உள்ளூர் செய்திகள்

கனவுகளை துரத்தி, வாழ்க்கையை தொலைப்பவர்கள்!

கிளம்ப கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பதற்றமாக, திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது, நல்லவேளையாக சென்னை சென்ட்ரலுக்கான மின்சார ரயில், நிலையத்தில் நின்றிருந்தது.அவசரமாக ஒரு பெட்டியில் ஏறி, கூட்டத்தைக் கிழித்து முன்னேறி, ஜன்னலோரத்தில் வசதியாய் சாய்ந்து நின்றேன்.ரயில் கிளம்ப இருந்த தருணத்தில், ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்தவன், ''ட்ரெயின் கிளம்பப் போகுது; இன்னும் நீ ஸ்டேஷனுக்கே வரலயா... உன்னையெல்லாம்...'' என்று, மொபைல் போனில் யாரிடமோ சத்தமாய் கடிந்து, அவசரமாய் இறங்கிப் போக, சந்தோஷமாக அந்த இடத்தில் போய் அமர்ந்தேன். உட்கார இடம் கிடைத்ததில், கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.பிரபல இசையமைப்பாளர் ஒருவர், என்னை வரக் கூறியிருக்கிறார். அனேகமாக இன்று சினிமாவில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்து விடும் என்றே தோன்றியது. சினிமா வாய்ப்பிற்காகவே, ஒரு பிரதியும் விற்காவிட்டாலும், சொந்த செலவில் அடுத்தடுத்து மூன்று கவிதை தொகுப்புகளை பதிப்பித்து, அவற்றை அவல் பொரி மாதிரி சினிமாக்காரர்கள் எல்லாருக்கும் அனுப்பி வைத்தபடி இருக்கிறேன்.கடந்த, 15 நாட்களுக்கு முன் தான், இன்றைக்கு சந்திக்க வர கூறி அழைத்திருக்கும் இசையமைப்பாளரின் உதவியாளரை சந்தித்து, என் மூன்று கவிதை தொகுதிகளையும் கொடுத்து விட்டு வந்திருந்தேன். அவர், நேற்று எனக்கு போன் செய்து, இசையமைப்பாளர் என்னை சந்திக்க விரும்புவதாக கூறி, இன்று வரக் கூறியிருந்தார்.ரயில் கிளம்பிய சிறிது நேரத்திலேயே, என் மொபைல் போன் அதிர்ந்தது.ஆபீசிலிருந்து, எம்.டி., யின் பெர்சனல் செக்ரட்டரி ஆதிகேசவன் பெயர், 'டிஸ்பிளே'வில் ஒளிர்ந்தது. 'எடுத்து பேசலாமா, வேணாமா...' என்று தயங்கினேன். விடுப்பு எழுதி கொடுத்து விட்டு வந்தவனை, எதற்கு தொந்தரவு செய்கிறான் என்று எரிச்சலாக இருந்தது. எடுக்கவில்லை என்றாலும் விட மாட்டான்; திரும்பத் திரும்ப அழைப்பான்.போனை ஆன் செய்ததும், ''கதிர்வேல் சார்... தாம்பரம் சைட்ல ஏதோ பிரச்னையாம்; உங்கள, உடனே சைட்டிற்கு போக சொன்னார் சார்,'' என்றான் படபடப்பாக!''நான், இன்னைக்கு லீவுன்னு தெரியாதா உனக்கு?'' என்றேன் கோபமாக!''தெரியும்... அவசரங்குறதால தான், உங்க லீவ கேன்சல் செய்துட்டு, சைட்டுக்குப் போக சொன்னார், எம்.டி., போயிடுங்க சார் இல்லன்னா எம்.டி.,க்கு கோபம் வந்து, வேலையிலருந்து டிஸ்மிஸ் செய்தாலும் செய்துடுவார்,'' என்று கூறி, வைத்து விட்டான்.இவன் எம்.டி.,யின், செல்லப் பிள்ளை. அவர் சொன்னதற்கு மேல் ஒரு வார்த்தை பேச மாட்டான்; அவர் போட்ட கோட்டை தாண்டி, ஒரு மில்லி மீட்டர் கூட நகர மாட்டான்.சினிமாவில் பாட்டெழுதுவதற்கு, ஆறேழு ஆண்டுகளாக முயற்சித்து, இப்போது தான் வாய்ப்பு கனிந்து வரும் போலிருக்கிறது. அதையும், அன்றாட வயிற்றுப் பாட்டிற்கான வேலையைத் தட்டிப் பறித்து விடுமோ என்று தோன்றியது.என்னை சந்திக்க வர கூறியிருக்கும் இசையமைப்பாளர், மிகவும், 'பிஸி'யானவர் மட்டுமல்ல, கடுமையான கோபக்காரரும் கூட. அவர் வர சொல்லும் போது, சந்திக்க வில்லையென்றால், கண்டிப்பாக இன்னொரு வாய்ப்பை தருவார் என்று எதிர்பார்க்க முடியாது.இந்த நேரத்தில் பார்த்து, ஆபீசிலிருந்து நெருக்கடி கொடுக்கின்றனர். 'வேலைக்குப் போவதா அல்லது இசை அமைப்பாளரை சந்திக்க போவதா...' என்று, குழப்பமாக இருந்தது.ரயில், திருநின்றவூர் ரயில் நிலையத்தில் நின்றதும், எனக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவன் ஒருவன், ஜன்னலருகே சென்று, வெளியில் பார்வையை அலைய விட்டு, யாரையோ தேடினான்.நின்றிருந்த கூட்டத்தை நோக்கி, ''சுந்தரம் அண்ணே...'' என்று குரல் கொடுத்தான். குரல் வந்த திசையில் பார்வையை திருப்பிய அவன், குள்ளமாய், கறுப்பாய், ஐம்பதுகளின் மத்திய வயதிலிருந்தான்.அவனிடம், சந்தோஷம் பொங்கும் குரலில், ''ஏறி உள்ள வாங்கண்ணே... எல்லாரும் உங்களுக்காக தான் காத்துக்கிட்டிருக்காங்க,'' என்று சத்தம் போட்டு கூறினான்.இக்கூட்டத்தில், அவனால் எப்படி உள்ளே புகுந்து வர முடியுமென்று நான் யோசித்து கொண்டிருக்க, ஆச்சர்யமாக நெரிசலினூடே இருளை கிழித்து, முன்னே பீய்ச்சப்படும் டார்ச் ஒளி போல முன்னேறி, அவனை அழைத்த கல்லூரி மாணவனுக்கு அருகில் வந்து நின்றான், சுந்தரம்.கல்லூரி மாணவன் என்னிடம், ''சார்... நீங்க கொஞ்சம் எழுந்து, என் பக்கத்துல வந்து உட்காந்துக்குங்க; சுந்தரம் அண்ணன் உங்க எடத்துல உட்காரட்டும்,'' என்றான்.'எதுக்கென்று' எரிச்சலுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். ''சுந்தரம் அண்ணன் தாளம் தட்டிக் கிட்டே பாட்டுப் பாடுறதுக்கு, ஜன்னலோர சீட் தான் வசதியா இருக்கும்,'' என்றான் அவன்.''ஏன் இப்படி எல்லாரையும் தொந்தரவு செய்றீங்க?'' என்றேன் கோபம் கொப்பளிக்கும் குரலில்!கல்லூரி மாணவன் ஏதும் சொல்லாமல், என்னை முறைத்துப் பார்த்தான்.''அவர் நல்லாப் பாடுவாருங்க; பயண அலுப்பே தெரியாம சென்ட்ரல் போற வரைக்கும், ஜாலியா பொழுது போகும்,'' என்று, அவனை சுற்றியிருந்த சிலர், அவனுக்காக என்னிடம் வற்புறுத்தவே, வேறு வழியில்லாமல் எழுந்து, கல்லூரி மாணவனுக்கு அருகில் போய், அவன் கொடுத்த சிறிய இடத்தில், நெருக்கி உட்கார்ந்தேன்.அவனுக்கு இன்னொருபுறம் உட்கார்ந்திருந்தவன், மாவு சல்லடை மாதிரியிருந்த ஒரு இசை வாத்தியத்தை பையிலிருந்து எடுத்து, 'ஜல்... ஜல்...' என்று தட்டினான். அங்கே உட்கார்ந்திருந்த வேறு சிலரும், கையடக்கமான சின்னச் சின்ன இசை வாத்தியங்களை வெளியே எடுத்து தட்டத் துவங்கினர்.சிறிது நேரத்தில், ரயிலில் இசைக் கச்சேரியே அரங்கேறியது. பழைய பாட்டும், புதுப் பாட்டுமாய் கலந்து, நிஜமாகவே சென்ட்ரல் வரும் வரை, இசை மழை பெய்து, காதுகளுக்குள் பெருக்கெடுத்து ஓடியது போலிருந்தது.அந்த பெட்டியில் உட்கார்ந்திருந்தவர்கள் அனைவரும், கட்டிப் போடப்பட்டது போல், இசையில் லயித்திருந்தனர். எனக்கும் அவன் பாடிய பாடல்கள் எல்லாம், இன்றைக்கு இசை அமைப்பாளர் கொடுக்க போகும் மெட்டிற்கு பாட்டெழுத, பயிற்சி மாதிரி அமைந்திருந்தது.சினிமாவில் பாட்டெழுத வேண்டுமென்பது, என் எத்தனையோ ஆண்டு கால கனவு. அது கை கூடி வரும் தருணத்தில், அன்றாடப் பாட்டிற்கான வேலை, கால்களில் கட்டப்பட்டிருக்கும் விலங்காய் கனத்து, நகர விடாமல் தடுக்கிறதே என்று குழப்பமாக இருந்தது.பாரதி தான் நினைவிற்கு வந்தார்; அவரையும் அன்றாட பாடுகள் தான், முன் பின் நகர விடாமல் முடக்கி போட்டது. எத்தனை கோபமிருந்தால், நரை கூடிக் கிழப் பருவமெய்தி வெறும் கூற்றுக் கிரையென வாழும் வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ... என்று, பராசக்தியிடம் ஆங்காரமாய் கோபப்பட்டிருப்பான், பாரதி.'வேலையாவது ஒண்ணாவது... இந்த வேலை போனால், இன்னொரு வேலை தேடிக் கொள்ளலாம்; ஆனால், இப்படி ஒரு வாய்ப்பு, மறுபடியும் வாய்க்கும் என்று சொல்ல முடியுமா...' என நினைத்து ஆவது ஆகட்டும் என்று, இசை அமைப்பாளரை போய்ப் பார்த்து விடலாம் என்று தீர்மானித்தேன்.சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும், எல்லாரும் சுந்தரத்திடம், ஓரிரு வார்த்தைகள் பேசியபடி வேக வேகமாய் இறங்கிச் சென்றனர். அவசரப் படாமல், நிதானமாக பெட்டியிலேயே உட்கார்ந்திருந்தான் சுந்தரம். நானும், அவனுடன் பேசலாமென்று காத்திருந்தேன். எல்லாரும் இறங்கி சென்று, கம்பார்ட்மென்ட்டே காலியான பின், சுந்தரம் இறங்க போகும் போது தான் கவனித்தான். பெட்டியின் மூலையிலிருந்த இறுதி இருக்கையில், ஒருவன் தூங்கி கொண்டிருந்தான். வேகமாக சென்று, அவனை உலுக்கி விழிக்க செய்தான், சுந்தரம். பதறி முழித்தவன், சுந்தரத்திற்கு நன்றி கூறியபடி, அவசரமாய் இறங்கி போனான்.என்னிடம், ''பாவம்... நிம்மதியா தூங்கக் கூட அனுமதிக்காத வாழ்க்கை...'' என்றான் சிநேகமாய் சிரித்தபடி!நானும் ஆமோதித்து, தலையாட்டினேன். பின், ''ரொம்பவும் லயிச்சு அற்புதமாப் பாடுனீங்க; இந்த மாதிரி பழைய பாட்டுகளை எல்லாம் கேட்டு, எவ்வளவு நாளாச்சு தெரியுமா...'' என்று அவனை பாராட்டி, ''எங்க சார் வேலை பாக்குறீங்க?'' என்று கேட்டேன்.''கல்யாணப் பரிசு சினிமாவுல, தங்கவேலு வேலை பார்த்த மன்னாரன் கம்பெனியில, அவருக்கு அப்புறம், நான் தான் அந்த வேலையில சேர்ந்துருக்குறேன்,'' என்று சிரித்தபடி கூறினான் சுந்தரம்.புரியாமல் அவனைப் பார்க்கவும், அவன் அடங்கிய தொனியில், சொல்ல துவங்கினான்...''ஐ.டி.ஐ., படிச்சுட்டு, பப்ளிக் செக்டார் தொழிற்சாலையில, மிஷின் ஆப்ரேட்டரா வேலை பாத்துட்டு இருந்தேன். சின்ன வயசுலருந்தே நல்லா பாடுவேன்; மியூசிக் ட்ரூப்புல எல்லாம் பாடியிருக்கேன்; அப்ப எல்லாம் சினிமாவுல பாடுறது தான் என்னோட கனவா இருந்துச்சு. அப்பத்தான் எங்க கம்பெனியில, 40 வயசுக்கு மேல இருக்குறவங்களுக்கு, வி.ஆர்.எஸ்.,னு ஒரு ஸ்கீம் கொண்டு வந்தாங்க. விட்டில் பூச்சிகள் மாதிரி நிறையப் பேர் அதுல போயி விழுந்தாங்க; அதுல நானும் ஒருத்தன்.''வேலைய விட்டுட்டா, எப்படியாவது முயற்சி செய்து, சினிமாவுல பாடி, பெரிய ஆளாயிடலாம். கிடைக்குற பணத்துல மியூசிக், 'ட்ரூப்' கூட ஆரம்பிச்சுடலாம்ன்னு பெரிய கனவுகளோட, வி.ஆர்.எஸ்., வாங்கிட்டு வீட்டுக்கு வந்தேன்.''ஆனா, கொண்டு வந்த பணம் மொத்தத்தையும், குடும்பமே பங்கு போட்டுக்குச்சு; எனக்குன்னு, பத்து பைசா கூட மிச்சமில்ல... சினிமாவுல பாடுறதுக்கு, கோடம்பாக்கத்துல அலைஞ்சு அலைஞ்சு கால்வலி வந்தது தான் மிச்சம்; எதுவும் சரியா அமையல.''நிறைய இசை அமைப்பாளர்கள் போன் பண்ணி கூப்பிட்டு, பாட சொல்லி கேட்பாங்க. 'நல்லாப் பாடுறீங்க; கண்டிப்பா வாய்ப்பு தர்றேன்'ன்னு, ஆசை வார்த்தை பேசி, அனுப்பிடுவாங்க. மறுபடியும் அவங்களப் போயிப் பார்த்தா, 'உங்க குரலுக்கு தகுந்தாப்புல பாட்டு எதுவும் வரல; வரும் போது கண்டிப்பா கூப்பிடுறோம்'ன்னு சொல்வாங்க; ஆனா, அப்படி யாரும் சினிமாவுல பாடுறதுக்கு கடைசி வரைக்கும் கூப்புடவே இல்ல. இப்பெல்லாம் வாய்ப்பு தேடுறதையே விட்டுட்டேன்,'' என்றான்.''அப்ப, இப்ப என்ன தான் செய்றீங்க,'' என்றேன் ஆதங்கத்துடன்!''வேலை வெட்டிக்குப் போயி, காசு பணம் கொண்டு வரும் போது, நம்மள மகாராஜாவப் போல பாத்துக்குற குடும்பம், வேலை இல்லாம, வெறும் பயலா, வீட்டுல இருந்தா, ஒரு பிச்சைக்காரனா கூட மதிக்காதுங்குறத அனுபவிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்; பகல்ல வீடு நம்மளோடதில்ல; மீறி அங்க இருந்தா, அதைப் போல நரகம் வேறெதுவும் இல்ல,'' விரக்தி இழையோடியது அவன் குரலில்!''எதுக்கெடுத்தாலும் சண்டை; கொண்டு வந்த காசை எல்லாம் புடுங்கி காலி செய்துட்டு, மாசா மாசம் வருமானம் வரலன்னதும், நான் தான் தப்பான முடிவெடுத்து, வேலைய விட்டுட்டதா ஒரே பிலாக்கானம். வீட்டுல இருக்கவே முடியல. அதான் விடிஞ்சதும், எப்பவும் போல வெளியில கிளம்பிடுவேன்.''பார்க், லைப்ரரி, ரயில்வே ஸ்டேஷன்னு பகலெல்லாம் தோணுன இடத்துல பொழுத கழிச்சிட்டு, சாயங்காலமானா வீட்டுல போய் அடஞ்சுக்குவேன். ட்ரெயின்ல வரும் போதும், போகும் போதும் என்னை பத்தி தெரிஞ்சவங்க கேட்குற பாட்டை, பாடி அவங்கள சந்தோஷப் படுத்துவேன்.''இது தான் என் வாழ்க்கை; கனவுகளை துரத்தி, வாழ்க்கைய தொலைச்சவன் சார் நான்,'' என்றபடி, ஸ்டேஷனை விட்டு வெளியேறி, ஏதோ ஒரு திசையில் நடக்க துவங்கினான், சுந்தரம்.அதுவரை எனக்குள் இருந்த குழப்பம் தெளிந்தது. நானும் சுந்தரம் மாதிரி கனவுகளை துரத்தி, வாழ்க்கையை தொலைக்க விரும்பவில்லை. அதனால், இசையமைப்பாளரை சந்திக்க வேண்டாம் என்று முடிவெடுத்து, வேலைக்காக, சைட்டிற்கு போவதற்கு, தாம்பரம் மின்சார ரயிலை பிடிக்க, அவசரமாக இறங்கி ஓடினேன். - சில்வியாமேரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !