முக்கோல முருகன்!
முருகனுக்குரிய விழாக்களில் முக்கியமானது, தைப்பூசம் (பிப்., 8). இந்நாளில், முருகன், தன் தாய், தந்தையின் திருமணத்தை காண்பதாக ஐதீகம். இந்த நாளில் குழந்தை, குடும்பஸ்தன், துறவி என, மூன்று கோலங்களில் காட்சியளிக்கும், வடசென்னிமலை முருகனை தரிசிப்பது மிகுந்த பலனளிக்கும்.மனிதன், குழந்தையாக இருக்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறான். இல்லறத்தில், மகிழ்ச்சியும் இருக்கிறது; துன்பமும் கலந்திருக்கிறது. துறவு மேற்கொள்ளும்போது, எதன் மீதும் பற்றில்லாத நிலையால், மீண்டும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதைத்தான், 'பிள்ளையில்லாத வீட்டில், கிழவன் துள்ளி விளையாடுகிறான்...' என்பர். அறியாத்தனத்தால் ஏற்படும் மகிழ்ச்சியில், குழந்தை துள்ளும். ஆசையை துறக்கும் மகிழ்ச்சியில், மனதளவில் துள்ளிக் குதிப்பார், முதியவர். இந்த அரிய வாழ்க்கை தத்துவத்தை உணர்த்த, முக்கோலங்களிலும், இங்கு, காட்சி அளிக்கிறார், முருகப்பெருமான்.சென்னிமலை அடிவாரத்தில், உள்ளூர் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த, வேறு ஊர் சிறுவன், அவர்களுடன் சேர்ந்து கொண்டான். சிறிது நேரம் விளையாடியவன், திடீரென, குன்றின் மீது ஏறினான். சிறுவர்கள், அவனை தொடர்ந்தனர். ஓரிடத்தில், அவன் திடீரென மறைந்தான். ஊர் மக்களிடம், இச்சம்பவத்தை கூறினர், சிறுவர்கள்.சிறுவன் மறைந்த இடத்தில், முருகன் சிலையும், பூஜை செய்த அடையாளங்களும் இருந்தன. சிறுவனாக வந்து அருள் புரிந்தது, முருகன் தான் என்றறிந்த மக்கள், அங்கு கண்டெடுத்த சிலையை வைத்து, கோவில் கட்டி, பாலசுப்பிரமணியர் என, பெயர் சூட்டினர்.அத்துடன், துறவற வடிவில் தண்டாயுதபாணி சிலையும் வைக்கப்பட்டது. பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில், சிரித்த கோலத்திலும், தண்டாயுதபாணி துறவற கோலத்திலும் மற்றும் உற்சவர், வள்ளி - தெய்வானையுடன், கிரகஸ்த (குடும்ப) நிலையிலும் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில், மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம். பவுர்ணமியன்று, கிரிவலம் உண்டு.கழுத்தில், ருத்ராட்ச மாலையுடன், தலைப்பாகை அணிந்து காட்சி தருகிறார், தண்டாயுதபாணி. நடு மலையில், அவ்வையார், முருகனுக்கு நெல்லிக்கனியை வழங்கிய காட்சியை விவரிக்கும் சிலை உள்ளது. இதனருகில், வீடு கட்டும் பணி, சுபமாக முடிய, பக்தர்கள், கற்களை குவித்து வழிபடுகின்றனர். சன்னிதிக்கு செல்லும், 60 படிகள், தமிழ் ஆண்டுகளை குறிக்கின்றன. ஆயுள் நீடிக்க, படிகளுக்கு பூஜை செய்கின்றனர்.கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில், 40 கி.மீ., துாரத்தில் உள்ளது, காட்டுக்கோட்டை. இங்கிருந்து, 1 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.தி. செல்லப்பா