உள்ளூர் செய்திகள்

அவர்கள் காத்திருக்கின்றனர்!

''கோபத்த கொறச்சுக்கங்க. உங்கள கவனிச்சுக்க இனி, நா இருக்க மாட்டேன்; அதனால, இனிமே நீங்க தான் எல்லா விதத்திலேயும் அனுசரிச்சு போகணும். உங்களுக்கு பசி பொறுக்காது; கைக்குழந்தைய பாத்துக்குற மாதிரி, இத்தனை வருஷமா உங்கள கவனிச்சுக்கிட்டேன். இப்ப, இப்படி நிராதரவா உங்கள விட்டுட்டுப் போகப் போறேன்,'' என, நீர் கோத்த கண்களுடன், திக்கித் திணறி கூறிய, சர்மாவின் மனைவி, அடுத்த சில வினாடிகளில் கண்களை மூடி விட்டாள்.வீடு நிறைய உறவினர்கள் இருந்ததால், மனைவியின் மறைவு சர்மாவை அவ்வளவாக பாதிக்கவில்லை. வந்திருந்த கூட்டம் முழுவதுமாய் கலைந்து, வீட்டில் சர்மா, அவருடைய மகன், மருமகள் மற்றும் பேரன் என்றான பின் தான், பிரச்னை ஒவ்வொன்றாய் தலை தூக்க ஆரம்பித்தது.மனைவி இருந்த வரை, சமையல் அறைப் பக்கம் எட்டிக் கூட பார்க்காத மருமகள், இப்போது, புதிதாக அந்த வேலையையும் செய்ய வேண்டியிருந்ததால், தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டாள்.தினமும், காலையில் சர்மாவிற்கு ஒரு டம்ளர் பால் கொடுத்து விடுவாள். சூடான அந்த வெண்திரவத்தை குடித்து, பசி ஆறினாலும், சிறிது நேரத்திலேயே அவருக்கு பசி வயிற்றைக் கிள்ளும். தண்ணீரைக் குடித்து, பசியை அடக்கிக் கொள்வார். இனியும், தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை வந்ததும், மிகவும் தயக்கத்துடன், சமையல் அறைப் பக்கம் தலையை நீட்டுவார்.'இப்படி பறந்தா, உங்களுக்கு பயந்து காய்கறியெல்லாம் சீக்கிரமா வெந்துடுமா என்ன... மாமியாருக்கு சமையல் வேலை மட்டும் தான். அதனாலே, 'டான்'னு, 9:00 மணிக்கு உங்க தட்டுல சாப்பாடு விழும்.'எனக்கு சமையல் வேலை மட்டுமில்லே, ராத்திரி முழுவதும் பச்சக் குழந்தையோட கண் முழிச்சு, உங்க பிள்ளைக்கும் வேலை செஞ்சு, இதோட வெளி விவகாரங்கள எல்லாம் கவனிச்சுட்டு, சமைக்க ஆரம்பிக்கிறதுக்குள்ள உயிர் போகுது. இதுல, பொழுது விடியறதுக்கு முன், சாப்பிடுறதுக்கு பறந்தா எப்படி... இனிமே, உங்க சாப்பாட்டு நேரத்த, 10:00 மணிக்குன்னு மாத்திக்குங்க...' என, சற்றும் பிசிறில்லாமல் ராணுவ தளபதியாய் உத்தரவு போட்டு விட்டாள் மருமகள்.பாவம் சர்மா, 10:00 மணிக்குள் பசி தாங்க முடியாமல் ரொம்பவே சுருண்டு விடுவார். அவர்கள் வீடு நகர்புற விரிவாக்க பகுதியில் இருந்ததால், இரண்டு இட்லி சாப்பிட்டு பசியாறக் கூட, பக்கத்தில் ஓட்டல் ஏதும் இல்லை. 'கணவனை இழந்த பெண்களின் வாழ்க்கை மட்டுமல்ல, மனைவியை இழந்த ஆண்களின் வாழ்க்கையும் நரகம் தான்...' என, சர்மாவிற்கு தோன்ற ஆரம்பித்திருந்தது.காலை மணி, 10:20 -''அப்பா... சாப்பிட வாங்க,'' என்று மகன் ரகு கூப்பிட, சாப்பாட்டு மேஜைக்குப் போனார் சர்மா. மிதமிஞ்சிய பசியில், காலியான வயிற்றில் இறங்கிய சாம்பார் சாதத்தின் காரம் தாங்காமல், மடமடவென்று தண்ணீரைக் குடிக்க, புரை ஏறி, மூச்சுத் திணறி, உள்ளே சென்ற சாதம், சாப்பாட்டுத் தட்டில் வேகமாய் வந்து விழுந்தது.ருத்ர தாண்டவமாடிய மருமகள், ''கருமம்... இப்போ இந்த வாந்தியையும் நான் தான் அள்ளணுமா...'' என்று கோபப்பட்டவள், கணவனைப் பார்த்து, ''உங்களுக்கு கழுத்தை நீட்டியதற்கு இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கணும்ன்னு என் தலையில, அந்த கடவுள் எழுதியிருக்கானோ... நான் முடிவா சொல்றேன்... ஒண்ணு, இந்த வீட்லே நான் இருக்கணும்; இல்லேன்னா உங்க அப்பா இருக்கணும்.''உங்கப்பாவுக்கு பணிவிடை செய்ய, என்னால முடியாது. எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கு; அதுல எதுலயாவது கொண்டு போய் சேத்துடுங்க. அப்படி சேர்க்க இஷ்டமில்லேன்னா நீங்க, உங்க அப்பாவோட இருங்க; நான், என் குழந்தைய தூக்கிட்டு, என் அம்மா வீட்டுக்கு போயிடுறேன்,'' என்று சதிர் ஆட, ரகு என்ற கொட்டில் பசு, வாயை திறக்கவில்லை.அப்படியே குறுகிப் போனார் சர்மா. சட்டென்று எழுந்து, குழாயடிக்கு சென்று வாய் கொப்பளித்து, முகம் கழுவி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவர், ''மன்னிச்சுடும்மா... இதோ ஒரே நிமிஷத்துல இடத்தை சுத்தப்படுத்திடுறேன்... ரொம்ப பசி மிஞ்சிப் போய் சாப்பிட்டதாலே தான் இப்படி ஆயிடுச்சு,'' என்றார்.''என்னது... பசி மிஞ்சிப் போச்சா... கள்ளிச்சொட்டா ஒரு லிட்டர் பாலை குடிச்சிட்டு, பட்டினின்னு சொல்ல என்ன திமிர் இருக்கணும்... எங்கிட்டேயே இப்படி சொன்னீங்கன்னா, வெளியே என்னவெல்லாம் சொல்றீங்களோ... அப்படி என்ன பசி... லபக் லபக்ன்னு அள்ளிப் போட்டுக்கணுமா... வயசானா ஆகாரத்தை குறைச்சுக்கணும்; தலகாணிக்கு பஞ்சு அடைக்கற மாதிரி, திணிச்சுக்கக் கூடாது; புரியுதா?''மருமகள் பேசிக் கொண்டே போக, பதில் சொல்லாமல் மேஜையை சுத்தப்படுத்தினார் சர்மா. இதை எதையும் ரகு காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.சிறிது நேரத்தில், ரகு அலுவலகம் சென்று விட, மருமகளும் தன் அறைக்குள் போய் விட்டாள்.தன் உடமையாகிய இரண்டு வேட்டி, சட்டையை ஒரு துணிப் பையில் எடுத்து வைத்தவர், 'என்னைத் தேட வேண்டாம்...' என்று எழுதி, மேஜை மேல் வைத்து விட்டு புறப்பட்டார்.அடுத்த தெருவிலுள்ள நண்பர் பரமசிவத்திடம் சொல்லி விட்டு புறப்படலாம் என்று எண்ணி, அவர் வீட்டிற்குச் சென்றவர், நடந்தவற்றை சொல்லி, அழுதார்.''சர்மா... மனசை தளர விடாத; உன்னைப் போல தான் என் நிலைமையும்! என் மனைவி போனதுக்கு அப்புறம், என் கிராமத்து வீட்டுல தான் தங்கியிருந்தேன். உறவுக்காரப் பெண் அபிராமி, வீட்டை கவனித்து கொண்டதுடன், எனக்கும் சமைத்துப் போட்டாள்.''திடீரென ஒருநாள், என் மகனும், மருமகளும் வந்து தேன் ஒழுகப் பேசி, வீட்டு வேலை செய்ய அழைச்சுட்டு வந்துட்டாங்க.''அபிராமி கூட சொல்லுச்சு... 'அண்ணா... இவங்களை நம்பி போகாதீங்க'ன்னு! நான் தான் கேக்கலே. இப்ப தான் எனக்கு புத்தி வந்திருக்கு. நானும் இன்னும் ஒரு வாரத்தில அங்க வந்துடுவேன். நீ போய் என் வீட்லே தங்கிக்கோ. அபிராமி உன்னை நல்லா கவனிச்சுப்பா,'' என்று சொல்லி, வழிச் செலவிற்கு பணமும் கொடுத்து, அனுப்பி வைத்தார் பரமசிவம்.சர்மா வந்ததில் அபிராமிக்கு ரொம்பவும் சந்தோஷம். அவரை, சகோதரனுக்கும் மேலாக கவனித்துக் கொண்டாள். சொன்னபடியே மறுவாரமே வந்து சேர்ந்தார் பரமசிவம்.''ஏண்டா பரமசிவம்... நம்மைப் போன்ற அனாதைகளை எல்லாம் ஒன்று சேர்த்து, இந்த வீட்டுலயே முதியோர் இல்லம் ஆரம்பிச்சுடலாமா?'' என்று கேட்டார் சர்மா.அதை, பரமசிவமும், அபிராமியும் ஏற்றுக் கொண்டனர். விஷயம் வெளியே கசிந்ததும், 10க்கும் மேற்பட்டோர் அவர்களுடன் இணைந்தனர். இந்த கூட்டுக் குடும்பத்தில் ஜாதி, மதம் கிடையாது; அன்பும், பாசப்பிணைப்பு மட்டுமே உண்டு. அங்கிருந்தோர், அபிராமியின் சமையலை ஒரு பிடி பிடித்து விட்டு, பணம் சம்பாதிக்க, அவரவருக்கு தெரிந்த வேலைகளில் ஈடுபட, புறப்பட்டு சென்று விடுவர்.வீரண்ணன், வயல் வேலைக்கும், மாடசாமி, பஸ் ஸ்டாண்டில் சரக்குகளை ஏற்றி, இறக்கவும், சுலைமான், இளநீர் வியாபாரத்துக்கும், அகோரம், தோட்ட வேலைக்கும், சர்மா, குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்க, மளிகை கடையில் கணக்கர் வேலை செய்தார் பரமசிவம். இப்படி மனம் உவந்து ஆளுக்கு ஒரு வேலையை பகிர்ந்து, வஞ்சனையின்றி உழைத்து, வருமானத்தை அப்படியே அபிராமியிடம் கொடுத்து விடுவர். விடுமுறை நாட்களில் அபிராமியிடம் சமையல் கற்றுக் கொள்வர்.அவர்களின் மனம் இணைந்த ஒற்றுமையான உழைப்பின் பலனாக, வசதிகள் பெருக ஆரம்பித்தன. இரண்டு ஜோடி கறவை மாடுகள் கொட்டிலை அலங்கரிக்க, அகோரத்தின் கை வண்ணத்தில் வீட்டைச் சுற்றிலும் காய்கறிகளும், பூக்களும் அபரிமிதமாக விளைந்தது. பச்சை பசேலென்று மார்க்கெட்டில் வந்திறங்கும் இவர்கள் வீட்டு தோட்டத்துக் காய்கறிகளுக்கு ஏகப்பட்ட மவுசு.சாலை ஓரத்தில் வீடு இருந்ததால், ஏழை மற்றும் வழிப்போக்கர்கள் வீட்டுத் திண்ணையில் வந்து இளைப்பாறுவர். அப்படி வருவோர், அபிராமியின் அன்பான, வற்புறுத்தலுக்கிணங்கி வயிறார உண்டு செல்வர்.இங்கிருப்போர், எக்காரணத்தைக் கொண்டும், யாரிடமும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லையென்றும், எந்தவொரு சூழலிலும், தங்களின் கடந்த காலத்து உறவுகளுடன் சேருவதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தனர்.நாட்கள், மாதங்களில் கரைந்து, மாதங்கள் ஆண்டுகளில் ஓடிக் கொண்டிருந்தன. கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள் அபிராமி.சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார் பரமசிவம். உடல் நலக் குறைவால், ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் வீரண்ணன். அப்போது, வாசலில் மாருதி கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவர், மிகுந்த தயக்கத்துடன், ''சார்... வீட்டில யாரும் இல்லயா?'' என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வர, சத்தம் கேட்டு, வெளியே வந்து, ''யாரு நீங்க... உங்களுக்கு என்ன வேணும்?'' என்று கேட்டார் வீரண்ணன். ''சார்... நாங்க பெங்களூரிலிருந்து வர்றோம். நாங்க வந்த வேளை சரியில்ல போலிருக்கு... திடீரென ஏற்பட்ட புயல் மழைக்குள் மாட்டிக்கிட்டோம். எல்லா ஓட்டலும் அடச்சுக்கிடக்கு. பசி எத்தனை கோரமானதுங்கிறது இப்பத் தான் புரியுது. அதிகார பிச்சை கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க; தயவு செய்து எங்க மூணு பேருக்கும் கொஞ்சம் சாப்பாடு தந்தா, உங்களுக்கு கோடி புண்ணியம்,'' என்று கையெடுத்து கும்பிட்டார் அந்த நபர்.''என்ன சார் இது... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க... சாப்பாட்டிற்கு தயவு எதற்கு... உள்ளே வந்து உட்காருங்க,'' என்று சொல்லி, சமையலில் ஈடுபட்டிருந்த பரமசிவத்திடம் ஏதோ சொல்ல, அவர் தயாரிப்பில் மும்முரமானார்.படு சுத்தமாக இருந்த சாப்பாட்டு அறையின் ஜன்னல்களில் கட்டியிருந்த வெட்டிவேர் தட்டியிலிருந்து, இதமான வாசத்துடன் குளுமையான காற்று வீசியதை ரசித்தபடி அமர்ந்திருந்தனர், வந்தவர்கள்.அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த சர்மா, அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு, தலையில் முண்டாசு கட்டியபடி, பம்பரமாய் சுழன்று பரிமாறினார்.தலையில் முண்டாசும், தாடி, மீசையும் வளர்ந்து, அவர் யார் என்பதே, அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உருமாறி இருந்தார். அவசர அவசரமாக சாப்பாட்டை உள்ளே தள்ள ஆரம்பித்தனர் விருந்தினர். அந்த பெண்ணுக்கு சட்டென்று தொண்டை கமறி புரை ஏற, உள்ளே சென்ற அத்தனையையும் படபடவென்று வாந்தி எடுக்க, பரிமாறிக் கொண்டிருந்த சர்மாவின் சட்டையெல்லாம் வாந்தி! சட்டென்று, தன் சட்டையை கழற்றி அவள் வாய் அருகே பிடித்து, ''ஆசுவாசப்படுத்திக்கோம்மா...'' என்று இதமாய் தலையை தட்டிக் கொடுத்தார் சர்மா. தெப்பமாய் நனைந்து விட்ட சட்டையை சிறிதும் அருவருப்பின்றி எடுத்துப் போய் குழாயடியில் வைத்து விட்டு, ஒரு துண்டை எடுத்து வந்து அவளிடம் கொடுத்ததுடன் நில்லாமல், ''இந்தாங்கம்மா... வெது வெதுன்னு வெந்நீர் இருக்கு; வாயை இந்த பாத்திரத்தில் கொப்பளிச்சுக்கங்க,'' என்று சொல்லி, ஒரு பேசினை அவள் வாயருகே நீட்டினார்.''வயிறு ரொம்ப காஞ்சுட்டுதுன்னா இப்படித் தான்... உள்ளே போன கவளம் வெளியே வந்துடும்; வயது ஏற ஏற, அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடணும்,'' என்று, இதமாய் அவளுக்கு அறிவுரை கூறினார்.''உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே. இருங்க நானே போய் வாய் கொப்பளிச்சுட்டு வரேன்,'' என்று எழப் போனவளை, மிக சுவாதீனமாய் தோளைத் தொட்டு அமர்த்தினார்.சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர்கள் மகன், ''டாடி... நான், என் கையில 'டேட்டூ' குத்திப்பேன்னு சொன்னதற்கு, 'அதெல்லாம் கூடாது; ஹிப்பிக்கள் தான் அது மாதிரி கையிலே, உடம்புல படம் வரஞ்சுப்பாங்க'ன்னு சொல்லி என்னைத் திட்டினியே... இந்த தாத்தாவ பார்... எத்தனை அழகா கையில, 'மணி சர்மா'ன்னு, 'டேட்டூ' குத்திட்டிருக்கார்; இவர் என்ன ஹிப்பியா...'' என்று கூற, அவன் பெற்றோர் வேகமாக , 'டேட்டூ' குத்திய கையைப் பார்த்தனர்.வாந்தியால் நனைந்த சட்டையை கழற்றி விட்டு, வெற்றுடம்போடு வந்ததின் விளைவு!சர்மாவின் மனதில் திடீரென ஒரு மின்னலடிக்க, ''இதோ வந்துடறேன்...'' என்று சமையல் அறைக்குள் விரைந்து, பரமசிவத்திடம் ஏதோ சொல்லி, பின்பக்கமாக சென்று மறைந்து கொண்டார்.பிரமையிலிருந்து விடுபட்ட ரகுவும், அவன் மனைவியும், வீரண்ணனிடம், ''சார்... எங்களுக்கு சாப்பாடு பரிமாறினாரே ஒரு பெரியவர்... அவர் எங்கே? நாங்க அவரைப் பாக்கணும்,'' என்றனர்.''அவரா... அவர் அப்பவே போயிட்டாரே...'' என்றார் வீரண்ணன்.''எங்கே போனார்...'' என்று பரபரத்தான் ரகு.''எங்கேன்னு சொல்றது; காலையில, மளிகை கடையில கணக்கு எழுதுறது, மாலையில், பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பதுன்னு ஏதாவது வேலை செய்துட்டே இருப்பார்; இப்ப என்ன வேலை விஷயமாக வெளியே போயிருக்காரோ தெரியல,'' என்றார் வீரண்ணன்.''சார் அவர் எங்கேயிருந்து வந்தார்; இங்க எத்தனை வருஷமா தங்கி இருக்கார்ன்னு சொல்ல முடியுமா?'' என்றான் ரகு.''அவர், எங்கிருந்து வந்தார், அவர் குடும்பம், குலம் எதுவும் எனக்கு தெரியாது,'' என்றார்.அவன் குழம்பிப் போய் நிற்கையில், ''சார்... இதை சாப்பாட்டிற்காக வைச்சுக்கங்க,'' என்று கூறி, நாலு நூறு ரூபாய் நோட்டுகளை, பரமசிவத்திடம் நீட்டினாள் ரகுவின் மனைவி. பதறிய பரமசிவம், ''அம்மா... மத்தவங்களோட பசியை போக்குறது தெய்வ காரியத்துக்கு சமானம். அதுக்குப் போய் காசு வாங்கினா அது மகா பாவம்,'' என்று கூறியதை கேட்டு, செய்வதறியாது திகைத்துப் போனாள்.''சார்... நா பெங்களூர்லே வேலை செய்யறேன்; இப்போ லீவுலே, சொந்த ஊரான மதுரைக்கு போயிட்டு இருக்கோம். இதோ... ரெண்டு இடத்து முகவரியும், போன் நம்பரும் இதிலே இருக்கு. பெரியவர் வந்த உடனே, தயவு செஞ்சு எனக்கு போன் செய்யுங்க. ரொம்ப ஆவலா, உங்க போனுக்காக காத்திட்டு இருப்பேன்; மறந்துடாதீங்க சார் ப்ளீஸ்,'' என்றான் ரகு.''சரி... நீங்க புறப்படுங்க,'' என்று பட்டென்று பரமசிவம் சொல்ல, அவர்கள் புறப்பட்டனர்.கார் புறப்பட்டு சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்ட சர்மா, தோட்டத்தில் இருந்து உள்ளே வந்தவர், ''பரமு... இன்னிக்கு உன் சமையல் அட்டகாசம்டா. ஏய்... எல்லாரும் வாங்கப்பா சாப்பிடலாம்,'' என்று உற்சாக குரல் கொடுக்க, எல்லாரும் சாப்பாடு மேஜையில் ஆஜராகி, சாப்பிட ஆரம்பித்தனர்.சாரதா விஸ்வநாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !