அந்துமணி பா.கே.ப.,
'வங்கி ஊழியர்கள் பலருக்கும், வி.ஆர்.எஸ்., திட்டத்திற்கு அனுமதி கொடுத்த பிறகும், வேலைகள் சுணக்கமில்லாமல் தானே நடக்கின்றன... அப்படின்னா, இவ்வளவு வருஷமா நம் பணத்தை வெட்டியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கிட்டிருந்தனர் என்று தானே அர்த்தம்...' என்றார் குப்பண்ணா.'உண்மை தான்... பரமார்த்த குரு கதைகளில் ஒண்ணு இதை விளக்குகிறது...' என்று ஆரம்பித்துக் கூறினேன்:பரமார்த்த குருவுக்கு ஓர் ஊசி தேவைப்பட்டது. உடனே, நான்கு சீடர்கள் ஊசி வாங்க புறப்பட்டனர்; ஓர் ஊசியை வாங்கியவர்கள், அதை நான்கு பேரும் சேர்ந்து எப்படிக் கொண்டு செல்வது என யோசித்து, ஒரு பெரிய வாழை மரத்தை கொண்டு வந்து, அதில், ஊசியை செருகி, அம்மரத்தை நால்வரும் தூக்கிச் சென்றனராம். இது, பரமார்த்த குரு கதைகளில் ஒன்று!கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தவர் பார்க்கின்சன். பிரிட்டிஷ் ராணுவ அலுவலகத்தில் இவர் பணிபுரியும் போது, ஒருவர் வேலையையே பலர் செய்து, அநாவசியமாக காலத்தை வீணாக்குவதை கண்டுபிடித்தார்.பின், பொழுது போக்குக்காக, அரசு அலுவலகங்களில் எப்படி வேலை நடக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்தார். வேலைகள் எப்படி குட்டி போடுகின்றன என்பதை பற்றி, இவர் வெளியிட்ட கட்டுரைகளே, 'பார்க்கின்சன் லா' என்று புகழ் பெற்று விளங்குகிறது.இந்த நியதியின் அடிப்படை அம்சங்களாக அவர் கூறுகிறார்... 'தனக்கு அவகாசம் இருப்பதாக காட்டிக் கொண்டால், மேலும், புது வேலை சுமத்தப்படும் என்பதாலோ அல்லது வேலையில்லாமல் இருக்கிறான் என்று சொல்லி விடுவரோ என்ற பயத்தாலோ, வேலையை யாரும் ஒழுங்காகச் செய்து, சீக்கிரமாக முடிப்பதில்லை.'மேலும், ஒரு குமாஸ்தாவை நியமித்தால் போதும் என்றால் கூட, அந்த வேலையைப் பங்கிட்டு செய்ய இருவர் நியமிக்கப்படுவர். மற்றவருக்கு எங்கே உத்தியோக உயர்வு கிடைத்து விடுமோ என்று பயப்பட்டுக் கொண்டே, எல்லாரும் வேலை செய்வர். பலர் தன் கீழ் வேலை செய்தால்தான் பதவி உயர்வு கிடைக்க வழியும், பலர் தன் கீழ் வேலை செய்கின்றனர் என்ற அந்தஸ்தும் ஏற்படும்.'ஒரு வேலையைச் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஏழு பேரும், ஒருவர் மற்றவருக்கு வேலை இருக்கும்படி ஏதாவது செய்து கொண்டே இருப்பர். ஆகவே, அவர்களுக்கு ஓய்வே இராது. யாரும் பொழுதை வீணாக்கவில்லை. ஏதோ வேலை செய்கின்றனர். ஆனால், உருப்படியான வேலையில்லை...' என்கிறார்.இவ்வளவு விஷயத்தையும் குறிப்பிட்ட இவர், வேலையை சுலபமாகச் செய்ய சில வழிகளைக் கூறி, 'ஒரு வேலையை, நாளை செய்யலாம் என்று ஒத்திப் போடாதே!'தான் செய்ய வேண்டிய வேலை அல்ல என்று, பிறரிடம் ஒதுக்க முயற்சி செய்யாதே!'கிடைக்கும் ஓய்வை தக்கபடி பயன்படுத்து!'இம்மூன்று வழிகளையும் கடைபிடித்தால், அரசு பணிகளில் தற்போது வேலை செய்வோரில் மூன்றில் ஒரு பங்கினர் இருந்தால் போதும்...' என்று கூறுபவர், 'இவற்றை யாரும் பின்பற்றுவர் என்ற நம்பிக்கை எனக்கில்லை...' என்கிறார்.அது உண்மைதான் என்பதற்கு வங்கிகளின், வி.ஆர்.எஸ்., ஒரு உதாரணம், என்றேன்.சரி தானே!சாமி சிதம்பரனார் என்பவர், 1939ல், எழுதிய நூல் ஒன்றில், கீழ்கண்ட குறிப்பு காணப்படுகிறது:பொது வாழ்வில் ஈடுபடுவதற்கு முன், பெரிய, 'மைனராய்' விளங்கினார் ஈ.வெ.ரா., அவர் மைனர் விளையாட்டின் வினோதங்களைப் பற்றி, இன்றும் அவர் தோழர்கள் வேடிக்கையாக கூறுவர்; சில சமயங்களில் அவரும் கூறுவார்.அந்நாளில், ஈ.வெ.ரா., பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே பொழுதை போக்குவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர்.நிலாக் காலங்களில், ராமசாமியும், அவர் கூட்டாளிகளும், விலை மாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்குச் செல்வர். இரவு முழுவதும் ஆற்று மணலில் கூத்தடித்து விட்டு, விடியற்காலையில் தான் வீட்டிற்குத் திரும்புவர்.இக்கூட்டத்துக்கு, ஈ.வெ.ரா.,வின் வீட்டிலிருந்து தான் சாப்பாடு வரும். சாப்பாடு போகும் செய்தி, பெற்றோருக்கு தெரியக் கூடாது.இச்சமயம், தன் மனைவி நாகம்மையின் உதவியையே நாடுவார் ஈ.வெ.ரா., நாகம்மையும் வீட்டார் அறியாமல், கணவன் விரும்பும் உணவுகளை சமைத்து விடுவார். அவ்வுணவுகள், வீட்டுப் புழக்கடை வழியாக வண்டியேறி, காவிரிக் கரைக்கு வரும்.பி.பி.சி., தொலைக்காட்சியில், 'அவுட் லுக்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. மிகவும் இன்ட்ரஸ்டிங் நிகழ்ச்சி. அதில், 'ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் சுத்தமானவர்கள் யார்?' என்பதை கண்டுபிடிக்க ஒரு சர்வே நடத்தினர். அதன்படி, பிரிட்டிஷார் தான் மிகவும் சுத்தமானவர்கள் எனக் கண்டறிந்தனர்.அதே சமயம், பிரெஞ்சுக்காரர்கள் தான் மிகவும் அசுத்தமானவர்கள் என்று, அதே சர்வே கூறியது. அதற்கான காரணங்கள்...பிரெஞ்சு பெண்மணிகளில் பாதிப்பேர், பற்களை சுத்தம் செய்யும் பழக்கமற்றவர்கள். உணவு உண்டபின், காபி குடித்தபின் வாய் கொப்பளிக்காதவர்கள்!பிரெஞ்சுக்காரர்களில், 50 சதவீதம் பேர், பற்பசையே உபயோகிப்பது கிடையாது.பிரெஞ்சு ஜனத்தொகையில், 30 சதவீதம் பேர், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தான் உடைகளை மாற்றுகின்றனர்.ஒவ்வொரு பிரெஞ்சுக்காரனும், ஆண்டுக்கு இரண்டு சோப்புக் கட்டிகள்தான் பயன்படுத்துகிறான்.கால் நகங்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் வெட்டுகிறான்; மூக்கில் துருத்திக் கொண்டிருக்கும் முடி பற்றி கவலையே கொள்வதில்லை.ஒரு முறை ஷூ வாங்கி விட்டால், பின்னர் அதற்கு பாலீஷே போடுவதில்லை; கிழிந்த சாக்ஸ் பற்றியும் கவலைப்படுவதில்லை!இயற்கை உந்துதல்களை முடித்த பின், காகிதத்தால் துடைத்து போட்டு விடுகின்றனர். பின், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குளிக்கும் போது தான், தண்ணீரால் சுத்தம் செய்கின்றனர்!உவ்வே! இவைகளால் தான் நிறைய சென்ட் உபயோகிக்கின்றனரோ!