நேர்மை எனும் ஏணி!
நேர்முக தேர்விற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான் நவீன். வழக்கம் போல, அழகாக டிரஸ் செய்து, டை கட்டி, கையில் சர்டிபிகேட்கள் அடங்கிய ஒரு பைல் போல்டரை எடுத்துக் கொண்டு, புறப்பட ஆயத்தமானான். அவனுடைய அம்மாவின் முகத்தில், கவலை ரேகைகள் தென்பட்டன. அம்மாவின் கால்களை தொட்டு வணங்கிய நவீன்,''அம்மா... என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா,'' என்றான்.''நல்லா இருப்பா.''''ஏம்மா, உங்க முகம் என்னமோ போல இருக்கு?''''ஒண்ணுமில்லேப்பா.''''இல்லேம்மா. போன முறை, இன்டர்வியூவிலே நடந்த விஷயத்தை நினைச்சி கவலைப்படறீங்க... நீங்களும், அப்பாவும் தானேம்மா, எப்பவும் நேர்மையா இருக்கணும்; நல்லதையே நினைக்கணும், நல்லதையே செய்யணும்ன்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்க.''''அது சரிப்பா. அதுக்காக, நீ இவ்வளவு நல்லவனா இருக்கணும்ங்கிற அவசியம் இல்லேப்பா.''''சரிம்மா... கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லதாகவே நடக்கும்.''புறப்பட்டான் நவீன்.இரண்டு மாதங்களுக்கு முன், நவீனுக்கு, ஒரு பெரிய கம்பெனியிலிருந்து, இன்டர்வியூ வந்தது. நவீன், திருச்சியில், ஒரு புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் முடித்தவன். ஓரளவிற்கு வசதியான குடும்பம். அப்பா ஒரு நேர்மையான அதிகாரி. நவீனுக்கு, கேம்பஸ் இன்டர்வியூவில், ஒரு சாப்ட்வேர் கம்பெனியில், கை நிறைய சம்பளத்தோட, நல்ல வேலை கிடைத்தது. ஆனால், அந்த வேலை அவனுக்கு பிடிக்கவில்லை. எனவே, சேர்ந்த இரண்டே மாதங்களில், வேலையை விட்டான்.அவனுக்கு, பிரேம் என்றொரு நண்பன் இருந்தான். அவன், ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், பி.டெக்., படித்தவன். பல இடங்களில் முயற்சி செய்தும், அவனுக்கு நல்ல வேலை அமையவில்லை. அவனுடைய ஏழ்மையான குடும்பம், பணக்கஷ்டத்தில் இருந்தது. பிரேமிற்கு ஒரு வேலை கிடைத்தால், அவன் குடும்பம் தலை தூக்கும்.இருவரும், ஒரு கம்பெனியில், வேலைக்காக விண்ணப்பித்திருந்தனர். ஒரே நாளில், இருவருக்கும் அழைப்பு வந்தது. வழியில், தன் குடும்ப கஷ்டத்தை, நவீனிடம் சொல்லி, வருத்தப்பட்டான் பிரேம்.நவீனும், பிரேமும் அந்த கம்பெனியின் நேர்முகத் தேர்வில் கலந்து, சிறப்பாகவே பதிலளித்தனர். அன்று, இன்டர்வியூவிற்கு வந்திருந்த பதினேழு பேர்களில், மூன்று பேர்களை மட்டும் இருக்க சொல்லி, மற்றவர்களை அனுப்பி விட்டனர். அந்த மூன்று பேர்களில் நவீன், பிரேமுடன் மற்றொரு பெண்ணும் இருந்தார்.மூன்று பேரையும் மறுபடியும் அழைத்து, குரூப் டிஸ்கஷன் நடத்தி, நவீனையும், பிரேமையும் தேர்வு செய்தனர். இருப்பது ஒரே ஒரு போஸ்ட். பிரேமை ரிசர்வில் வைத்தனர்.நவீனை அழைத்தார், அந்த கம்பெனியின் எம்.டி.,'நவீன் யு ஆர் செலக்டட். நீங்க நாளைக்கே வேலைக்கு சேரலாம். உங்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் ஸ்டைபண்ட். ஒரு வருஷ ட்ரெயினிங்கிற்கு அப்புறம், அறுபதாயிரம் ரூபாய் தருவோம்...'நவீன் சிறிது நேரம் யோசித்தான்.'எக்ஸ்க்யூஸ் மீ சார்... எனக்கு, இந்த வேலையிலே சேர விருப்பம் இல்லே...''பின்னே ஏன் இன்டர்வியூவிற்கு வந்தீங்க?''சொல்றேன் சார். என்னோட செலக்ட் ஆகியிருக்கிற பிரேம், என்னோட நண்பன். அவனும், என்னைப் போலவே திறமையானவன். அவனுடைய குடும்பம், இப்ப ரொம்ப சிரமத்துல இருக்கு. நான் டிஸ்டிங்ஷன்லே பாஸ் செய்துருக்கேன். எனக்கு நிச்சயம் ஒரு நல்ல வேலை கிடைக்கும். நான் சேரலன்னா, என்னுடைய இந்த வேலையை, என் நண்பனுக்கு தருவீங்க இல்லையா? ப்ளீஸ் சார்... இந்த வேலையை, பிரேமிற்கு கொடுத்திடுங்க...'நவீன் பேசியதை கேட்ட எம்.டி., வியப்பின் எல்லைக்கே போனார்.'அடுத்தவனை ஏமாற்றி, வேலையிலே சேருகிற இந்த காலத்துல, நண்பனுக்காக, ஒரு நல்ல வேலையை, நீங்க தியாகம் செய்ய தயாரா இருக்கீங்க. உங்க நல்ல மனசை நான் மதிக்கிறேன்...' என்றார்.கடைசியில், அந்த வேலை, பிரேமிற்கு கிடைத்தது.நவீன் அம்மாவின் கவலை இதுதான். கிடைத்த நல்ல வேலையையும், நண்பனுக்காக விட்டுக் கொடுத்து விட்டான். இந்த இன்டர்வியூவிலும், இதுபோல ஏதாவது செய்தால், என்ன செய்வது... தன் மகனை நல்லவனாக வளர்த்து விட்டது தவறோ என்று, நினைக்கத் துவங்கினாள் அம்மா.காலை மணி 10:00.நவீன், ஒரு பெரிய எம்.என்.சி., நிறுவனத்தில் நடக்க இருக்கும், நேர்முகத் தேர்விற்கு சென்று கொண்டிருந் தான். சென்னை ஓ.எம்.ஆர்., பகுதியில், அந்த நிறுவனம் பிரமாண்டமாய் இருந்தது.நவீனை, 11:00 மணிக்கு, நேர்முகத் தேர்விற்கு அழைத்திருந்தனர். முன்னேற்பாடாக, அவன் 10:30க்கு அந்நிறுவனத்திற்கு சென்றிருந்தான். நிறைய பேர் கையில் பைலுடன் காத்திருந்தனர்.சரியாக 11:00 மணிக்கு, அவனை உள்ளே அழைத்தனர்.கேள்விகள் வினோதமாகவும், அதே சமயம் புத்திசாலித்தனமாகவும் இருந்தன. புத்தகத்தை மட்டும் படித்து விட்டு வந்தவர்கள் மிரண்டு போயினர். ஆனால், நவீன், மிகவும் அழகாக, அனைத்து கேள்விகளுக்கும், தயங்காமல் தெளிவாக விடையளித்தான். இன்டர்வியூ பேனலில் இருந்தவர்கள், மகிழ்ச்சி அடைந்தனர். ஒருமனதாக, நவீனை, அந்த பொறுப்பான பணிக்கு தேர்வு செய்தனர்.அந்நிறுவனத்திற்கு, உலகம் முழுவதும் கிளைகள் இருந்தன. பல மில்லியன் டாலர் வருமானம் உள்ள, புகழ் பெற்ற நிறுவனம் அது. அந்த நிறுவனத்தின் முதல் எதிர்பார்ப்பு, எந்த சூழ்நிலையிலும் தன் பணியாளர், நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான். வேலை, திறமை எல்லாம், அதற்கு அடுத்துத் தான்.நவீனிடம், அவன் செலக்ட் ஆன விஷயத்தை, அப்போதே தெரிவித்து விட்டனர். ஆறு மாத காலத்திற்கு, மாதம், அறுபதாயிரம் ரூபாய் சம்பளம். அதற்குபின், அவனுடைய திறமையை பொறுத்து, பல மடங்காகும்.அடுத்த நாளே வேலையில் சேரச் சொல்லி, கடிதமும் கொடுத்து விட்டனர்.வீட்டிற்கு சென்று அம்மாவிடமும், அப்பாவிடமும் தான் வேலைக்கு தேர்வான விஷயத்தை சொல்லி, மாதம் அறுபதாயிரம் ரூபாய் சம்பளம் என்று சொன்னான்.''அம்மா, போன மாசம், பிரேமிற்கு வேலையை விட்டுக் கொடுத்துட்டேன்னு கவலைப் பட்டீங்களே... இப்ப பார்த்திங்களா, கடவுள் எனக்கு, அறுபதாயிரம் ரூபாய் சம்பளத்துலே, ஒரு வேலை கொடுத்திருக்காரு,'' என்றான்.அம்மாவிற்கும், அப்பாவிற்கும் பெருமையாக இருந்தது. ஆனாலும், மகனின் அதிநேர்மை, அவர்களை சற்று கவலை யடையவே வைத்தது. அதற்கேற்றாற் போல, அந்த மாதம் வேலையில் சேர்ந்து, பதினைந்து நாட்களுக்குரிய சம்பளத்தை வாங்கும் போது, ஒரு விஷயத்தை செய்தான் நவீன்.நவீன் அந்த மாதம் பதினாறாம் தேதி, வேலையில் சேர்ந்தான். பதினைந்து நாட்களுக்குரிய சம்பளப் பணம், முப்பதாயிரம் ரூபாய் அவனுக்கு தரப்பட்டது.நவீன் உடனே தன் மேலதிகாரியை சந்தித்து,''சார்... நான் வேலைக்கு சேர்ந்து, பதினைந்து நாட்கள் தான் ஆகுது. நான் பெரிசா கஷ்டப்பட்டு, எந்த வேலையும் செய்யலை. ஆனா, எனக்கு முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்திருக்காங்க. குறைவா வேலை செய்துட்டு, அதிகமாக சம்பளம் வாங்க, எனக்கு இஷ்டமில்லை,''என்றான்.நவீன் தன்னுடைய நிறுவனத்தின் பேருக்கு, ஒரு செக்கை, அவரிடம் கொடுத்தான்.நவீனைப் பார்த்து, வியந்தார் அந்த மேலதிகாரி.''இது அப்படி இல்லை மிஸ்டர் நவீன். உங்களுக்கான சம்பளம் அறுபதாயிரம் ரூபாய். நாங்க படிப்படியாக தான், உங்களுக்கு வேலைகளை தருவோம். நாங்க சொல்லி, நீங்க வேலை செய்யாம இருந்து, இந்த சம்பளத்தை நீங்க வேணாம்ன்னு சொன்னா சரி. எனவே, உங்க நேர்மையை நான் பாராட்டறேன்,'' என்றார்.ஆனாலும், நவீன் சமாதானமாகவில்லை. ஒரு வழியாக, அந்த மேலதிகாரி அவனை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தார்.வீட்டிற்கு வந்து, நடந்த விஷயத்தை, தன் அம்மா, அப்பாவிடம் தெரிவித்தான்.இதை கேட்டு, இருவரும் மீண்டும் கவலைப்பட்டனர்.''நவீன்... நாங்க உன்னை ரொம்ப நல்லவனாக வளர்க்கணும்ன்னு ஆசைப்பட்டு, உனக்கு, பல நல்ல நல்ல விஷயங்களை சொல்லி வளர்த்தோம். நீயும், எங்க பேச்சை கேட்டு, நல்லவனாகவே வளர்ந்துட்டே. ஆனா, இப்ப நீ செய்யற காரியங்களை பார்த்தா, எங்களுக்கு பயமாக இருக்கு. உன்னோட நேர்மையே, உனக்கு எதிரியா ஆகிடும் போலிருக்குடா,'' என்றார் அப்பா.அப்பா பேசியதை கேட்ட நவீன், எந்த வித அதிர்ச்சியும் அடையவில்லை. அவன் தன் கொள்கையில், உறுதியாகவே இருந்தான்.''அம்மா, அப்பா நீங்க ரெண்டு பேரும், என்னைப் பற்றி கவலைப்படாதீங்க. என்னோட நேர்மையை நினைச்சு, நீங்க பயப்படவும் வேணாம். நேர்மையும், உயர்ந்த குணமும், நல்ல பண்பும் நம்மை எப்பவும் காப்பாத்தும். நம்மை படிப்படியா உயர்த்திக்கிட்டே இருக்கும்ங்குறதிலே, எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு,'' என, அவன் பேசி முடித்ததும், மொபைல் போன் ஒலித்தது.எடுத்துப் பேசியதும், மகிழ்ச்சியோடு, தன் பெற்றோரிடம் ஒரு விஷயத்தை தெரிவித்தான்.''அப்பா எங்க கம்பெனிக்கு, உலகம் முழுவதும் கிளைகள் இருக்குன்னு சொல்லி யிருக்கேன்ல. ஜப்பான்ல இருக்குற, ஒரு பெரிய கிளைக்கு, நம்பிக்கையும், நேர்மையும் உடைய ஒரு இளைஞரை, அனுப்ப யோசிச்சிகிட்டிருந்தாங்களாம். என்னோட நேர்மையை பற்றி, என்னோட மேலதிகாரி, எம்.டி.,யிடம் பேசியிருக்காரு. அவர், என்னை ஜப்பான் அலுவலகத்திற்கு, 'அப்பாயின்ட்' பண்ணச் சொல்லிட் டாராம். இன்னும் மூணு மாசத்துலே, நான் ஜப்பான் போயாகணும். ஜப்பான்லே என்னோட சம்பளம், மாசத்துக்கு மூணு லட்சம்.''அப்பாவும், அம்மாவும் மகிழ்ச்சியிலும், நெகிழ்ச்சி யிலும் கண்கள் பனிக்க, வார்த்தைகள் வராமல், நின்று கொண்டிருந்தனர்.'எங்களை மன்னிச் சிடுப்பா... உன்னோட நேர்மையும், நல்ல உள்ளமும் தான், உன்னை, இவ்வளவு பெரிய இடத்துக்கு கொண்டு போயிருக்கு. நீ, இனி, எந்த தருணத்திலும், நேர்மையாகவே நடந்துக்கணும். அதனால, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பரவாயில்லேப்பா...' என்றனர்.இப்போது, சந்தோஷத்தில், நவீனின் கண்களும் பனித்தன. அதில், ஒரு உறுதி தெரிந்தது.***-ஆர்.வி. பதி