவன்.இன்னொரு நாள், குருவும், சீடர்களும், யாத்திரை சென்று கொண்டிருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி, இளைப்பாறினர்.அப்போது சீடன் ஒருவன், 'குருவே... தினமும் கோவிலுக்கு பூஜை செய்கிறவர், கோவில் பக்கம் கூட எட்டிப் பார்க்காதவர், இருவரில் யாருக்கு, கடவுளின் அருள் அதிகமாக கிடைக்கும்...' என்று கேட்டான்.'இப்போது, நீ இளைப்பாறி கொண்டிருக்கும் இந்த மரத்திற்கு, எப்போதாவது தண்ணீர் ஊற்றி இருக்கிறாயா...' என்றார், சிவகுரு.'இல்லை குருவே...' என்றான்.'பின், எப்படி உனக்கு இந்த நிழல் கிடைத்தது?''நிழல் தருவது மரத்தின் இயல்பு குருவே...''ஆம்... அது போல தான், கடவுளும். தன்னை வணங்குவோர், வணங்காதோர் என்றெல்லாம் பார்க்க மாட்டார். யார் யாருக்கு, என்னென்ன கொடுக்க வேண்டுமோ, அதைக் கொடுப்பார். அதற்கு, இந்த மரமே சாட்சி. நிழல் கொடுப்பதற்கு, வேண்டியவர், வேண்டாதவர் என்றெல்லாம் இது, ஒருபோதும் பார்ப்பதில்லை...' என்றார், சிவகுரு.கடவுளிடம் முழுமையாக சரணாகதி ஆகிறவர்களுக்கு, அவரவர்களுக்குரிய பலன்களை நிச்சயம் தருவார்.ஆலய அதிசயங்கள்!சிவகங்கை - திருப்புவனம் அருகில், கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் உள்ள, மீனாட்சி அம்மன் சிலை, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !