அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரிக்கு — என் வயது: 53. கணவர் வயது: 55. அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிகிறேன். கணவரும் மருத்துவர் தான். இப்போது இருப்பது, என் இரண்டாவது கணவர். முதல் கணவர் விபத்து ஒன்றில் இறந்து விட்டார். அப்போது நான், ஐந்து மாத கர்ப்பமாக இருந்தேன். எனக்கு, ஒரு தங்கை இருக்கிறாள். நாங்கள் பள்ளியில் படிக்கும்போதே, என் அம்மா இறந்து விட்டார். முன்னாள் ராணுவ வீரரான, என் அப்பா, கண் பார்வை கோளாறு காரணமாக, சீக்கிரமாகவே பணியிலிருந்து ஓய்வு பெற்று வந்துவிட்டார்.பல ஆண்டுகளாக எங்கள் வீட்டில் சமையல் செய்ய இருந்தவர் தான், என் அப்பாவுக்கு இன்று வரை துணையாக இருக்கிறார். என் கணவர் இறந்ததிலிருந்து, மிகவும் கவலைப்பட்டார், அப்பா. எனக்கு மகன் பிறந்தான். அவனது மழலை பேச்சில், ஓரளவுக்கு சமாதானமானார், அப்பா. என் தங்கையும் படித்து முடித்து, பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். தங்கைக்கு வரன் ஒன்று வர, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். மாப்பிள்ளையின் தோழனாக வந்தவர், திருமண வேலைகளை இழுத்துப் போட்டு செய்தார்.என் குழந்தையை துாக்கி வைத்தபடி சுறுசுறுப்பாக வேலை செய்தார். குழந்தையும், அவருடன் சந்தோஷமாக இருந்தான்.இதைப் பார்த்து, 'இவ்வளவு பொறுப்பானவனை, உன் அக்காவுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கலாமே. அவனும், மனைவியை இழந்தவன் தான்...' என்று தங்கையிடம் கூறியுள்ளார், அவளது கணவர். என்னிடமும், அப்பாவிடமும் இந்த விஷயத்தை கூறினாள், தங்கை. எனக்கு விருப்பமில்லை. குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்ணை, எந்த ஆண் தான் திருமணம் செய்து கொள்ள முன் வருவான் என்று நினைத்து மறுத்தேன். மேலும், அடுத்து எனக்கு குழந்தை பிறந்தால், முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை, ஒதுக்கி விடக்கூடும் என்ற பயமும் இருந்தது.என் அப்பாவிடமும் இதையே கூறினேன். 'நான் பேசி பார்க்கிறேன்...' என்றார், அப்பா. என்னை திருமணம் செய்து கொள்ள அவருக்கும் விருப்பம் இருந்ததும், குழந்தையை, தன் மகனாக ஏற்றுக் கொள்வதாகவும் உறுதி அளித்தார்.நான், ஒரே ஒரு நிபந்தனை தான் போட்டேன். 'அவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை. இதற்கு ஒப்புக் கொண்டால், திருமணம் செய்து கொள்கிறேன்...' என்றேன். அதற்கு உறுதி அளித்ததும், எங்கள் திருமணம் எளிமையாக நடந்தது. கொஞ்ச நாட்கள் சந்தோஷமாக தான் இருந்தேன். ஒருநாள், என் மொபைல் எண்ணுக்கு ஒரு பெண் அழைத்தாள்.'இப்போது, உனக்கு கணவராக இருப்பவன், பசுந்தோல் போர்த்திய புலி. அவன் பணிபுரியும் நர்சிங் ஹோமில் நான், நர்சாக பணிபுரிகிறேன். உங்கள் திருமணத்துக்கு முன்பிருந்தே, நாங்கள் காதலர்கள். 'இப்போது, நான் கர்ப்பமாக உள்ளேன். கருவை கலைக்க சொல்கிறான். ஆனால், அப்படி செய்ய காலம் கடந்துவிட்டதால் கருச்சிதைவு செய்ய வழியில்லை... நெருக்கடியான நிலையில் உள்ளேன். நீங்கள் தான் உதவ வேண்டும்...' என்று அழுதாள். அதிர்ச்சி அடைந்த நான், கணவரிடம் விசாரித்தேன். அந்த கயவனோ அலட்சியமாக, 'என் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று நிபந்தனை போட்டாய். ஒரு குழந்தைக்கு அப்பாவாகும் தகுதி இல்லை என்று பலரும் என்னை கிண்டல் செய்ய மாட்டார்களா? எனவே தான், என் பழைய காதலியுடன் நெருக்கமாக இருந்தேன்...' என்றான்.இந்த விஷயம் தெரிந்தால், என் அப்பாவின் உடல்நிலை பாதிக்குமே என்று நினைத்து, அவரிடம் விஷயத்தை மறைத்தேன். அப்பெண்ணை நேரில் சந்தித்து பேசியதில், 'எனக்கு, 15 லட்ச ரூபாய் கொடுத்தால், உங்கள் வாழ்க்கையில் இருந்து விலகி விடுகிறேன். பிறக்கும் என் குழந்தைக்கும், என் மீதி வாழ்க்கைக்கும் ஒரு ஆதாரம் வேண்டாமா?' என்றாள்.நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை தாருங்கள், சகோதரி. — இப்படிக்கு,உங்கள் சகோதரி.அன்பு சகோதரிக்கு — ஒரு மருத்துவராய், 25 ஆண்டுகளாக பணிபுரியும் உங்களுக்கு தெரியாதா? ஒரு திருமணத்தின் அடிப்படைகள் என்னென்னவென்று?தாம்பத்யம் துய்ப்பதும், அதன் பலனாக குழந்தை பெற்றுக் கொள்வதும் தானே, திருமணத்தின் அடிப்படை நோக்கம்?நல்லவேளை உன் இரண்டாவது கணவருக்கு, இன்னொரு நிபந்தனையை நீ விதிக்கவில்லை. திருமணம் சரி, தாம்பத்யம் மூச். இத்தகைய அசட்டுத்தனமான நிபந்தனைகளை நாவல், சினிமா மற்றும் சீரியல்களிலும் தான் பார்க்க முடியும். ஒரு திருமணம் வெற்றி பெற, கணவனும், மனைவியும் மனமொத்த தம்பதியராக இருக்க வேண்டும். இருவருக்கும் குழந்தைகள் பிறக்க வேண்டும். இருவரிடையே புதிதாய் ஒரு ஆணோ, புதிதாய் ஒரு பெண்ணோ புகுந்து விடாமல் இருக்க வேண்டும். அத்தனை வேண்டும்களையும் நம்பிக்கையாய் கொண்டு தானே ஒரு திருமணம் நடக்கிறது?மனைவியை இழந்த விதவன், புதியதொரு துணை கிடைக்க கொஞ்சம் கூடுதலாய் நடிக்கதான் செய்வான். 'அக்மார்க் லேபிள்' உடன் ஒரு ஆண் வந்தால், அவனின் அடிப்படையை நிச்சயம் சந்தேகப்பட வேண்டும்.சரி உன் திருமணம் நடந்து விட்டது. சில பல ஆண்டுகள், உன் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து விட்டாய்.இப்போது உன் மகனுக்கு குறைந்தபட்சம், 23 வயது இருக்கும். கல்லுாரி படிப்பை முடித்திருப்பான். உன் இரண்டாவது கணவரின் கள்ளக்காதல் உனக்கு தெரிந்துவிட்டது. இனி நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...* கணவரது கள்ளக்காதலியுடன் மொபைல் போனில் பேசாதே. அவள் எண்ணை, 'பிளாக்' செய் அல்லது உன் மொபைல் எண்ணை மாற்று* உனக்கும், கணவரின் கள்ளக்காதலி குழந்தைக்கும் துளியும் சம்பந்தமில்லை. கணவரின் ஒரு கள்ளக்காதலிக்கு, 15 லட்சம் ரூபாய் தருகிறாய் என வைத்துக் கொள்வோம். அவருக்கு ஏழெட்டு காதலிகள் இருந்தால், உன் சொத்தை பிரித்து அவர்களுக்கு வினியோகிப்பாயா?* கணவரிடம் பேசு. அவரது கள்ளக்காதலியை, 'செட்டில்' செய்து விட்டு வர, சிறிதுகாலம் அவகாசம் கொடு. உன் யோசனைக்கு அவர் மறுத்தால், குடும்பநல நீதிமன்றத்தில் முறைப்படி விண்ணப்பித்து விவாகரத்து பெறு* கணவரின் லீலைகளை, தந்தையிடம் தெரியப்படுத்து. விஷயம் தெரிந்தால், தந்தையின் உடல்நிலை பெரிய அளவில் பாதிக்காது. ஜீரணித்துக் கொள்வார். விவாகரத்து யோசனையை தான் ஆமோதிப்பார் * விவாகரத்து கிடைத்த பின், மருத்துவ பணியில் கூடுதல் கவனம் செலுத்து. மகனின் எதிர்காலத்தை அற்புதமாக வடிவமைத்து, அவனுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடு. தங்கை குடும்பத்துடன் தகவல் தொடர்பை மேம்படுத்து. இவ்வுலகில், நுாறு சிறுசிறு நியாயமான சந்தோஷங்கள் கொட்டி கிடக்கின்றன. அவைகளை அனுபவிக்கக் கற்றுக்கொள். வாழ்த்துகள்!— என்றென்றும் பாசத்துடன்,சகுந்தலா கோபிநாத்.