இது உங்கள் இடம்!
இப்படியும் ஓர் ஏமாற்று!பொங்கலை முன்னிட்டு, திருப்பூரில் வாடகைக்கு விட்டிருக்கும் எங்கள் வீட்டிற்கு, பெயின்டிங் வேலை செய்ய, கான்ட்ராக்ட்டரை வர சொன்னேன். வீட்டை சோதித்தவர், 'பிரைமர் அடித்ததோடு நிறுத்தி விட்டீர்களா... பெயின்ட் அடிக்கவில்லையா...' என, கேட்டார்.அதிர்ச்சியடைந்த நான், 'ரோஸ் கலர் பெயின்ட் அடித்திருக்கிறதே. பெயின்ட் அடிக்கவில்லை என, எதை வைத்து சொல்கிறீர்கள்...' என, கேட்டேன்.'சார்... இது பெயின்ட் இல்லை. ஒயிட் பிரைமரில் கலர் ஸ்டேனர் கலந்து அடித்திருக்கின்றனர். பார்த்தால், பெயின்ட் போலவே தெரியும்.'பெயின்டிங் தொழில் செய்யும் நாங்கள் அதை, 'ஈசி'யா கண்டுபிடித்து விடுவோம். பெயின்ட் பொருட்களை, நீங்கள் வாங்கி தந்தீர்களா... இல்லை, அவர்களிடமே மொத்த கான்ட்ராக்ட்டிற்கு விட்டீர்களா...' என, கேட்டார்.'கான்ட்ராக்ட்டிற்கு விட்டு விட்டேன்...' என்றேன்.'சார்... பிரைமருடன், ஸ்டேனர் என்ற கலர் பெயின்ட்டை இணைக்கும்போது, ஒரு குறிப்பிட்ட கலர் கிடைக்கும். அதை சுவரில் அடிக்கும் போது, அச்சு அசலாக பெயின்ட் போலவே தெரியும். அதிக லாப நோக்கத்திற்காக, இப்படி செய்து உங்களை நன்றாக ஏமாற்றியுள்ளனர்...' என்றார்.இதுபோன்ற கான்ட்ராக்ட் வேலைகளில், இனி, ரொம்பவே உஷாராகவே இருக்க வேண்டும் என்ற முடிவு செய்தேன். அப்ப நீங்க?ப. சிதம்பரமணி, கோவை.அம்மிக்கல்லும், ஆட்டாங்கல்லும்!தோழியின் வீட்டில் புதிய அம்மிக்கல் இருந்ததைக் கண்டு, அவளிடம், 'பழைய காலத்திற்கு மாறி விட்டாய் போலும்...' என்றேன். கோலப் போட்டியில் பரிசாக கிடைத்ததாக கூறவும், மேற்கொண்டு அவளிடம் விசாரித்தேன்.'எங்கள் ஊரில், நடந்த விழாவின் போது, பெண்களுக்கென நிறைய போட்டிகள் வைத்திருந்தனர். கோலப் போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்தேன். அதில், அம்மிக்கல் பரிசாக கிடைத்தது. 'மற்ற போட்டியின் வெற்றியாளர்களுக்கும் இதுபோன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. தற்போது, எங்கள் வீட்டில் மிக்சியை பயன்படுத்துவதில்லை. இந்த அம்மிக்கல்லை தான் பயன்படுத்துகிறோம்.'அம்மியில் அரைப்பதால், உணவு சுவையாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. இனி, எப்போதும் எங்கள் வீட்டில், அம்மியில் அரைத்த சட்னி, துவையல் தான்...' என, பெருமையுடன் கூறி, 'இதற்கு காரணமான எங்கள் ஊர் பெரியவர்களை வணங்குகிறேன்...' என்றாள்.நண்பர்களே... பழங்கால பொருட்களின் மகிமையை புதுப்பிக்க, நீங்களும், உங்கள் ஊர் திருவிழா மற்றும் பொங்கல் விழாவில், இதுபோன்று பரிசளிக்கலாமே... செய்வீர்களா?அ. மீனாட்சி, கன்னியாகுமரி.பயிற்சியும், முயற்சியும் இருந்தால்...அண்மையில், கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தேன். அவர் வீடு அருகில், 'ஆஸ்பெடாஸ் ஷீட்' போட்ட கட்டடத்தில், நிறைய பெண்கள், தையல் வேலை செய்து கொண்டிருந்தனர். அதுபற்றி உறவுக்காரரிடம் கேட்டேன்.தையல் கூடத்தை நடத்தி வரும் பெண், பட்டப் படிப்பு மற்றும் ஆசிரியர் பணிக்கான படிப்பை முடித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வை இரண்டு முறை எழுதியும், வேலை எதுவும் கிடைக்கவில்லை. பக்கத்து ஊரில் இருக்கும், ஆயத்த ஆடை கம்பெனிக்கு, இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு சென்று வந்தார். தையல் சம்பந்தப்பட்ட நுணுக்கமான அனைத்து வேலைகளையும் நன்கு கற்றுக் கொண்டாள்.வங்கி கடன் பெற்று, தையல் தொழிலில் அனுபவம் வாய்ந்த மூன்று பெண்களை வைத்து, நான்கு பவர் மிஷின்களோடு ஆரம்பித்தது தான், இந்த தையற் கூடம்.கட்டைப் பை, தாம்பூலப் பை, துணிப் பை மற்றும் தலையணை உறை என, 'ஆர்டர்'கள் அதிகம் வந்தன. அவளுடன் வேலை செய்த அனைத்து பெண்களுக்கும், வேலை கொடுக்கும் அளவிற்கு, பவர் மிஷின்களை வாங்கி, குறைந்தபட்சம், வாரம் தலா, 4,000 ரூபாய் வருமானம் வரும் அளவிற்கு வேலை கொடுத்து வருகிறார். பட்டதாரி பெண்களே... வேலை கிடைக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள். பயிற்சியும், முயற்சியும் இருந்தால் போதும், சமுதாயத்தில் சரியான பாதையை தேர்ந்தெடுத்து, பீடு நடை போடலாம்!ஆர். ஜமுனா ராணி, விருதுநகர்.