அன்புடன் அந்தரங்கம்!
அன்பு அம்மாவுக்கு —நான், 25 வயது ஆண். ஐ.டி.ஐ.,யில் படித்து டிப்ளமோ வாங்கியுள்ளேன். வெளியூர் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறேன். என் பெற்றோருக்கு நானும், தம்பியும் தான். அப்பா, பழக்கடை வைத்துள்ளார். தம்பி, அவருக்கு உதவியாக இருக்கிறான்.அலுவலகத்தில், செக் ஷன் சூப்பரவைசராக பணிபுரியும், 30 வயதுடைய ஒருவர், அலுவலகம் அருகிலேயே, அறை எடுத்து தங்கியுள்ளார். அவருடனே என்னையும் தங்க சொல்லியதால், அங்கேயே உள்ளேன்.காலை டிபன் அவரே சமைப்பார். நான், கூட உதவி செய்வேன். மதியம், அலுவலக கேன்டினில் சாப்பிட்டு விடுவோம். இரவு, டிபன் செய்து சாப்பிடுவோம். அவருக்கு இரவு நேர, 'ஷிப்ட்' வரும் நாளில், வெளியே சாப்பிட சொல்லி விடுவார்.அவருக்கு சொந்த ஊரில், மனைவியும், ஒரு வயது குழந்தையும் உள்ளனர். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, ஊருக்கு சென்று வருவார்.ஆரம்பத்தில், நல்ல விதமாக தான் பழகினார். ஆனால், இப்போதெல்லாம், அவர் சொல்வதை மட்டும் தான் கேட்டு நடக்கணும் என்று எதிர்பார்க்கிறார். அவர் பேச்சை மீறி ஏதாவது செய்தால், அதிகமாக கோபப்படுகிறார்.அவரை, என் அண்ணனாக தான் நினைக்கிறேன். ஆனால், அவர், அதிகமாக முன்னுரிமை எடுத்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. அலுவலகத்திலும், வேலையில் ஏதாவது தவறு செய்து விட்டால், கடுமையாக திட்டுவார்.அவருடன், இலவசமாக தங்கியிருப்பதால், இப்படி நடந்து கொள்கிறாரோ என்று கருதி, மாதம் ஒரு தொகையை தர முன் வந்தபோது, மறுத்து விட்டார். தனியாக சென்று தங்கிக் கொள்கிறேன் என்றாலும், சம்மதிக்கவில்லை.இதனால், தேவையில்லாத மனஸ்தாபம் வந்து விடுமோ என்று பயப்படுகிறேன்; மன உளைச்சலில் தவிக்கிறேன். தாங்கள் தான், நல்ல பதிலை தரவேண்டும், அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகன்.அன்பு மகனுக்கு —பிறரை அடக்கியாளுதல், ஒவ்வொரு உயிரினத்தின் மரபணுவிலும் பொதிந்துள்ளது. சக மனிதர்களின் மீது சாட்டை எடுத்து சொடுக்குபவர்களை ஆணாதிக்கவாதி, முதலாளித்துவம் மிக்கவர், அடக்கி ஆள்பவர், அசுர பலமிக்கவர், தண்டனை தரும் நீதிபதி, பிடிவாதம் மிக்க மூர்க்கன் என, பல பெயர்களில் அழைப்பர். பணத்தால், பதவி, அதிகாரம், காமம் மற்றும் உடல் மன பலவீனம் பார்த்து அடக்கியாள்தல் அதிகம்.இப்போது உன்னை எடுத்துக் கொள்வோம்...* அலுவலகத்தில் அறை நண்பருக்கு கீழ் வேலை பார்ப்பவன் நீ.* அறை நண்பரை விட நீ, ஐந்து வயது இளையவன்.* அவர், திருமணமாகி குழந்தை உள்ளவர்; நீயோ பிரம்மச்சாரி.* அவருக்கு முழுமையாக சமைக்க தெரியும்; நீ ஒரு அரைகுறை.* அவரது அறையில் நீ இலவசமாக தங்கி இருக்கிறாய்.* உன் முகத்திலும், உடலிலும் அப்பாவி களை சொட்டுகிறது.நான் ஒரு விஷயம் சொல்வேன் மகனே, நீ பயந்து விடாதே. மனைவியை பிரிந்த பல சம்சாரிகள், வாய்ப்பு கிடைத்தால், ஓரின சேர்க்கையாளர் ஆகிவிடுகின்றனர். உன் அறை நண்பரை நீ, சகல விதத்திலும் அனுசரித்து போனால், அறை நண்பர் உன்னை தங்கமாய் பார்த்துக் கொள்வார். அப்படி ஒரு இழிநிலை வாழ்க்கை உனக்கு தேவை இல்லை.நீ, பெற்றோரை பார்க்க உன் சொந்த ஊருக்கு போவாய் அல்லவா? அப்போது, அப்பாவிடம் நைச்சியமாக பேசு.நீ, அறை நண்பருடன் அறையில் இருக்கும்போது, உன் தந்தை தற்செயலாக வருவது போல வரட்டும். உங்கள் இருவரிடமும் குசலம் விசாரித்துவிட்டு, 'தம்பி... என் மகனுக்கு தனியறை பார்த்திருக்கிறேன். அவனுக்கு வரன் வந்து போகின்றன. என் மகன் தனி அறையில் இருப்பதுதானே, பெண் வீட்டாருக்கு பிடிக்கும்.'இவ்வளவு நாள், என் மகனை பார்த்துக் கொண்டமைக்கு நன்றி, தம்பி. என் மகனுக்கு நீங்கள் மூத்த அண்ணன் போல. அவன் வேறொரு தனியறைக்கு குடி போய் விட்டாலும், பணி இடத்தில் அவனை பரிவாய் பார்த்துக் கொள்ளுங்கள்.'உங்கள் மனைவி, குழந்தைக்கு என் அன்பு விசாரிப்புகள். இந்த ஸ்வீட் பாக்ஸ் உங்களுக்குதான்...' என கூறி, இனிப்பு பாக்கெட்டை அறை நண்பரிடம் கையளிக்க சொல். இந்த நாடகத்தில் உன் பங்கு ஏதுமில்லை என்பது போல நடி.அறையை உன் தந்தை சொல்லி, நீ காலி பண்ணுவதால், அறை நண்பர் விக்கித்து போய் நிற்பார்.அறையை காலி செய்யும் போது, 'அண்ணே... நான், இங்க இருக்கும் போது உங்க மனசு வருத்தப்படும்படி எதாவது பேசி இருந்தால் மன்னிச்சிருங்க. என் கல்யாணத்துக்கு அழைப்பிதழ் நேரா கொண்டு வந்து தருவேன், குடும்பத்தோடு வந்து வாழ்த்தணும்...' என, பிரியா விடை பெறு.தனியறைக்கு வந்த பின் சுயமாய் சமைக்க கற்றுக்கொள். அறை நண்பரை தனியாக விட்டு வந்து விட்டோமே என பச்சாதாபப்படாதே.உன் கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேரும் இளைஞன் ஒருவன், அவரது அறை நண்பராக சேர அதிக வாய்ப்பிருக்கிறது. கொஞ்சம் பணம், உணவை பகிர்ந்தால் அடக்கியாள இவ்வுலகில் ஆயிரம் நபர்கள் கிடைப்பர். —என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.