இது உங்கள் இடம்!
மாணவர்களின் கலக்கல் கலை நிகழ்ச்சி!என் நண்பரின் அழைப்பால் அவரது கிராமத்து திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அன்று இரவு, ஊர் பொது இடத்தில், மேடை அமைத்து, கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இடையே, அவ்வூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், 30 நிமிடம் நடைபெறும் என, அறிவிப்பு செய்தார், விழா கமிட்டி உறுப்பினர்.அந்த குறுகிய நேரத்தில், கிராமிய நடனம், தமிழ், ஆங்கில பேச்சு, திரைப்பட பாடலுக்கு நடனம் மற்றும், 'மேஜிக்' என கலக்கி விட்டனர், மாணவ, மாணவியர். உள்ளுர்காரர்கள் மட்டுமின்றி, விழாவுக்கு வந்திருந்த வெளியூர்காரர்களும், 'அரசுப் பள்ளி மாணவர்களிடம் இவ்வளவு திறமையா...' என வியந்து, மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களை வெகுவாகப் பாராட்டினர். ஊர் சார்பில், அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் திறமை, ஆர்வம், பலம் தெரிந்து வழிநடத்தும் தன்மை, அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் மேலோங்கியுள்ளதை காண முடிந்தது. மேலும், இப்பள்ளிக்கு, இது, விளம்பரமாகவும் அமைந்தது; இதுவே, வரும் கல்வி ஆண்டில், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கும் வழி வகுக்கும். பிற அரசு பள்ளிகளும் இப்படி யோசிக்கலாமே!— சோ.ராமு, திண்டுக்கல்.எச்சரிக்கை மணியாக ஒலிக்கட்டும்!அரசு அதிகாரியாக பணிபுரிந்து, சமீபத்தில், ஓய்வு பெற்ற என் நண்பரைக் காண சென்றிருந்தேன். நண்பரும், அவர் மனைவியும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். அதுகுறித்து விசாரித்த போது, அவர் கூறியது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.நண்பர் பணிபுரிந்த ஊரில், மனை ஒன்று விற்பனைக்கு வர, அதை வாங்கி, தன் மனைவி பெயருக்கு பதிவு செய்து, அதைச் சுற்றி முள்வேலியும் போட்டுள்ளார். திடீரென, நண்பருக்கு வேறு மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வர, குடும்பத்துடன் அங்கு சென்று விட்டார்.தற்போது, ஓய்வு பெற்றுள்ளதால், தான் வாங்கிய மனையில் வீடு கட்டும் நோக்கத்துடன், மனை வாங்கிய ஊருக்கு வந்து பார்த்திருக்கிறார். அந்த இடத்தில், யாரோ பெரிய லாட்ஜ் கட்டி, கீழ் தளங்களை வாடகைக்கு விட்டுள்ளனர். அதிர்ச்சி அடைந்த நண்பர், கடை வைத்திருப்போரிடம் விசாரித்தபோது, லாட்ஜ் உரிமையாளர், வெளியூரில் வியாபாரம் செய்து வருவதாகவும், கடை வாடகையை, ஒவ்வொரு மாதமும், அவரது வங்கி கணக்கில் கட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், நண்பர். காவல்துறை அதிகாரிகள், 'லாட்ஜ்' உரிமையாளரை வரவழைத்து விசாரித்த போது, அவர், பிரபல அரசியல் புள்ளிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதும், நில அபகரிப்பு வழக்கில், பல முறை சிறை சென்றவர் என்பதும் தெரிய வந்துள்ளது.காவல்துறையினரின் அறிவுரைப்படி, அந்த இடத்தை லாட்ஜ் உரிமையாளருக்கே விற்று, பணத்தை வாங்கி, தப்பித்தோம், பிழைத்தோம் என வந்துள்ளார், நண்பர். மனையை வாங்கி போட்டு, வெளியூரில் வசிப்போருக்கு இது, எச்சரிக்கை மணியாக ஒலிக்கட்டும்!— மணியட்டி மூர்த்தி, கோவை.நல்ல திட்டம்!கடந்த சில வாரங்களுக்கு முன், மைசூரில் உள்ள மிருகக் காட்சி சாலைக்கு சென்றிருந்தேன். அங்கு, சுற்றுப்புறச் சூழல் மாசுபடாமல் இருக்க, நுழைவு வாயிலில் உள்ள, 'கவுன்டரில்' உள்ளே செல்லும் பார்வையாளர்களிடம் இருக்கும் தண்ணீர் பாட்டில்களைப் பெற்று, 'டோக்கன்' கொடுக்கின்றனர். திரும்ப வரும்போது, 'டோக்கனை' கொடுத்தால், ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் தருகின்றனர். இதனால், உள்ளே, 'பிளாஸ்டிக்' பாட்டில் குவிவது தடுக்கப்படுவதோடு, சுற்றுப்புற சூழலும் மாசுபடாமல் உள்ளது.மேலும், சிலர் காலிப் பாட்டிலை விலங்குகளின் கூண்டுக்குள் எறிவதும், அதை தின்று, விலங்குகள் சுகவீனமாவதும் தடுக்கப்படுகிறது.சென்னை உட்பட மற்ற மிருகக் காட்சி சாலைகளில் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தலாமே!- ரா.ஸ்ரீதரன், சென்னை