குழந்தைக்கு பணிந்த ஆறு!
கி.பி., 788ல் பிறந்த மகான், ஆதிசங்கரர். கேரளத்திலுள்ள காலடி என்ற ஊருக்கு, இந்த பெயர் அமைய, இவரது, 'காலடி' தான் காரணமாக இருந்தது. இவர், 7 வயது சிறுவனாக இருந்தபோது, தன் தாய் நீராடுவதற்காக, இங்கு ஓடிய பூர்ணா ஆற்றை, தன் காலடிக்கு பணிய வைத்து, அதன் போக்கையே மாற்றினார்.சசலம் என்ற கிராமத்தில் வசித்த, சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதியின் மகன், சங்கரர். இவர்களுக்கு இவ்வூரில் இருந்த, உன்னி கிருஷ்ணனே (சின்னக்கண்ணன்) குல தெய்வம். சங்கரரின் தாய், இவ்வூரிலுள்ள பூர்ணா நதியில் நீராடி, கிருஷ்ணனை தரிசிப்பது வழக்கம்.வயதான காலத்தில் ஆற்றுக்கு நடக்க முடியவில்லை. இது, குழந்தை சங்கரரின் மனதில் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. கண்ணீர் வழிய, தாயின் சிரமம் போக்க கிருஷ்ணரை வேண்டினார்.அப்போது அசரீரி, 'உன் கால் விரலால், நதியிலிருந்து ஒரு கோடு போடு...' என்றது.குழந்தையும் அவ்வாறே செய்ய, நதி, உன்னிகிருஷ்ணன் கோவில் பக்கம் திரும்பி, அவரது காலடியை தொட்டு, சங்கரரின் வீட்டு முன் சென்றது. இதனால், ஆர்யாம்பாளுக்கு நீராடுவதற்கு வசதியாகி விட்டது. சங்கரரின் காலடி பட்டு, நதி திரும்பியதால் இவ்வூர், சசலம் என்ற பெயர் மாறி, 'காலடி' என்றானது.பெற்றவள் சிரமப்படக் கூடாது என்பதற்காக, ஒரு பிள்ளை, கடவுளிடம் ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து, நதியின் போக்கையே மாற்றியது. இதை, இக்காலத்தில், பெற்றவர்களை சிரமப்படுத்தும் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். இதையடுத்து, இவ்வூர் கிருஷ்ணனை, 795ம் ஆண்டு, ஐப்பசி மாதம், திருவோணம் நட்சத்திரத்தன்று, புனர் பிரதிஷ்டை செய்தார், சங்கரர். சுவாமிக்கு, 'திருக்காலடியப்பன்' என்ற பெயர் ஏற்பட்டது.ஒரு சமயம், பிச்சை எடுக்க சென்றார், சங்கரர். அயாசகன் என்பவரின் மனைவி, தன் கணவருக்காக வைத்திருந்த, ஒரு காய்ந்த நெல்லிக்கனியை பிச்சையாக தந்தார். தனக்கென ஏதுமில்லாமல், பிச்சையிட்ட அவளது அன்பு மனம் கண்டு நெகிழ்ந்தார், சங்கரர்.'அம்மா... இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்டவர்கள் வீட்டில் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கு பயன்படுமே...' என, லட்சுமி தாயாரை வேண்டி, ஸ்லோகம் சொன்னார். அப்படி, கனகதாரா ஸ்தோத்திரத்தில், 19வது ஸ்லோகம் பாடிய போது, அவ்வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது.இதைக் குறிக்கும் விழா, அட்சய திரிதியை அன்று, காலடியில் நடக்கும். லட்சுமி தாயாருக்கு, தங்க நெல்லிக்கனி அபிஷேகம் செய்யப்படும். இதை பக்தர்களுக்கு வினியோகிப்பர்; கட்டணம் உண்டு.இங்குள்ள, நமஸ்கார மண்டபத்தில், சந்தான கிருஷ்ணன் சயனித்திருக்கும் வார்ப்பு (பித்தளை பாத்திரம்) உள்ளது. இதில், ஆமணக்கு விதைகள் நிறைந்திருக்கும். அதை, சந்தான கிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்தால், குழந்தை இல்லாதவர்களுக்கு, மழலை பாக்கியம் கிடைக்கும்.எர்ணாகுளம் - திருச்சூர் சாலையில், 27 கி.மீ., துாரத்தில் அங்கமாலி. இங்கிருந்து, 8 கி.மீ., துாரத்தில், உள்ளது காலடி கிருஷ்ணன் கோவில். சென்னை - திருவனந்தபுரம், குருவாயூர் ரயில்கள் அங்கமாலியில் நிற்கும்.தொடர்புக்கு: 93888 62321. தி. செல்லப்பா