உள்ளூர் செய்திகள்

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (12)

முன்கதைச் சுருக்கம்: முகிலாவை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கான காரணத்தை கூறினாள், நேத்ரா. முகிலாவை அடைத்து வைத்த பங்களாவுக்கு சென்ற தருண், அழைப்பு மணி ஒலிக்க, கதவு, 'லென்ஸ்' வழியாக பார்க்க, இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் நின்றிருந்தார் -தருணின் தலைக்குள் ஒரு பிரளயம் நிகழ்ந்த உணர்வு. கதவில் பொருத்தப்பட்டிருந்த, 'லென்ஸ்'சில், வலது பக்கக் கண்ணை சரியாய் பொருத்தி, மறுபடியும் ஒரு தடவை பார்வையை கூர்மையாக்கினான்.அகலமான வாசற்படியில், முத்துக்குமரன் நின்றிருக்க, காம்பவுண்ட் கேட்டுக்கு பக்கத்தில் அவருடைய பைக், அந்த இருட்டிலும் மினுமினுப்பாய் தெரிந்தது.ஒரு சிறு சத்தம் கூட காட்டாமல் பின்வாங்கிய தருண், இக்பாலை மற்றும் ஜோஷை நெருங்கினான். குரலை கிசுகிசுப்பாக்கி, ''வந்திருக்கிறது யார் தெரியுமா?'''யாரு?' என்றனர்.''இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன்.''இக்பால், ஜோஷ் இருவரின் விழிகளிலும் கலவர அலைகள் பரவின. குரலில் குளிர் அடிக்க, ''என்ன சொல்றே தருண்... இன்ஸ்பெக்டர் எப்படி இங்கே வந்தார்?'' கேட்டான், இக்பால்.''தெரியலை.''''யூனிபார்ம்ல இருக்காரா?''''இல்ல மப்டி... கருப்பு டீ ஷர்ட், வெள்ளை பேன்ட்.''''அவர் கூட வேற யாராவது இருக்காங்களா?''''இல்லை...'' என, தருண் தலையாட்டிக் கொண்டு இருக்கும் போதே, மறுபடியும் பொறுமை இழந்து, சற்றே நீளமாய் வீறிட்டது, அழைப்பு மணி.''என்ன பண்ணலாம்?'' குரல் உதற கேட்டான், ஜோஷ்.''வேற வழியில்லை... போய் கதவைத் திறந்து அவரை, 'ரிசீவ்' பண்ண வேண்டியது தான்,'' என்றான், இக்பால்.''அதுக்கு முந்தி ஒரு முக்கியமான விஷயம்,'' என்றான், தருண்.'என்ன?' என்றனர், இக்பாலும், ஜோஷும்.''இன்ஸ்பெக்டர் ஏதாவது கேள்வி கேட்டா, நம்ம மூணு பேர்ல ஒருத்தர் தான் பேசணும். அவர் கேட்கிற கேள்விக்கு மட்டுந்தான் பதிலைச் சொல்லணும். கூடுதலாய் ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது.''இருவரும் தலையாட்டிக் கொண்டிருக்கும் போதே, வாசல் கதவை நெருங்கி தாழ்ப்பாளை விடுவித்து, கதவைத் திறந்தான், தருண். போலியாய் முகத்தில் வியப்பைக் காட்டி செயற்கையாய் மலர்ந்து, ''சார்... நீங்களா?'' என்றான்.முத்துக்குமரனின் உதடுகளில் புன்னகை பரவியது.''நானே தான்.''''ஆச்சரியமாயிருக்கு சார்.''''எனக்கும் அதே ஆச்சரியம் தான். இது, உங்க வீடா?''''இல்ல சார். இது என் நண்பனின் வீடு. உள்ளே வாங்க சார்!''படியேறி உள்ளே வந்தார், முத்துக்குமரன்.துளியளவு கூட பதட்டத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல், சோபாவைக் காட்டி, ''உட்காருங்க சார்,'' என்றான், தருண்.சோபாவில் சாய்ந்தபடி, சற்றுத் தள்ளி நின்றிருந்த இக்பாலையும், ஜோஷையும் பார்த்தார், முத்துக்குமரன். ''அவங்க ரெண்டு பேரும், என் நண்பர்கள் சார். இவன், இக்பால். இந்த வீடு அவனுடையது தான். ஒரு மல்டி பிசினஸ் மேன். 'காஸ்மெடிக்கல் புராடக்ட்'சிலிருந்து, 'கம்ப்யூட்டர் அஸ்சசரீஸ்' வரைக்கும் தயாரிக்கிற நாலைஞ்சு கம்பெனிகளுக்கு உரிமையாளன். இவன், ஜோஷ். 'சாப்ட்வேர் கம்பெனி'யில், 'புராஜெக்ட் ஹெட்'டா வேலை பண்றான்,'' என்றான், தருண்.இக்பாலும், ஜோஷும் கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், முத்துக்குமரனை புன்சிரிப்போடு நெருங்கி, கை கொடுத்துவிட்டு எதிரே இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தனர். அவர்களுக்கு முத்துக்குமரனை அறிமுகப்படுத்திவிட்டு, அவர் அருகே அமர்ந்தபடி, ''நான் இங்கே இருப்பேன்னு உங்களுக்கு எப்படி சார் தெரியும்?'' என்றான், தருண்.''நீங்க இங்க இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாது, தருண். நான் வேற ஒரு வழக்கு விஷயமா பழைய குற்றவாளி ஒருத்தனை பார்க்க வந்தேன். அன்பு நகர், 7வது தெருவில், 72ம் நம்பர் வீட்ல இருக்கிறதாய் தகவல்.''கடந்த அரைமணி நேரமாய் இந்த தெருவுல, 72ம் நம்பர் வீட்டைத் தேடறேன். பார்வைக்குத் தட்டுப்படவே இல்லை. ஒவ்வொரு வீட்லயும் பழைய நம்பர், புது நம்பர் ரெண்டையுமே சுவத்துல எழுதி வெச்சிருக்காங்க. அதுவும் வரிசைக்கிரமமா இல்லை. ''அதனால, பைக்கை மெல்ல ஓட்டிக்கிட்டே, ஒவ்வொரு வீடா பார்த்துட்டு வந்தேன். இந்த வீட்டுக்கு வந்ததும், 'போர்டிகோ'வில் நின்னுட்டிருந்த, 'ஸ்கோடா கார்' கண்ணுல பட்டது. காரோட ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர், 7777ன்னு இருந்ததைப் பார்த்ததும், அது உங்க காராய் இருக்கலாமோன்னு ஒரு சந்தேகம் வந்தது.''காரணம், இன்னிக்கு காலையில் தானே ஆர்.எஸ்.புரம் விநாயகர் கோவில் வாசல்ல, உங்க காரை பார்த்தேன். 7777, பேன்சி நம்பர். அதனால, அந்த நம்பரை ஞாபகம் வெச்சுக்க முடிஞ்சுது. இதுவே ஒரு சாதாரண நம்பராய் இருந்திருந்தா, என்னால கண்டுபிடிச்சிருக்க முடியாது,'' என்றார், முத்துக்குமரன்.வரவழைத்துக் கொண்ட சிரிப்போடு, ''ஏழு, என்னோட அதிர்ஷ்ட எண் சார். இந்த நம்பர் கிடைக்கிறதுக்காக ஒரு பெரிய தொகை செலவழிச்சிருக்கேன். அப்புறம், இந்தத் தெருவில் ஒரு பழைய குற்றவாளியைத் தேடிட்டு வந்ததாய் சொன்னீங்க. அது யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா சார்?'' என்றான், தருண்.''தாராளமா... அவனோட பேரு துரையப்பன். ஆனா, உக்கடம் துரைன்னு சொன்னாத்தான் போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருக்கிற எல்லாருக்கும் தெரியும். நிறைய தடவை ஜெயிலுக்கு போயிருக்கான்.'' ''நீங்க சொல்ற அந்த உக்கடம் துரைங்கிற பேர்ல, இந்த தெருவில் யாருமே இல்ல சார். நான் இங்கே அஞ்சு வருஷமா குடியிருக்கேன்,'' என்றான், இக்பால். ''இந்த அன்பு நகருக்கு, 'வெல்பேர் அசோஷியேஷன்' ஏதாவது இருக்கா?''''இருக்கு சார்... 'அசோஷியேஷன்' தலைவர் கூட, எனக்கு ரொம்பவும் பழக்கமானவர் தான். வேணும்ன்னா நான் விசாரிச்சு பார்க்கட்டுமா?''''நீங்க பேச வேண்டாம். அவரோட போன் நம்பரை மட்டும் குடுங்க. நாளைக்குக் காலையில நான் பேசிக்கிறேன். ஏன்னா, இது ஒரு ரகசிய விசாரணை. விஷயம் வெளியே போயிடக் கூடாது,'' என்றார்.''தட்ஸ் ரைட் சார்,'' என்ற இக்பால், ஒரு துண்டு பேப்பரை எடுத்து, மொபைல்போன் நம்பரை எழுதிக் கொடுத்தான். அதை வாங்கி சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார், முத்துக்குமரன்.''சார்... முகிலாவோட மொபைல்போன் எந்த இடத்துல இருக்குங்கிறதை, 'சைபர் க்ரைம் ப்ராஞ்ச்'ல கண்டுபிடிச்சிட்டாங்களா?'' தயக்கமான குரலில் கேட்டான், தருண்.''இல்லை... இனிமேல் கண்டுபிடிக்கிறதுக்கான சாத்தியமும் இல்லை.''''ஏன் சார்?''''முகிலா காணாம போன சம்பவத்துக்கு பின்னாடி, ஏதோ ஒரு பெரிய விவகாரம் இருக்கலாம்கிறது, 'சைபர் க்ரைம் ப்ராஞ்'சோட யூகம்.''''விவகாரமா?''''எஸ்... முகிலா காணாம போகலை; கடத்தப்பட்டிருக்கா. அதுவும் மொபைல்போனுக்காக கடத்தப் பட்டிருக்கான்னு சொல்றாங்க.''முகத்தை அப்பாவித்தனமாக வைத்து, ''அப்படி அவங்க ஒரு முடிவுக்கு வர என்ன காரணம் சார்?'' கேட்டான், தருண்.''முகிலாவோட மொபைல்போனின், ஐ.எம்.ஈ.ஐ., என்ற அடையாள நம்பரை அழிச்சுட்டு, அதுக்கு மேலேயே போலி நம்பரை, 'சூப்பர் இம்போஸ்' பண்ணியிருக்காங்க. இப்படிப்பட்ட தொழில்நுட்பம்லாம் முகிலாவுக்கு தெரிய வாய்ப்பில்லை.''இந்த சம்பவத்துக்கு பின்னாடி, 'ஹைடெக் பீப்பிள்' யாரோ இருக்காங்கன்னு, 'சைபர் க்ரைம் செல் இன்டர்வென்ஷன்' ஆபீசர் தீர்க்கமா சொல்லி, அதை ஒரு அறிக்கையாவும் கொடுத்துட்டார்.''''மேற்கொண்டு, இந்த முகிலா வழக்கை எப்படி சார், விசாரணை பண்ணப் போறீங்க?''''இப்ப, ஐ.சி.யூ.,வில் இருக்கும் புவனேஷ் கொஞ்சம் உடம்பு தேறி, சாதாரண வார்டுக்கு வந்ததும், அவர்கிட்டயிருந்து, ஆழமான விசாரணையில் இறங்கலாமுன்னு இருக்கேன்.''''புவனேஷ் மேல சந்தேகப்படறீங்களா சார்?''''இது சந்தேகம் கிடையாது. முகிலாவைப் பத்தி அவருக்கு சில விஷயங்கள் தெரிஞ்சிருக்கலாம். அது என்னோட விசாரணைக்கு பெரிய உதவியாய் இருக்கும்ன்னு நம்பறேன்.''அதுவரைக்கும் எதுவும் பேசாமல் மவுனமாயிருந்த ஜோஷ், ''சார்... புவனேஷ், தருணுக்கு மட்டும்தான் நண்பன். நானும், இக்பாலும் என்னிக்காவது ஒருநாள் தற்செயலா, அவரைப் பார்ப்போம்.''கல்யாணம் முடிஞ்சதும் போன் பண்ணி, வாழ்த்து சொல்லணும்ன்னு நினைச்சிருந்தோம். அதுக்குள்ளே இப்படியொரு மோசமான சம்பவம் நடந்துடுச்சு. நீங்க வர்றதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட, அதைப் பத்தித் தான் பேசிட்டிருந்தோம்.''ஜோஷிடம் திரும்பி அவனுக்கு பதில் சொல்ல முயன்ற முத்துக்குமரனின் பார்வை, எதிர்புற சோபாவின் பின்னால் உருண்டு கிடந்த அந்த பாட்டிலின் மேல் பதிந்தது; அவருடைய உதட்டில் புன்னகையொன்று பூத்தது.''அது, 'கோல்டன் டிராப்ஸ் விஸ்கி' பாட்டில் தானே?''முத்துக்குமரன் கேட்ட கேள்வியில், சற்றே திடுக்கிட்ட தருண், குனிந்து பார்த்துவிட்டு, அவஸ்தையாய் சிரித்தபடி, தலை அசைத்து, ''ஆமா சார்... மனசு சரியில்லாத நாட்கள்ல நாங்க மூணு பேரும் சாப்பிடுவோம்... சாரி, சார்!'' முத்துக்குமரன் சிரித்தபடியே, ''இப்ப எதுக்காக சாரி சொல்றீங்க... மது அருந்துவது அளவோடு இருக்கணும். அவ்வளவுதான். நானும் கூட, வாரத்தில் ஒருமுறை, வீட்ல சாப்பிடுவேன்.''''இப்ப சாப்டறீங்களா சார்... இது, துபாயிலிருந்து வந்த, விலை உயர்வான விஸ்கி,'' என்றான், இக்பால்.''இந்த, 'பிராண்ட்'டை பத்தி எனக்குத் தெரியும். 'கோல்டன் டிராப்ஸ்' விலை, ரெண்டு லட்சம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். உங்க கூட உட்கார்ந்து மது அருந்த ஆசை தான். ஆனா, இப்ப பணியில் இருக்கேன். சாரி, இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்,'' என சொல்லி எழுந்தார், முத்துக்குமரன்.சோபாவுக்குப் பின்னால் இருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து அவரிடம் நீட்டி, ''நீங்க இதை வீட்டுக்கு எடுத்துட்டு போங்க சார். 'பிரிஜ்'-ல எங்களுக்கு இன்னொரு பாட்டில் இருக்கு,'' என்றான், இக்பால்.''வேண்டாம்; தேங்க்ஸ்... நான் புறப்படறேன். நாளைக்கு காலையில், 'வெல்பேர் அசோஷியேஷன்' தலைவர்கிட்ட, மொபைல்போன்ல உக்கடம் துரை சம்பந்தமாய் பேசிடறேன்,'' முத்துக்குமரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மாடியில் இருந்து, பலமாய் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.தருண், இக்பால் மற்றும் ஜோஷ் அதிர்ந்து போனவர்களாய் மாடியை அண்ணாந்து பார்த்தனர். ''மாடியில் யார் இருக்காங்க?'' கேட்டார், முத்துக்குமரன்.''அது என்னோட அப்பா சார்,'' அவசர குரலில் சொன்னான், இக்பால். பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் பேச்சைத் தொடர்ந்தான், தருண்...''சார்... நாலைஞ்சு நாளாகவே அவருக்கு காய்ச்சல். ஓய்வுல இருக்கணும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார். ஆனா, அவர் பேச்சைக் கேட்காததால, அவரோட அறையை வெளிப்பக்கமாய் தாழ் போட்டிருக்கான், இக்பால். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை இப்படித்தான் கதவைத் தட்டுவார்,'' என்ற தருண், இக்பாலிடம் திரும்பி, ''நீ போய் அப்பாவை பாரு... நான் சாரை அனுப்பிட்டு வர்றேன்,'' என்றான்.வியர்த்த முகமாய் தலையாட்டிவிட்டு, மாடிப்படிகளை நோக்கி இக்பால் போக, வாசல் கதவை நோக்கி நடந்தார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன்.பத்தடி நடந்தவர், முகம் மாறி நின்றார். ''என்ன சார்?'' கேட்டான், தருண்.''ஒரு பெண் அழற மாதிரி சத்தம் கேட்கலை!''— தொடரும்ராஜேஷ்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !