இது உங்கள் இடம்!
இளைஞர்களின் மனிதநேய சேவை!எங்கள் பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, 'வாட்ஸ் -ஆப்' குழு வைத்திருக்கின்றனர். அதில், மருத்துவர்கள், பொறியாளர், கொத்தனார் மற்றும் டெய்லர் பணி செய்யும் இளைஞர்கள் வரை, பலதரப்பினரும் உள்ளனர்.அனைவரும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒன்றுகூடி, அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, சேவை செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.மருத்துவ இளைஞர்கள், ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களின் உடல்நிலையைப் பரிசோதித்து, தங்கள் செலவில் மருந்து, மாத்திரைகளை வாங்கித் தருவர். பொறியியல் இளைஞர்கள், கொத்தனார் இளைஞர்களின் துணையோடு, ஆதரவற்றோர் இல்லத்தை செப்பனிடும் வேலைகளை செய்து தருவர்.டெய்லர்கள், தம் பங்கிற்கு ஆடைகள் தைத்துத் தருவர். எலெக்ட்ரீஷியன், பிளம்பர் மற்றும் கார்பென்டர்கள், தங்களால் ஆன வேலைகளை செய்து கொடுப்பர்.ஆதரவற்றோர் இல்லத்துக்கான உதவி என்றாலே, உணவு மட்டும் தான் என்றே பலரும் எண்ணுகின்றனர். அப்படியில்லாமல், அதைவிடவும் அவசியமான சில தேவைகளும் இருக்கின்றன என்பதை உணர்ந்து, தொண்டுள்ளத்தோடு தன்னலமற்ற சேவை செய்து வரும் இளைஞர்களை, பலரும் வாழ்த்துகின்றனர்.நீங்களும் இதை மனதில் வைத்து, உணவைத் தாண்டியும் தேவைப்படும் உதவிகளை செய்யலாமே!- விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.திறமை, உழைப்புக்கு பாலின பேதமில்லை!சமீபத்தில், நண்பர் மகன் திருமணத்துக்கு சென்றிருந்தேன். நாதஸ்வர இசைக் கச்சேரியில், இனிமையாக வாசித்துக் கொண்டிருந்தார், ஒரு பெண்.அப்பெண்ணின் நாதஸ்வர இசை, கவலைகளை மறக்க செய்து, திருமணத்துக்கு வந்திருந்த பலரின் மனதை லேசாக்கியது. நானும் கேட்டு, ரசித்து மகிழ்ந்தேன்.பக்கத்தில் இருந்தவரிடம், 'ஆணுக்கு நிகராக வாசிக்க, கடும் சிரத்தை அவசியம். ஒரு பெண்ணாக இருந்து நாதஸ்வரத்தை கற்றுத் தேர்ந்து, திறம்பட வாசிப்பது பாராட்டப்பட வேண்டியது...' என்றேன்.'நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான். ஆனால், அவரை நன்றாக உற்றுப் பாருங்கள்...' என்றார், அவர். ஆம்... அவர் ஒரு திருநங்கை. ஆண்கள் செய்யும் பல தொழில்களை, பெண்கள் செய்வது மட்டும் பெருமைக்குரியது அல்ல; திருநங்கையரும், பல தொழில்களிலும் ஈடுபடுவதும், பெருமை தருவது தான். எந்தத் தொழிலும், எங்களாலும் செய்ய முடியும் என்று, நாதஸ்வரம் வாசிக்கும் திருநங்கையின் முயற்சி, திறமையை மெச்சி, மனதார பாராட்டினேன்.- வடிவேல் முருகன், நெல்லை.அனுபவம் பேசியது!வீட்டிற்கு ஒரு பைப் துண்டு தேவைப்பட்டதால், வாங்க, காயலான் கடைக்கு சென்றேன்.கடை உரிமையாளரிடம், 'வியாபாரம் சரியாக போக மாட்டேங்குது...' என சொல்லி, வருத்தப்பட்டார், பழைய சாமான்களை, வீடு வீடாக சென்று வாங்கும் நடுத்தர வயது நபர், ஒருவர். 'ஒரு காலத்தில் நானும், உங்களை போல தெருத் தெருவாக போய், பழைய சாமான்களை வாங்கியவன் தான். நீங்கள், பழைய சாமான்களை வாங்க போகும்போது, என்ன சொல்லி பழைய பொருட்களை கேட்கிறீர்கள் என்பதே வீட்டினுள் உள்ளவர்களுக்கு புரிவதில்லை. 'எனவே, முதலில் நிதானமாக, தெளிவாக, பழைய இரும்பு சாமான்களுக்கு நல்ல விலை தருவதாக சத்தமாக கூற வேண்டும். அடுத்து, வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்க்கும் முன், உங்கள் வாகனத்தில் வேகமாக தெருவை கடந்து விடுகிறீர்கள்.'அதற்கு பதில், தெருவில் நின்று, குரல் கொடுத்து காத்திருங்கள், இதனால், வீட்டில் உள்ளோர் உங்களை அணுக வாய்ப்பு ஏற்படும். அகல உழுவதை விட, ஆழ உழுவதே மேல் என்பது போல், ஒருநாளைக்கு, 15 தெருக்கள் பார்த்தாலும், நிதானமாக, ஆற அமர நின்று பொருட்களை வாங்குங்கள்.'மேலும், போய் வந்த ஏரியாக்களுக்கே திரும்ப திரும்ப போகாதீர்கள். எல்லா வீடுகளிலும் பழைய இரும்பு சாமான்கள் அடிக்கடி சேராது. இரண்டு மாத இடைவெளிகளில் போங்கள். முடிந்தவரை உங்களின் போன் நம்பரை, அந்த தெருவாசிகளிடம் கொடுத்து வையுங்கள்...' என்றார்.எல்லா விஷயங்களிலும் அனுபவங்கள் தான், பாடங்களை கற்றுத் தருகிறது என்பதை அக்கடைக்காரரின் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.— எ. முகமது ஹுமாயூன், நாகர்கோவில்.