அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது 61, மனைவியின் வயது 57. எங்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகளுக்கு கடந்த, 2014ல், வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தோம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறியிருந்தார், மருமகன். நாங்களும் விசாரித்த பின்னரே மணம் முடித்தோம். மணமான இரண்டு மாதத்தில், தான் பார்த்து வந்த வேலையை உதறி விட்டு, எங்களுடன் வந்து ஐக்கியமாகி விட்டார். அவருக்கு, எங்கள் ஊரிலேயே ஒரு வேலை வாங்கி கொடுத்தேன். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. என் இளைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்தவுடன், தன் தம்பிக்கு, என் இளைய மகளை திருமணம் செய்து வைக்குமாறு கட்டாயப்படுத்தி, என் மகளை துன்புறுத்தினார், மூத்த மருமகன்.நாங்கள் சம்மதிக்காததால், வீட்டை விட்டு சென்றுவிட்டார். கடந்த, ஐந்து ஆண்டுகளாக எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை. இதனால், எங்கள் மகளுக்கு முறைப்படி விவாகரத்து பெற்று கொடுத்தோம். சில ஊர் பெரியோர்களை அழைத்து வந்து பேச்சு நடத்தினர், மருமகன் வீட்டார். நாங்களும், 'இந்த ஒருமுறை சேர்ந்து வாழட்டும்...' என்று, பெண்ணை அனுப்பி வைத்தோம். ஆனால், மீண்டும் என் பெண்ணை, அவதுாறாகப் பேசி கொடுமைப்படுத்தி உள்ளார். இவன் கூட வாழ வேண்டாம் என்று முடிவு செய்து, மகளை அழைத்து வந்து விட்டோம். இதற்கிடையில், என் மகளை, வங்கி தேர்வு எழுத வைத்தோம். அதில் தேர்வாகி, வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறாள். தனியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள், என் பேத்தி. அந்த பிஞ்சு மனம், தன் தந்தையை, அப்பா என்று ஒருமுறை கூட அழைக்கவில்லை. காரணம் கேட்டால், 'என்னைக் குழந்தையிலேயே விட்டுவிட்டு போனவரை நான் எப்படி அப்பா என்று அழைப்பேன்...' என்கிறாள்; நல்ல விபரமாக பேசுகிறாள்.இப்போது என் மூத்த மகளுக்கு, இரண்டாம் திருமணம் செய்ய வரன் பார்க்கிறோம். விபரம் அறிந்தவளாக இருக்கும் எங்களது பேத்தியின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. மகளுக்கு மணமானால் வருகிறவர், என் பேத்தியை வைத்துக்கொள்ள சம்மதிப்பாரா என்ற கேள்வியும், அவரை அப்பா என்று கூப்பிடுவாளா என, பேத்தியின் நிலைமை நினைத்து கவலையாக இருக்கிறது. தயவு செய்து எங்களுக்கு ஒரு வழி கூறுங்கள், சகோதரி.— இப்படிக்கு, உங்கள் சகோதரன்.அன்பு சகோதரருக்கு —உங்கள் மூத்த மகளின் திருமண வாழ்க்கை முறிய, தெரிந்தோ, தெரியாமலோ காரணமான உங்களின் இளைய மகளை பற்றி, உங்கள் கடிதத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.-இளைய மகளுக்கு இப்போது திருமணமாகி விட்டதா? இளைய மகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக செய்து விட்டீர்கள் என்றால், தாராளமாக உங்கள் முழு கவனத்தையும் மூத்த மகள் மற்றும் அவள் வழி பேத்தி பக்கம் திருப்பலாம்.இப்போது, உங்கள் மூத்த மகளுக்கு, 35 வயதிருக்கக் கூடும். நல்ல வேலையில் இருக்கிறார். மூத்தவளுக்கு மறுமணம் செய்து வைப்பது நல்ல ஏற்பாடு தான்.இதில் சில யதார்த்தங்களை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.உங்களின் எட்டு அல்லது ஒன்பது வயது பேத்தி, தன் அம்மாவின் புதிய கணவரை வாய் நிறைய, 'அப்பா' என்று அழைப்பாளா என்றால், நிச்சயம் மாட்டாள்.உங்கள் மூத்த மகளின், புதிய கணவர், உங்கள் பேத்தியை தங்களுடன் வைத்துக் கொள்ள சம்மதிப்பார். ஆனால், வாய் நிறைய, மனதார பெற்ற மகளாக பாவிப்பாரா என்று உறுதியாக கூற முடியாது.எந்த புதிய முயற்சியிலும் 'ரிஸ்க்' இருக்கத் தான் செய்யும். வரன் பார்க்கும் போது தீர விசாரித்து, வரனுடன் மனம் விட்டு பேசி, மூத்தவளுக்கு மணம் முடிப்பது நல்லது.மூத்த மகளின் திருமணத்திற்கு பின், தாத்தா - பாட்டி இருவரும், இன்னொரு பெற்றோராய் பேத்தியிடம் பாசத்தை கொட்டுங்கள்.புதிய திருமணத்தின் வாயிலாக, உங்கள் மூத்த மகளுக்கு குழந்தை பிறந்து விட்டால், உங்கள் மூத்த பேத்தி, 'செகண்ட் சிட்டிஸன்' ஆக வாய்ப்பிருக்கிறது.பேத்திக்கும், வளர்ப்பு தந்தைக்கும் இடையே ஆன உறவு முறை, சிறப்பாக, மோசமாக அல்லது தனித்தனி சுதந்திர பாதையில் தொடர சாத்தியங்கள் உள்ளன.பேத்திக்கு அனுசரனையாக இருந்து, மூத்த மகளின் திருமண வாழ்க்கையை சீர்படுத்த முயற்சி செய்யுங்கள்.— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.