உள்ளூர் செய்திகள்

ஊர் கூடித்தேர்... (3)

வீட்டு வேலைக்கு வரும் பெண்களுக்கு ஓய்வோ, விடுமுறையோ தருவதில்லை. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெள்ளி கிழமைகளில், அரை நாள் வெளியே போக அனுமதிப்பர். அப்போது தான் அவர்கள் தங்கள் உறவு,- நட்புகளை பார்க்க முடியும்.உடல் நலமில்லையென்றாலும் ஓய்வு எடுக்க முடியாது. சரியானபடி சிகிச்சையும் தருவதில்லை. வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விமான டிக்கெட் கொடுத்து ஊருக்குப் போய் வர விடுப்பு தர வேண்டும்; அதை செய்வதில்லை.அரபு நாடுகளில், வீட்டு வேலைக்கு வருவோர், தொழிலாளர் சட்டத்தில் உட்படுத்தப்படுவதில்லை என்பதால், விபரீதங்கள் அரங்கேறுகின்றன.பாலியல் சம்பந்தமான ஆக்கிரமிப்பு--, சித்ரவதை போன்றவைகள் வெளியே தெரிந்தால், அவமானம் என்பதால், பெரும்பாலான பெண்கள், புகார் அளிப்பதில்லை. அப்படி புகார் அளிப்பவர்களுக்கு, தீர்வாயத்தில் நியாயம் கிடைக்க, 'எம்பஸி' முற்சிக்கும். அதற்கு எஜமானன் ஒத்துழைத்தால் தான் உண்டு. இல்லையேல் எதுவும் செய்ய முடியாது. பணியாளர் புகார் அளிக்கப் போனால், 'இவள், என் வீட்டில் திருடி விட்டாள்... எவனுடனோ ஓடி விட்டாள்... குழந்தைகளை குரூரமாய் நடத்துகிறாள்...' என, முந்திக்கொண்டு போலீசில் புகார் கொடுத்து, சிறை தண்டனைகள் கிடைக்கச் செய்வர், எஜமானர்கள்.சிறைக்கு அனுப்பப்பட்டால், கை ரேகை எடுத்து, அங்கிருந்தே ஊருக்கு, 'பேக் - அப்' தான். இவ்வாறு, கை ரேகை எடுத்து விட்டால், எந்த வேலைக்கும் விசா எடுக்க முடியாது; உள்ளே திரும்ப வர முடியாது. இதற்கு பயந்தே அடங்கிப் போகும் அவல நிலை உள்ளது.இவற்றை சுமூகமாய் தீர்த்து வைக்க, 'ரீ கன்சல்டேஷன் சென்டரு'க்கு, பணியாளர்களை அழைத்துச் செல்லும், 'எம்பஸி!' அங்கே போலீசின் முன், சம்பந்தப்பட்ட ஸ்பான்சருக்குத் தகவல் கொடுத்து வரச்சொல்வர். இதில் பரிதாபம் என்னவெனில், பெரும்பாலானவர்களுக்கு தங்களின் ஸ்பான்சரின் விலாசம், போன் நம்பர், பெயர் கூடத் தெரிவதில்லை; தெரிந்து வைத்துக் கொள்வதில்லை.ஸ்பான்சர்கள் வந்தால் பேசி, அவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டும், விடுதலையும் பெற்று தருகிறது, 'எம்பஸி!' இல்லாவிட்டால் கொஞ்சம் அவகாசம் கொடுத்து சரியாகா விட்டால், 'எமர்ஜென்சி சர்டிபிகேட்' விண்ணப்பித்து, (அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள், சிக்கல்கள்!) அது கிடைத்தவுடன் பணியாளர்களை ஊருக்கு அனுப்பி வைக்கிறது, 'எம்பஸி!'பணியாளர்களின் சாப்பாடு, டிக்கெட் செலவுகளை, 'எம்பஸி'யே ஏற்கிறது. 'பிரான்ட்லைனர், தாரல் -அல்- ஸபா, மக்கள் சேவை மய்யம்' அமைப்புகளை போல், இந்திய அசோசியேஷன்களும், பரந்த உள்ளம் படைத்தோரும் உதவுகின்றனர். நாம் அறிந்த பிரபலங்கள் எல்லாம் பொது இடங்களை போலவே தனிமையிலும் பழகுவர் என்று சொல்ல முடியாது. அகில இந்திய அளவில் தயாரித்து வெளியிடும், 'பிரன்ட்லைனர்ஸ்' ஆங்கில புத்தகத்தை, குவைத்தில், அகில இந்திய அளவில் புகழ்பெற்ற வி.ஐ.பி.,க்களை அழைத்து வெளியிட்டால், தென்- மற்றும் வட மாநிலத்தவர்களை அரவணைக்க முடியும். இதற்காக, முதல் புத்தகத்திற்கு, ப.சிதம்பரம், டி.என்.சேஷன், மன்மோகன் சிங் இவர்களில் யாரையாவது அழைக்கலாம் என முடிவாயிற்று.மூவருமே இரும்பு மனிதர்கள்! மூவரையுமே எனக்கு முன், பின் அறிமுகமில்லை. அந்துமணி தயவால் மூத்த பத்திரிகையாளர் நுாருல்லா மூலம் முதலில், ப.சிதம்பரத்தை சந்தித்தோம்.சிதம்பரம் வர சம்மதித்தாலும், அவர் வரும் தேதி தெரியாமல் ஏற்பாடுகள் செய்வதில் சுணக்கம் ஏற்படவே, துணிச்சலுடன் போன் செய்தேன்.'நான் தான் வரேன்னு சொல்லிட்டேனில்லே... எதுக்காக அடிக்கடி போன் பண்ணி பணத்தை விரயம் பண்றீங்க...' என்றார்.புத்தக வெளியீடு தவிர, வேறு எந்த நிகழ்ச்சியையும் என் அனுமதியில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருந்தார், சிதம்பரம். அதுமட்டுமின்றி, அங்கு அவரது இரண்டு நாட்களுக்கான நிகழ்ச்சி நிரலை முன்பே கேட்டு -பெற்று, அந்த நேர அட்டவணையை அப்படியே கடைப்பிடித்து ஆச்சரியப்படுத்தினார்.அவரது கம்பீரமும், துணிச்சலும் மிரள வைத்தது.'குவைத்தின் அரச பரம்பரையைச் சார்ந்த ஒருவரை சந்திக்கலாமா?' என்று அவரிடம் கேட்டேன். 'சரி... எப்போ அவர் வர்றார்?' என்றார்.'அவர் இங்கு வரமாட்டார், சார். நாம் தான் அவரைப் போய் பார்க்கணும்...' என்றேன்.'ஏன், எதுக்காக... நான் ஒன்றும் அரசாங்க அழைப்பில் வரவில்லையே! இது பிரைவேட் விசிட். அதனால், யாரையும் போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் அவர் வந்து என்னை பார்க்கட்டும்...' என, சிதம்பரம் சொன்னதும், அருகில் இருந்த இந்திய துாதர், ஆடிப்போய் விட்டார். சிதம்பரம் தனிமையில் கடுகடுவென்றிருந்தாலும், பொது இடங்களிலும், கூட்டத்திலும், பொறுமையாக செயல்பட்டார்; அவரை சந்திக்க விரும்பியவர்களை இன்முகத்துடன் வரவேற்று பேசினார். ஆனால், யாரிடமிருந்தும் எந்த பரிசுப் பொருளும் பெற்றுக் கொள்ளவில்லை. டி.என்.சேஷனும் கூட இதே ரகம் தான்.குவைத் வர, அவரும் எந்த, 'டிமாண்ட்டும்' பண்ணவில்லை.'துணைக்கு என் மனைவியும் வந்தால் உதவியாக இருக்கும். விசா, -விமான டிக்கெட் தர முடியுமா...' என்று கேட்டார். பட்ஜெட்டை பற்றி யோசிக்க, 'சரி, விசா மட்டும் அவளுக்கும் சேர்த்து எடுத்திருங்க. டிக்கெட் செலவை நானே ஏத்துக்கறேன்...' என்றார்.அவரின் பெருந்தன்மைக்கு தலைவணங்கி, அவரது மனைவிக்கும் டிக்கெட் வழங்கினோம்.நேரந் தவறாமை விஷயத்தில் அவர் ரொம்ப கறார். ஒரு விழாவில், நிகழ்ச்சியில் குறித்தபடி இவரை மேடைக்கு அழைக்காமல், நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.ஏற்கனவே விபரம் சொல்லியும் அசட்டையாக இருக்கின்றனரே என்ற கோபத்தில், அவரது முகம் இறுகிற்று; கண்களில் சிகப்பு. அடுத்த நிகழ்வுக்கு நேரப்படி போக வேண்டும் என்பதால், பொறுமை இழந்த சேஷன், கைக்கடிகாரத்தை பார்த்தார்; என்னை பார்த்தார்.எங்களுக்கோ பதட்டம். அங்கு என்ன நடக்குமோ என, திகில்! எழுந்தார், சேஷன்...— தொடரும் - என். சி. மோகன்தாஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !