மாறியது நெஞ்சம்!
அரசியல் கட்சி ஒன்றின் தீவிர விசுவாசியான, அலுவலக நண்பனின் மகள் திருமணத்திற்கு சென்றிருந்தேன். ஹோமம் வளர்த்து, புரோகிதர் மந்திரம் ஓத, திருமணம் நடந்து கொண்டிருந்தது; ஆச்சரியமாக இருந்தது.'கட்சி தலைவரின் தலைமையில் தான், மகளின் திருமணத்தை நடத்துவேன்...' என்று சொல்லிக் கொண்டிருந்தவன்; திருமண பத்திரிகையும் கூட அவன் சார்ந்த, கட்சி தலைவனின் படம் போட்டு தான் அச்சிடப்பட்டிருந்தது.அவனை, தனியாக அழைத்து, 'என்னப்பா இது... தலைவர் கையால, தாலி எடுத்துக் கொடுத்து தான் திருமணம் நடக்கும்ன்னு சொல்லிக் கொண்டிருந்தியே... இப்ப என்ன ஆச்சு... புரோகிதரை வெச்சு நடத்துறியே...' என, வினவினேன். 'விபரம் தெரியாம, வயிற்றெரிச்சலை கிளப்பாதேடா... நான், 'பிளான்' பண்ணினது என்னமோ நெஜம்... கிட்ட போனாத்தானே விபரம் புரியுது. திருமணத்துக்கு, தலைவரு வரணும்னா, கட்சிக்கு, ரெண்டு லட்ச ரூபாய், 'டொனேஷன்' கொடுக்கணுமாம்... தவிர, 'ஸ்டார் ஓட்டல்'ல அறை, காருக்கு பெட்ரோல், டிரைவருக்கு, 'பேட்டா!' 'மேலும், 100 'பிளெக்ஸ் போர்டு' கட்சிக்காரங்க, 100 பேர், திருமணத்துக்கு வருவாங்களாம்... அவுங்களுக்கு, பிரியாணி... பத்திரிகையாளர்களுக்கு தகவல் சொல்லணுமாம்... அப்பிடி இப்பிடின்னு, 100 நிபந்தனைகள் போட்டாங்க... கணக்குப் போட்டுப் பார்த்தா, மூணு லட்ச ரூபாய்க்கு மேல ஆவுது... என் பொண்ணு திருமணத்துக்கு, மொத்த பட்ஜெட்டே, மூணு லட்சம் தான்... 'அவ்ளோ செலவு பண்ணி, அவரை கூட்டி வந்தும், திருமணத்துல, மணமக்களை வாழ்த்தாம, மத்திய அரசையும், மற்ற அரசியல்வாதிகளையும், கட்சிகளையும் திட்டிட்டு போறதுக்கு, வெறும், 5,000 ரூபாய் செலவுல, புரோகிதரை வெச்சு திருமணம் பண்றதே மேல்ன்னு தோணிச்சு... அவரு, சொல்ற மந்திரம் நமக்கு புரியலேன்னாலும், கண்டிப்பா, திட்ட மாட்டாரு...' என்றான். பிரமித்துப் போனேன்.'பகுத்தறிவு, பகுத்தறிவுங்கறோமே... இது தாண்டா அந்த பகுத்தறிவு...' என்று, அவனை பாராட்டி, மணமக்களை வாழ்த்தி, மொய் கவர் கொடுத்து, விருந்தை உண்டு, மன நிறைவோடு திரும்பினேன்.
—ரா. அரங்கநாதன், சென்னை.வீட்டு வேலை செய்ய பழக்குங்கள்!
பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, ஜாதகத்தை எடுத்தாள், தோழி. அதற்கு முன், வேலை பார்க்கும் மகளை, இரண்டு மாதம் விடுப்பு எடுக்க சொல்லி, காய் நறுக்குவது, சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது உட்பட, வீட்டு வேலை அனைத்தும் செய்து பழகுமாறு கூறினாள். மறுத்த அப்பெண், 'இது, ஒரு பிரச்னையா... திருமணத்திற்கு பின், எல்லா வேலைக்கும் ஆள் வைத்துக் கொண்டால் போச்சு...' என, கூறியிருக்கிறாள்.'எல்லா ஊரிலும், எல்லா சமயத்திலும் வேலைக்கு ஆள் கிடைப்பது நிச்சயம் இல்லை. மேலும், சின்ன சின்ன விஷயத்திற்கும் அடுத்தவர் கையை எதிர்பார்ப்பதும் நல்லதல்ல. 'களவும் கற்று மற' என்ற பழமொழிக்கேற்ப, அனைத்து வேலைகளையும் ஓரளவாவது தெரிந்து, செய்வது தான் நல்லது. 'ஒருவேளை, வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் அமைந்தால், நீதான் சிரமப்படுவாய். அங்கெல்லாம், நம் வேலையை நாம் தான் செய்ய வேண்டும்...' என, நிதானமாக எடுத்துச் சொல்லி புரிய வைத்தாள்.அதன்பின், அவர் மகளும் வேலை பழக ஆரம்பித்தாள்.
— ஏ. உமாராணி, தர்மபுரி.உதவியை தவிர்க்கவும்!
பஸ் நிலையத்தில் காத்திருந்தேன். கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன், அங்கிருந்த மூதாட்டியிடம், 'ஏம்மா... இந்த வேகாத வெயில்ல பஸ்சுக்காக காத்து கெடக்கறீங்க... அப்படியே பஸ் வந்தாலும், உட்கார்ந்து போக இடம் கிடைக்காம நின்னுட்டே தான் பயணிக்கணும்... நீங்க எங்கே போகணும்ன்னு சொல்லுங்க, போற வழியில இறக்கி விடறேன்...' என்றான்.இளைஞனின் மனிதநேயம் ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், இன்னொரு புறம், நிறைய மூதாட்டியர் நிலையத்தில் காத்திருக்க, இவரை மட்டும் அழைப்பது ஏன் என, சிந்திக்க வைத்தது. பிறகு, எதேச்சையாக அவரின் கழுத்தை பார்த்தபோது, தங்க சங்கிலி, 'பளபள'வென மின்னுவது தெரிந்தது.அதை பறிப்பதற்காக, அவன் திட்டமிடலாம் என்பதை யூகித்த நான், 'அவன், சந்தேகத்திற்குரியவன்..' என்பதை, கண்களாலேயே, மூதாட்டிக்கு சைகையில் எச்சரிக்கை செய்து, அவனுடன் செல்வதை தடுத்து நிறுத்தினேன்.உடனே, சுதாரித்த மூதாட்டி, 'இல்ல தம்பி... எனக்கு, வண்டியில உட்கார்ந்து பழக்கமில்லை... குண்டும், குழியுமான சாலைகளில் வண்டி ஏறி இறங்கறப்ப, விழுந்தாலும் விழுந்துடுவேன்...' என, சமயோசிதமாக சொல்லி, அவனை அனுப்பி வைத்தார். என்னை தனியே அழைத்து, பாராட்டினார், மூதாட்டி. பெரியோர்களே... இதுபோல, நைச்சியமாக பேசி, ஏமாற்றும் பேர்வழிகளை அடையாளம் கண்டு, உஷாராக இருங்கள்!
— கே. ஜெகதீசன், கோவை.விவகாரமான புத்தாண்டு!
கடந்த, 2019ம் ஆண்டு, எதிர்பாராத நிகழ்வுகளை தந்து விடைபெற்றுள்ளது.'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கேற்ப, 2020ம் ஆண்டை, வருக வருக என்று, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்.இந்த, 2020ம் ஆண்டை, புத்துணர்வு தரும் ஆண்டு என்று எண்ணுவோம். ஆனால், இந்த ஆண்டு, வேண்டாத வேலை செய்து, ஏமாற்றும் எண்ணம் கொண்டோருக்கு, கை கொடுக்கும் என்றால், அது மிகையல்ல.உதாரணமாக, ஒரு வீட்டையோ, நிலத்தையோ, நிறுவனத்தையோ வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.பத்திரப் பதிவிற்கு முன், கையெழுத்து போட்டு, தேதியை 22.2.20 என்று எழுதுவதாக வைத்துக் கொள்வோம். 'அட்வான்ஸ்' பணமும் கொடுத்தாகி விட்டது. இதற்கிடையே, நம்மை ஏமாற்றுவதற்கென்றே திரிபவர்கள் (விற்பவர்கள்) தேதியை, 22.2.2022 என்று, எழுதி விட்டால், நம் தலையில் இடி விழும். கொடுத்த, 'அட்வான்ஸ்' பணமும் போச்சு; வாங்க நினைத்ததும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே, இந்த, 2020ம் ஆண்டில், நல்லதே நடக்க வேண்டும் என்று எண்ணி, எங்கு கையெழுத்திட்டு, தேதி எழுதினாலும், தேதி, மாதம் எழுதிய பின், 2020 என்று, முழுமையாக எழுதினால் தப்பிக்கலாம். இப்போது புரிகிறதா, 2020ன் விவகாரமான தன்மை; கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு இது.
வி.எஸ். மோகன், மதுரை.