உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு — நான், 36 வயது பெண். கணவர் வயது: 39. காவல்துறை பணியில் உள்ளார். எங்களுக்கு இரு குழந்தைகள். மகன், 8ம் வகுப்பும், மகள், 6ம் வகுப்பும் படிக்கின்றனர். எங்களது நடுத்தர குடும்பம். நான், பி.ஏ., படித்துள்ளேன். இல்லத்தரசி. என் கணவர் மிகவும் நேர்மையானவர். சம்பளம் தவிர, வேறு உபரி வருமானம் ஏதுமில்லை. எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிப்பவரும் போலீஸ் இன்ஸ்பெக்டராகத்தான் உள்ளார். அவருக்கு, இரு ஆண் குழந்தைகள். சொந்த வீடு, கார் என, வசதியாக உள்ளார். அவர் குடும்பத்தினர் அனைவரும், விதவிதமான உயர்தர ஆடைகள் அணிவர். அக்குழந்தைகளை பார்த்து, என் பிள்ளைகள் ஏங்குவர். ஆடம்பர வசதி இல்லாவிட்டாலும், எங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து, சந்தோஷமாகத்தான் வைத்துக் கொள்கிறார், கணவர். எங்களுடையது வாடகை வீடு தான். ஒரே துறையில் பணிபுரிந்தாலும், என் கணவரால் ஏன், அந்த அளவுக்கு சம்பாதிக்க முடியவில்லை என, அடிக்கடி நினைத்துக் கொள்வேன். 'யாரிடமும், லஞ்சம் கேட்காமல், அவர்களாக கொடுப்பதை வாங்கிக் கொள்வதில் என்ன தவறு...' எனக் கேட்டு, அடிக்கடி கணவரிடம் சண்டை போடுவேன். 'ஊரோடு ஒத்துப் போகணும். பிழைக்கத் தெரியாமல் இருக்கிறாரே...' என, அவரது நண்பர்களும் கூறுவர். இது எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார், கணவர். எதிர் வீட்டினரை பார்க்க, பார்க்க ஏக்கமும், இயலாமையும் என்னை அலைக்கழிக்கிறது. வேறு எங்காவது வீடு மாற்றி சென்று விடலாம் என்றாலும், 'இதுபோல் குறைந்த வாடகைக்கு வீடு அமையாது. காலம் இப்படியே இருக்காது. பதவி உயர்வு ஏதாவது கிடைத்து, நானும் முன்னுக்கு வந்து விடுவேன்...' என, தத்துவம் பேசுகிறார், கணவர். தினம் தினம், எதிர் வீட்டினரை எதிர்கொள்ளும் போது, மன உளைச்சல் தான் அதிகமாகிறது. இதிலிருந்து விடுபடுவது எப்படி அம்மா? — இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு — லஞ்ச ஊழலில் இந்தியா, உலகின் 180 நாடுகளில், 96வது ராங்க்கில் இருக்கிறது. லஞ்சம் என்ற வார்த்தைக்குள் அபகரிப்பு, உறவினர் சலுகை, மிரட்டி பணம் பறித்தல், ரகசியப் பணம், பணமோசடி, ஏமாற்றுப் பொறி, ஆதாயமுரண் போன்ற நெகடிவ் குற்றங்களும் அடங்கியுள்ளன. * முதலில் நீ சரி செய்ய வேண்டியது உன் மனதை. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. வாழும் வாழ்க்கையில் முழு திருப்தி கொள். இருப்பதில், பொருளாதார தன்னிறைவு கொள். யாருடனும் உன்னை ஒப்பீடு செய்யாதே. பொறாமை மனதின் புற்றுநோய். உன்னிடம், 10 ரூபாய் இருந்தால், எட்டு ரூபாய்க்குள் வாழப்பார். 15 ரூபாய்க்கு வாழ்ந்து, 5 ரூபாய் கடனாளி ஆகாதே * நீ எங்கு போனாலும், லஞ்சத்தில் திளைத்து ஆடம்பரமாய் வாழும் எதிர்வீட்டார் போன்றோர் இருக்கவே செய்வர். அதிக வாடகை கொடுத்தாலும் பரவாயில்லை. தற்காலிக நிம்மதிக்காக வீட்டை மாற்று. கணவரை, காவல்துறையில் வேறொரு இடத்துக்கு பணிமாற்றம் கேட்டு பெற சொல் * நீயும் எதாவது வேலைக்கு போ * மாதம், 10 ஆயிரம் ரூபாய் சேமித்து, தபால் அலுவலக சிறுசேமிப்பு கணக்கில் போடு. குறிப்பிட்ட பணம் சேர்ந்ததும், புறநகரில், ஆனால், சில ஆண்டுகளில் நன்கு, 'டெவலப்' ஆகக் கூடிய இடத்தில் ஒரு மனை வாங்கு. வீட்டுக்கடன் போட்டு, சின்னதாக வீடு கட்டு * பணியில் நேர்மையாக இருக்கும் சந்தோஷம், வேறு எதிலும் கிட்டாது. அந்த சந்தோஷத்தை கணவருடன் சேர்ந்து நீயும் அனுபவி * கணவருடன் சண்டை போட்டு வீட்டை நரகம் ஆக்காதே. மகிழ்ச்சி வெளியில் இருந்து கிடைக்கும் பொருள் அல்ல; நமக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது லஞ்சம் ஒரு பிச்சை. திருவோடை துாக்கி எறி மகளே! — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Vasan
செப் 21, 2025 09:25

சகோதரியே, உங்கள் கடிதம் படித்தேன். என் இதயம் கனக்கிறது. எதிர் வீட்டு சகோதரர் பற்றி லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளியுங்கள். பின்னர் அவர் குடும்பத்துக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்காது.


Loganathan Balakrishnan
செப் 18, 2025 17:10

இது ஒரு விதத்தில் படிக்கும் போது அந்த பெண்ணின் மீது கோவம் வரும் ஆனால் உண்மையில் லஞ்சம் வாங்குவர்கள் என்ன தண்டனை கிடைத்து விட்டது நம் நாட்டில் இப்ப லஞ்சம் ஊழல் செய்தவர்கள் தான் நன்றாக இருக்கிறார்கள் உலக பணக்கார்களாக இருக்கிறார்கள் அவர்களது மூன்றாம் நான்காம் வாரிசுகள் எல்லோரும் மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள் நாள் முழுக்க கஷ்டப்பட்டு வேலை செய்கிறவர்கள் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.


.Dr.A.Joseph
செப் 18, 2025 14:36

இந்த மாதிரியான கடிதங்களை அரசின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று ஒரே அந்தஸ்த்தில் இருக்கும் இருவரில் ஒருவரால் எப்படி முடிகிறது.....


Krishnamurthy Venkatesan
செப் 16, 2025 13:19

லஞ்சம் வாங்கும் கணவனை மனைவிதான் திருத்த வேண்டும். இங்கு மனைவியே லஞ்சம் வாங்க நிர்பந்திக்கிறார். லஞ்சம் வாங்காத கணவனை நினைத்து கொள். நீ நெஞ்சை நிமிர்த்தி நடை போடலாம். லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்து, வங்கி கணக்குகள் முடங்கி, கணவர் சிறை சென்று, சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டு, பிள்ளைகள் பள்ளியிலும் வெளியிலும் அவமானப் பட்டு, குடும்பத்தையே ஒதுக்கும் உற்றார் உறவினர் நடுவிலும் உயிர் வாழ வேண்டுமா/ முடியுமா என எண்ணிப்பார். கணவரின் வருமானத்தை சிக்கனமாக செலவு செய்து சிறிது சிறிதாக சேமித்து பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து சமூகத்தில் உயர்ந்த ஸ்தானம் அடைய வாழ்த்துகிறேன்.


Ramachandran Sekar
செப் 15, 2025 23:47

குட்


Puratchi Veeran
செப் 15, 2025 20:43

உங்கள் கணவரை நினைத்து கர்வம்கொள் ,நமக்கு எவ்வளவு வந்தாலும் சரிபோவது இல்லை


1968shylaja kumari
செப் 15, 2025 15:20

சம்பளம் தவிர, வேறு உபரி வருமானம் ஏதுமில்லை.???? அவர் குடும்பத்தினர் அனைவரும், விதவிதமான உயர்தர ஆடைகள் அணிவர். அக்குழந்தைகளை பார்த்து, என் பிள்ளைகள் ஏங்குவர்.???? . .உன் பிரச்சினை உடனே தீர , உன் கணவனை தீர , கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை படிக்க சொல்


Rathna
செப் 15, 2025 12:02

உன்னுடைய பேராசை உன் பரம்பரையையே பிச்சை எடுக்க வைக்கும். பரவாயில்லையா? ஏழைகளின் பணத்தில் வாங்கும் லஞ்சம், குடும்ப பரம்பரையை துயரத்தில் தள்ளும். ஒவ்வரு தவறான வழியில் வந்த காசும் - ஏழ்மையிலும், மருத்துவ செலவிலும், தீராத துயரத்திலும் குடும்பத்தை தள்ளும் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். லஞ்சம் கொடுப்பவன் நல்ல எண்ணத்தில், அல்லது நல்ல முறையில் வந்த பணத்தை கொடுப்பதில்லை. இதனால் பாவம் மாற்றப்பட்டு, லஞ்ச பணத்தை வாங்கிய குடும்பம் கர்மா வினையை அனுபவித்தே ஆக வேண்டும்.


jkrish
செப் 15, 2025 05:23

மதிப்பு என்று ஒன்று உள்ளதை இது போன்ற அதிகாரிகளை பார்க்கும் போது தான் வருகிறது. இப்போது தான் நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவியும் கலவரத்தில் வைத்த நெருப்பில் இறந்து விட்டார். ஒவ்வொரு ஆணின் மதிப்புக்கு அவனுக்கு தோழோடு தோழாக இருக்கும் பெண் பொறுப்பு.


Anantharaman Srinivasan
செப் 14, 2025 19:46

மனம் பொல்லாதது அது சொன்னாலும் கேளாதது. அடுத்தவரைப்பார்த்து லஞ்சம் வாங்கி மாட்டினால்.? எனவே மனத்தை திடப்படுத்தி, உடலில் உன் ரத்தத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொறாமை பேராசை என்னும் தீயை முதலில் விரட்டியடி மகளே. வாழ்க்கை இனிக்கும்.