இது உங்கள் இடம்!
கறையை கழுவினால் கை நிறைய பணம்!சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது, அபார்ட்மென்ட் ஒன்றில், ஒருவர், கார்களை தண்ணீர் ஊற்றி கழுவிக் கொண்டிருந்தார். என் மாமாவிடம், 'இப்படி கார்களை கழுவி இவர் என்னத்த பெருசா சம்பாதிச்சுடப் போறாரு... ஒரு காரைக் கழுவ, 10, 20 ரூபாய் கொடுப்பாங்க; அதை வைத்து எப்படி தான் குடும்பம் நடத்துவாரோ...' என்றேன்.அதற்கு என் மாமா, 'என்ன அப்படி சொல்லிட்டே... ஒரு கார் கழுவ, ௧௦௦ ரூபாய்; தினமும் பத்து, பதினைந்து கார்கள் கழுவினால், சாதாரணமாக, 1,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதனால், அவர் கஷ்டமில்லாமல் குடும்பம் நடத்த முடியும். இதனால, படித்த இளைஞர்கள் கூட கவுரவம் பார்க்காமல், இத்தொழிலைச் செய்றாங்க. பெரும்பாலான அபார்ட்மென்ட்வாசிகள் சொந்தமாக கார் வச்சிருப்பதால், இவர்களது காட்டில் பணமழை கொட்டுது. 'அதே போல், இப்போ பல வீடுகளில் வண்ண மீன்கள் வளர்ப்பதும் பேஷனாகி விட்டது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, வண்ண மீன்களை வளர்க்கிறாங்க. அவங்க மீன் தொட்டியை சுத்தம் செய்ய அசூசைப்படுவதால், அதற்கும் சில நபர்கள், நூறு ரூபாய் கட்டணத்தில் சுத்தம் செய்து கொடுக்கறாங்க. இப்படி சுலபமாக செய்யக் கூடிய பல தொழில்கள் செய்து சம்பாதிக்கிறாங்க. 'ஒயிட் காலர் ஜாப்' ஆசாமிகள், பந்தாவுக்காக, 'டிப்ஸ்' கொடுப்பதால், நகரத்தில் கவுரவம் பார்க்காமல், கறைகளை கழுவி, தினம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர் வேலையில்லா பட்டதாரிகள்...' என்றார். இதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் வாய் பிளந்தேன்.கவுரவம் பார்க்கா விட்டால், ஆயிரம் வேலைகள் கொட்டிக் கிடக்கிறது என்ற கூற்று உண்மை தான் என்று புரிந்தது.— ஏ.எஸ்.யோகானந்தம், கலிங்கியம்.சிவப்பழகு கிரீமா... உஷார்!என் தோழி, தோல் மருத்துவராக பணியாற்றுகிறாள். சமீபத்தில் அவளை சந்தித்து, பேசிக் கொண்டிருந்த போது, எங்களின் பேச்சு, 'சிவப்பழகு கிரீம்' பக்கம் திரும்பியது. அப்போது அவள் கூறியது:அழகு பொருட்களில் அதிகம் கல்லா கட்டுவது சிவப்பழகு கிரீம் தான். வெள்ளையனிடமிருந்து நமக்கு சுதந்திரம் கிடைத்த போதும், வெள்ளைத்தோலுக்கு நாம் இன்னும் அடிமையாகவே இருக்கிறோம். இந்த சிவப்பழகு மோகத்தை பயன்படுத்தி, பெண்களை அடிமைப்படுத்தியது போதாதென்று, இப்போது ஆண்களுக்கும் குறி வைத்து விட்டனர் சிவப்பழகு கிரீம் தயாரிப்பாளர்கள்.எவ்வளவு தான் கிரீம் தேய்த்தாலும், ஒரு மனிதனின் நிறம் மாறாது என்பது நம் இளைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. இதனால், கிரீம் கம்பெனியினர் நம் தலையில் மிளகாய் அரைத்து, பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு செல்கின்றனர்.அளவுக்கு மீறி நாம் தோலில் தேய்க்கும் எதுவுமே, கிட்னியை தான் பாதிக்கும். இந்த சிவப்பழகு கிரீம்கள் தோலை வெள்ளையாக்குவதில்லை, 'ப்ளீச்' தான் செய்கிறது. நாம் வாழும் மண்ணுக்கேற்ப, நம் நிறத்தை கடவுள் படைத்திருக்கிறார்; நம் நிறமே நமக்கு ஆரோக்கியம்; அதை மீற நினைக்கும் போது, அதற்கான எதிர்விளைவையும் சந்திக்க நேரிடும், என்றாள்.அவள் கூறியதில் உள்ள உண்மையை கேட்டு, அசந்து போனேன்.இதை படித்த பிறகாவது நம் மக்கள் திருந்துவரா?- எச்.தஸ்மிலா, கீழக்கரை.'அந்த நாளும்' நல்ல நாளே!என் தோழி மேற்படிப்பு, வேலை என அக்கறை காட்டி வந்ததால், அவளின் திருமணம் தள்ளிக் கொண்டே போய் சமீபத்தில் தான் முடிவானது. வரன் தள்ளி போனதால், பரிகாரமாக திருமணத்தை கோவிலில் நடத்த ஜோசியர் சொல்லிவிட, அதன்படி கோவிலில் திருமணத்தை நடத்தவும், வரவேற்புக்கு மண்டபமும் பிடித்திருந்தனர்.திருமண நாளன்று, வழக்கத்துக்கு மாறாக சில நாட்கள் முன்னதாகவே தோழி வீட்டு விலக்காகி விட, கோவிலுக்குள் செல்ல முடியாதென்பதால், மாற்று ஏற்பாடுகளை செய்ய தீர்மானித்து, மண்டபத்திலேயே திருமணத்தை நடத்த முடிவெடுத்தனர்.ஆனால், அதற்குள் தோழி பட்டபாடு சொல்லி மாளாது. இதை, ஒரு அபசகுனமாக எல்லாரும் இடித்துரைத்து பேச, வெட்கத்திலும், துக்கத்திலும் அன்று முழுக்க, அவள் கல்யாணக்களையே இல்லாமல் அழுதபடியே இருந்தாள்; எத்தனை ஆறுதல் சொல்லியும் எடுபடவே இல்லை.சிவனே தன்னுடைய சரிபாதியை சக்திக்கு கொடுத்தாலும், நம்மவர்கள் விட மாட்டார்கள் போலிருக்கு. ஒரு பெண் விலக்காவதென்பது இயற்கையானது; வம்ச விருத்திக்கு அவசியமானதும் கூட. அதை ஏன் அபசகுனமாய் பார்த்து, மனதை காயப்படுத்த வேண்டும்?பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகலாமா... யோசிக்க வேண்டும்.- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.மின்சாரம்... இது புது சமாசாரம்!ஆடு, மாடுகளைக் கொன்று அதன் ரத்தத்தை குடிப்பார்களா என்று தெரியாது. ஆனால், அதன் மாமிசத்திற்காக அவற்றை கதறக் கதற அரிவாளால் வெட்டிக் கொல்வர் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால், இதெல்லாம் பழைய டெக்னிக்காம்! புது சமாசாரம் என்ன தெரியுமா... அவற்றுக்கு, 'எலக்டிரிக் ஷாக்' கொடுத்து, சட்டென்று தீர்த்து விடுகின்றனராம். இவ்வாறு கொல்லப்படும் விலங்குகளின் மாமிசம் சாப்பிட ஏற்றதா, சாப்பிடுவோர் கதி என்ன என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் தருவரா?— எஸ்.கோவிந்தராஜன், கோவை.முன் ஜாக்கிரதை!தபால் நிலையத்தில் ஒருவர், கடிதம் எழுதி கவரில் போட்டு ஒட்டிய பின், அதை, ஒரு துணியால் அழுத்தி தேய்த்துக் கொண்டிருந்தார். 'சாதாரணமாக அழுத்தினால் ஒட்டாதா... எதற்காக இப்படி துடைக்கிறீர்கள்...' என்று கேட்டேன்.அதற்கு அவர் சொன்ன பதில், அனுபவ பூர்வமாக இருந்தது.'சும்மா அழுத்திப் போடலாம் தப்பில்ல; ஆனால், சில நேரத்தில் நாம் ஒட்டுகிற அந்த கோந்தின் பிசிறு வெளிவந்து, நம்முடைய கவர், இன்னொரு கவருடன் ஒட்டிப் போய், 'டெலிவரி' தாமதம் ஆகிவிடும். இதற்கு முன், எனக்கு இப்படி நடந்த அனுபவம் இருக்கிறது...' என்றார். ஒவ்வொரு செயலும், அனுபவம் தான் என்பதை புரிந்து கொண்டேன்.— ஏ.நாகராஜன், சென்னை.