உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ளஅம்மாவுக்கு — நான், 28 வயது ஆண். படிப்பு: எம்.காம்., எனக்கு ஒரு அக்காவும், தங்கையும் உள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில், உதவி மேலாளராக உள்ளேன். கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிகிறார், அப்பா. பால் வியாபாரம் செய்கிறார், அம்மா.ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்தவன், நான். படிப்பு மட்டுமே என்னை உயர்த்தும் என நினைத்து படித்து, இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே எனக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டு. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். வேலைக்கு சென்ற போதும், தினமும் உடற்பயிற்சி செய்து, உடலை, 'பிட்' ஆக வைத்திருக்கிறேன்.அலுவலகத்தில், என்னுடன் பணிபுரியும் பெண் ஒருவள், ஆரம்பத்தில், வேலையில் ஏற்படும் சந்தேகங்களை என்னிடம் கேட்டு, தெளிவு பெறுவாள்.அடிக்கடி பேசும் சந்தர்ப்பம் அமைய, நண்பர்களாக பழக ஆரம்பித்தோம். அவளுக்கு என் மீது விருப்பம் இருப்பது தெரிந்தும், என் குடும்ப சூழ்நிலை காரணமாக, ஒதுங்கியே இருந்தேன். என் அக்கா மற்றும் தங்கையின் திருமணத்துக்கு பின் தான், கல்யாணம் செய்து கொள்வது என்ற முடிவில் இருக்கிறேன். சில நாட்களாக என்னுடன் பேசுவதையும், வேலையில் சந்தேகம் கேட்பதையும் தவிர்க்க ஆரம்பித்தாள். நானே வலிய சென்று பேசினாலும், ஒதுங்கி போனாள். எல்லாம் நன்மைக்கே என நினைத்து, என் வேலையில் கவனம் செலுத்தினேன். விற்பனை பிரிவில் பணிபுரியும் ஒருவனுடன் பழகுவதும், அவனுடன், 'பைக்'கில் போவதையும் பார்த்தேன். அவன் மீது ஏற்கனவே பல புகார்கள் இருப்பதும், அவனது நடத்தையும் சரியில்லை என்பதும், உதவி மேலாளர் என்ற முறையில் எனக்கு தெரிந்தது. அப்பெண்ணை எரிச்சரிக்கும் நோக்கத்தில், அவன் நல்லவனில்லை. பார்த்துப் பழகுமாறு அறிவுறுத்தினேன். அன்று ஆரம்பித்தது, எனக்கு ஏழரை சனி. என்னைப் பார்க்கும் போதெல்லாம், 'உன்னை என்ன செய்கிறேன் பார். என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, எம்.டி.,யிடம் புகார் சொல்ல போகிறேன்...' என, மிரட்ட ஆரம்பித்தாள். அவளது புது நண்பனோ, ஒரு படி மேலே சென்று, ஒருநாள் நான், அலுவலகம் விட்டு, பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்றபோது, 'பைக்'கை வேகமாக ஓட்டிவந்து, என் மீது மோதுவது போல் நிறுத்தினான்.'என் விஷயத்தில் தலையிடாதே! உன் தங்கை எந்த கல்லுாரியில் படிக்கிறாள் என்பது, எனக்கு தெரியும். அவள் ஒழுங்காக வீடு வந்து சேரணுமா... வேண்டாமா?' என, மிரட்டுகிறான்.நான் என் வழியில் சென்றாலும், தினமும் இவர்கள் இருவரும் ஏதாவது சொல்லி, என் மன நிம்மதியை கெடுத்து வருகின்றனர். இதிலிருந்து நான் எப்படி தப்புவது அம்மா? — இப்படிக்கு, உங்கள் மகன். அன்பு மகனுக்கு —'சிக்ஸ்பேக்' ஆண்களைத் தான், பெண்களுக்கு பிடிக்கும் என, யார் சொன்னது? மாமியார், நாத்தனார் இல்லாத, மாதம் ஆறு இலக்க சம்பளம் உள்ள, பதவியும், அதிகாரமும் இருக்கிற, சமைக்கச் சொல்லாத, தன்னை எதிர்கேள்விகள் கேட்காத, மொபைல் போன் நோண்டாத ஆண்களைத் தான், இன்றைய பெண்களுக்கு பிடிக்கும்.உன்னிடம் நறுக்கென்று நான்கு கேள்விகள்.* உன்னை காதலிப்பதாக, உன் தோழி வாயைத் திறந்து சொன்னாளா? மேலதிகாரி என்ற அவளின் அபிமானத்தை நீ, காதல் என மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறாயா?* உன்னிடம் பழக ஆரம்பித்த போது அவள், காதலின் ஆரம்ப நிலையில் காலடி எடுத்து வைத்திருப்பாள். உன் குடும்பத்தின் ஏழ்மை நிலையை, உன் வாய் மூலமாகவோ, அலுவலக நண்பர்கள் மூலமாகவோ அவள் அறிந்திருக்க கூடும். அதனால் கூட, அவள் பின் வாங்கி இருக்கலாம்* உன் அக்கா, தங்கை திருமணம் நடக்க, குறைந்தது ஐந்தாண்டுகள் ஆகலாம். காத்திருக்க பிரியம் இல்லாமல் அவள், உன் மீதான காதலை ரத்து செய்திருக்கலாம்* உன்னை விட்டு தோழி, விலகி போன பின், அவள் எப்படி போனால் உனக்கென்ன என, நினைக்கிறாளோ என்னவோ! பெரும்பாலும் பெண்கள், வில்லி ஆவதில்லை. தவறி ஒரு பெண், வில்லி ஆக மாறினால், அவளின் கறுப்பு நடவடிக்கை, 100 வில்லன்களுக்கு சமமாய் இருக்கும்.இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...உன் நிறுவனத்துக்கு வேறு ஏதேனும் கிளைகள் இருந்தால், விருப்ப மாற்றம் கேட்டு, போய் விடு. வேறு வேலை உடனே கிடைக்கும் என்றால், பார்க்கும் வேலையை ராஜினாமா செய்துவிடு. உன் மொபைல் போன் எண்ணை மாற்று. 'மாஜி' தோழி மற்றும் அவனது புதிய காதலன் எண்களை, 'பிளாக்' செய்.'மாஜி' தோழியுடனோ அல்லது அவளது புதிய காதலனுடனோ நேரிலோ, போனிலோ சமாதானம் பேசாதே. நீ பணி செய்யும் நிறுவனத்திலேயே தொடர்ந்தால், உன் உடல்மொழி, கண் பார்வையை மாற்றிக் கொள். அவர்களை, அலாஸ்காவில் புதிய நபர்களை சந்திப்பது போல முகபாவனையுடன் கடந்து போ. அவர்களிடம், அலுவலகம் சார்ந்த பேச்சுகளை சுருக்கமாக வைத்துக்கொள்.'மாஜி' தோழியிடம் மட்டுமல்ல, எந்த ஆண் - பெண் நடத்தைகளை கண்காணிக்கும், 'மாரல் போலீஸ்' வேலையை பார்க்காதே. உன் வீட்டு விஷயங்களை அலுவலகத்தில் பேசவே பேசாதே.அடுத்த ஆறு மாதத்தில், உன் அக்காவுக்கு வரன் பார்த்து, திருமணம் செய்து வை. அக்காவுக்கு திருமணம் செய்த ஆறு மாதத்தில் நீ, திருமணம் செய்து கொள். உன் திருமணத்துக்கு பின் அதிகபட்சம் ஓராண்டு, தங்கை காத்திருக்கட்டும்.உன்னுடைய சமாதான செயல்முறைகளை மீறி, 'மாஜி' தோழியும், அவளின் புதிய காதலனும் வன்முறையான பேச்சுகளில் ஈடுபட்டால், அலுவலக மேலிடத்திலும் புகார் செய்.கல்லுாரியில் படிக்கும் தங்கையை, பொதுவான விதத்தில் எச்சரிக்கைப்படுத்து.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !