இது உங்கள் இடம்!
எடுப்பான மார்பக சிகிச்சை! யோசியுங்கள் பெண்களே...தமிழ் நாளிதழ் ஒன்றில், 'எடுப்பான மார்பகங்கள்' என்ற தலைப்பில் மூன்று விளம்பரங்களை, ஒரே பக்கத்தில் எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது.'ஆயுர்வேத சிகிச்சை மூலம், 20 நாட்களுக்குள், உங்கள் மார்பகங்களை அழகான, கவர்ச்சியான, நளினமிக்கதாக ஆக்கலாம். சிகிச்சைக் கட்டணம், 580 ரூபாய்; அவசர சிகிச்சைக்கு, 1,400 ரூபாய்!' என்று குறிப்பிட்டிருந்தனர்.இன்னொரு விளம்பரத்தில், பவர் சிகிச்சைக்கு, 630 ரூபாய் என்றும், பவர் பிளஸ் சிகிச்சைக்கு, 1,575 ரூபாய் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.மற்றொரு விளம்பரத்தில், 28 நாட்களுக்குள் நளினமிக்கதாக மாற்றி விடலாம். சிகிச்சைக்கு, 1,050 ரூபாய் என்றும், அவசர சிகிச்சைக்கு, 1,575 ரூபாய் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.மூன்று விளம்பரத்திலும், முழு முகவரி குறிப்பிடப்படவில்லை; 'மொபைல்' நம்பர் மட்டுமே கொடுத்திருந்தனர். அவசர சிகிச்சை என்றால், சைக்கிள் பம்பில் காற்றடித்து விடுவதா? சிரிப்பு தான் வருகிறது!நடிகைகள், மேல்தட்டு பெண்கள் மட்டுமே, 'பெரிதாக்க' இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வதாகக் கேள்விப் பட்டிருக்கிறோம்.இன்று ஏழை, நடுத்தர குடும்பத்துப் பெண்களையும், இளைஞிகளையும், இதுபோன்ற விளம்பரங்கள், சுண்டி இழுக்கத்தான் செய்யும். முயற்சி செய்து பார்க்க, மனம் அலை பாய்வது இயற்கைதான்.குழந்தைக்கு பால் கொடுக்க, பால் அதிகம் சுரக்க, மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டியது அவசிமில்லை என்றும், சிறிய மார்பகங்களிலும் போதுமான பால் சுரக்கும் என்றும், டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதை, இளம் பெண்கள் கண்டுகொள்வதில்லை; மார்பகங்கள், 'எடுப்பாக' இருப்பதைத்தான், விரும்புகின்றனர். முன்பின் தெரியாதவர்கள், அறிமுகம் இல்லாதவர்களால், ஏதோ ஒரு இடத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறை, எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.'எடுப்பான மார்பகங்கள்' பெற, சிகிச்சையில் இறங்கும் இளைஞிகளே... யோசித்து முடிவெடுங்கள். 'வலை'யில் மாட்டிக் கொண்டு விழிக்காதீர்.— மா.தங்காகண்மணி, திண்டுக்கல்.திருத்திக் கொள்ளுங்கள்...பெண்களின் தவறை மட்டுமே அதிக அளவில் சுட்டிக் காட்டும், 'இது உங்கள் இடம்' பகுதியில், ஆண்கள், பொது இடங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செய்யும் தவறையும் சுட்டிக்காட்ட வேண்டும். முக்கியமாக, மது அருந்தி, கண்ட இடங் களில் விழுந்து கிடப்பதும், பஸ் நிலையங்களில், எதை பற்றியும் கவலைப்படாமல், புகை பிடிப்பதும் ஆண்கள் மட்டுமே!அதை விட கொடுமை, சிறுநீர் கழிப்பது... பஸ் நிலையங்களில், சிறிது ஓரம் கிடைத்தாலும் அல்லது சுவற்றின் ஓரங்களிலும், பஸ்களின் மறைவுகளில், சிறுநீர் கழிப்பது, ஆண்கள் மட்டுமே.பல இடங்களில், பெண்கள் நடப்பதையும் பொருட்படுத்தாமல், திரும்பி கொண்டு, சிறுநீர் கழிப்பது ஆண்கள் மட்டுமே. பொது இடங்களில், பெண்கள் இப்படி நடந்து கொள்கின்றனரா? பெண்கள் அப்படி செய் கின்றனர், இப்படி உடை அணி கின்றனர் என குறைகூறும் ஆண் களே... இதையும் சற்று கவனித்து, உங் களை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.— ஏ.ருக்மணி தர்மலிங்கன், கோத்தகிரி.இதுவும் பாதுகாப்புதான்!தோழியின் வீட்டுக்கு சென்றி ருந்தேன். அவளிடம், நானும் நலன் விசாரித்து, சிற்றுண்டி உண்ட பின், தோழி அவளது துணிகளை துவைக்க சென்றாள்.அப்போது அவளது கணவரின் சட்டை, பேன்ட்டையும் துவைக்க எடுத்து போட்டிருந்தாள். 'வெளிநாட்டிலிருக்கும் உன் கணவர் பேன்ட், சட்டையை இப்போ ஏன் துவைக்கிறே?' என்று கேட்டேன்.அதற்கு அவள், 'நான் தினமும் துணி துவைக்கும் போது, என் கணவரின் பேன்ட், சட்டையை நனைத்து, என் துணியுடன் சேர்ந்து காயப் போட்டு விடுவேன். இதனால், வெளியிலிருந்து பார்ப்பவர் களுக்கு, வீட்டில், ஆண் இருப்பது போல் தோன்றும். நெருங்கியவர்களுக்கு மட்டும் தான், என் கணவர் வெளிநாட்டில் இருப்பது தெரியும். இது, எனக்கு ஒரு பாதுகாப்பாக தெரியுது...' என்றாள்.தோழியின் ஐடியா, நல்லதாக தெரிகிறது. ஆண்கள் ஊரில் இல்லாத நேரத்தில், மற்ற பெண்களும், இந்த ஐடியாவை கடைபிடிக்கலாமே!— ஜே.ரஞ்சிதமணி, நஞ்சுண்டபுரம்.