உள்ளூர் செய்திகள்

நான் வந்த பாதை! (12)

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ். ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!ராஜா தேசிங்கு படத்தில், என்னுடன் ஜோடியாக நடிக்க மறுத்தார், பானுமதி. அதற்கு அவர் கூறிய காரணம்...'இப்போது தான், அண்ணாதுரையின் கதைக்கு, கருணாநிதியின் வசனம் எழுதிய, ரங்கோன் ராதா படத்தில், எஸ்.எஸ்.ஆருக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அவருக்கு ஜோடியாக, ராஜசுலோசனா நடித்திருக்கிறார்.'படம் வெளிவந்து, பார்த்தவர்கள் பாராட்டும்படி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து, இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நான் நடித்தால், அம்மாவும், பிள்ளையாகத்தான் படம் பார்ப்பவர்கள் நினைப்பரே தவிர, காதலர்களாக ஏற்க மாட்டார்கள். ஆகவே, படத்தில் எனக்கு பதிலாக வேறு எந்த நடிகையையாவது போட்டு எடுங்கள்...' என்று, கண்டிப்பாக சொல்லி விட்டார். செய்வதறியாமல் திகைத்தார், செட்டியார்.அச்சமயம், காரில் வந்து இறங்கினார், என்.எஸ்.கிருஷ்ணன்.'என்ன பிரச்னை, இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லையா...' என கேட்டார்.அழாத குறையாக சோகத்துடன் பிரச்னையை சொல்லியிருக்கிறார், லேனா செட்டியார்.'இது என்ன பெரிய பிரச்னையா? எம்.ஜி.ஆருக்கு ஜோடியா, பானுமதியையும், எஸ்.எஸ்.ஆருக்கு இணையா பத்மினியையும் நடிக்க வைக்கலாமே. ம்... நேரமாகுது. எல்லாரும் 'மேக் - அப்' போட்டு படப்பிடிப்புக்கு தயாராகுங்க...' என்றார்.இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டோம். படப்பிடிப்பு வேலை துவங்கியது. எவ்வளவு பெரிய பிரச்னையை எளிதாக தீர்த்து விட்டார், என்.எஸ்.கே.,ஆனந்தக் கண்ணீரோடு, என்.எஸ்.கே.,வின் காலை தொட்டு கும்பிட்டார், லேனா செட்டியார்.'ம்... அதெல்லாம் கூடாது, எழுந்திருங்க. நான் ஒண்ணும் பரமாத்மா இல்ல. வெறும் கிருஷ்ணன் தான்...' என்று, சொல்லி சிரிக்க வைத்தார், என்.எஸ்.கே.,படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. ஒரு காதல் காட்சியில் நானும், பத்மினியும் இணைந்து, 'வனமேவும் ராஜகுமாரி, வளர் காதலர் இன்பமே தாராய்...' என, ஆடலுடன் பாடி மகிழ்ந்து கொண்டிருப்போம். இதற்கிடையில், எம்.ஜி.ஆரும், பானுமதியும் மறைந்திருந்து, எங்கள் ஆடல் பாடல் விளையாட்டை கவனித்துக் கொண்டிருப்பர். பாடல் முடியும்போது, எம்.ஜி.ஆர்., பெண் மாதிரியும், பானுமதி ஆண் மாதிரியும் அதே பாடலை பாடி, எங்களை கேலி செய்வர். நானும், பத்மினியும் அந்த இக்கட்டான நிலையில் நாணப்பட்டு சமாளிப்போம்.பிறகு, இருவரும் எங்களை கட்டி அணைத்து வாழ்த்துவர். அக்காட்சி மிக சிறப்பாக அமைந்து, ராஜாதேசிங்கு படத்துக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.ஒருமுறை, சேலம் ரத்னா ஸ்டூடியோவில், எம்.ஏ.வி., பிக்சர்ஸ், பெரும் செலவில், நட்சத்திரக் குவியல்களை போட்டு, ராமாயணம் படத்தை தயாரித்துக் கொண்டிருந்தது. நான், டி.கே.எஸ்., குழுவில் இருந்தபோது, ராமாயணம் நாடகத்தில், பரதனாக மிகச்சிறப்பாக நடிப்பேனென்று பெயர்.ஆகவே, இப்படத்தில், நான் பரதனாக நடிக்க வேண்டுமென, எம்.ஏ.வேணு, ஏ.பி.நாகராஜனுடன், என்னை அணுகி கேட்டனர்.'தற்சமயம், புராண படங்களில் நான் நடிப்பதில்லை...' என்ற விளக்கத்தை கூறினேன். அவர்களும் என்னை வற்புறுத்தவில்லை.அடுத்த சில நாட்களில், எம்.ஏ.வேணு, என்னிடம், 'ஒரு சமூகப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்...' என்றார். நானும் ஒப்புக்கொண்டு, கதைப் பற்றி விவாதிக்க, அடுத்த வாரமே சேலம் சென்றேன்.இப்போது ஒரு சில நடிகர்களைத் தவிர, பெரும்பாலும் இயக்குனர்களை நம்பித்தான் படத்தை வினியோகஸ்தர்கள் வாங்குகின்றனர்.அச்சமயத்தில், நடிகர்களை வைத்து தான் எல்லாமே. எம்.ஜி.ஆர்., படமா, எஸ்.எஸ்.ஆர்., படமா, சிவாஜி கணேசன்நடித்த படமா?இப்படி கணக்கு போட்டுத்தான், படம் விலை போகும். ஆகவே, ஒரு படத்தில் நாங்கள் நடிக்கும் முன், கதையில் முழு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நானும், எம்.ஜி.ஆரும், கதை விஷயத்தில் கவனமாக இருப்போம். எம்.ஏ.வேணு அழைப்பை ஏற்று, சேலம் சென்ற எனக்கு, அங்கே அவர்கள் சொன்ன கதை பிடிக்கவில்லை. சிந்தித்துக்கொண்டே இருந்தேன்.இச்சமயத்தில், சேலத்தை அடுத்த ராசிபுரத்தில், தேவி நாடக சபையினர் முகாமிட்டு நாடகங்களை நடத்தி வந்தனர். அதன் உரிமையாளர், கே.என்.ரத்தினம். ஏற்கனவே, எனக்கு அறிமுகமானவர்.சேலம் வந்த அவர், ஸ்டூடியோவில் என்னை பார்த்து, 'தம்பி, நீ ஒரு நாள் எங்க நாடகத்துக்கு தலைமை வகித்தால், நல்ல வசூலாகும். இப்போது, சிரமத்தில் தான் நாடகக் குழுவை நடத்தி வருகிறேன்...' என்றார்.சரி என, ஒருநாள் குறித்து கொடுத்தேன்.அந்நாளில் நான் நாடகத்துக்கு தலைமை வகிக்க, ராசிபுரம் புறப்பட்டபோது, எம்.ஏ.வேணுவிடம், 'நீங்களும் வாருங்கள். கதையைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம்...' என்றேன். அவரும் என்னுடன் வந்தார். அங்கே தான், 'முதலாளி' நாடகம் நடைபெற்றது.'முதலாளி நாடகக் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதையே படமாக்கலாம். வெற்றிகரமாக அமையும்...' என்றேன்.எம்.ஏ.வேணுவும் ஒப்புக்கொண்டு, 'நீங்களே பேசி முடியுங்கள்...' என்றார்.நல்ல தொகை வாங்கிக் கொடுத்தேன். அது, அந்த நாடக குழுவினருக்குப் பெரும் உதவியாக இருந்தது. — தொடரும்.நான் சிறு வயதிலிருந்தே, ஈ.வெ.ரா.,வின் தொண்டன். அண்ணாதுரையின் தம்பி. ஜாதி, மதத்தில் நம்பிக்கை இல்லாதவன். ஆகவே, என் கொள்கைக்கு விரோதமான புராண படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்து, அதன்படியே இதுவரை லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறேன். அதனால், இன்றைய கணக்குப்படி பல கோடிகள் நான் நஷ்டப்பட்டிருக்கிறேன்.'கழகத்துக்காக என் பணத்தை செலவு செய்தவன் என, பெயர் பெற்றிருக்கிறேன். கழகத்துக்காக எத்தனையோ இழப்புகளை ஏற்றுக் கொண்டவன் என, எல்லா கட்சியினரும் ஏற்கும் அளவுக்கும் வாழ்ந்து வந்தேன்!' எஸ்.எஸ்.ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !