உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு, நான், 25 வயது ஆண். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு அண்ணன்கள் மற்றும் ஒரு தங்கை. அனைவரும் படித்து, வேலையில் இருக்கிறோம். என் மாமா பெண்ணை காதலித்தேன். அவளும் என்னை சுற்றி சுற்றி வந்தவள் தான். அண்ணன்களுக்கு திருமணம் ஆனதும், அவளை திருமணம் செய்து கொள்ள நினைத்தேன். எனவே, நெருங்கி பழகவும் ஆரம்பித்தோம். ஒருநாள், நான் அவசரமாக ஆபிஸ் போகும் நேரத்தில், வீட்டுக்கு வந்தவள், 'உடனே, கடைக்கு போகணும், ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டு என்னுடன் வா...' என்றாள். நான் வர முடியாது என்று சொன்னதும், கோபித்துக் கொண்டு போய் விட்டாள். அவள் ஏன் அவசரமாக கூப்பிட்டாள் என்று பிறகு தான் தெரிந்தது... 'மென்சஸ்' நாள் தள்ளி போயிருக்கிறது. ஒருவேளை கர்ப்பமாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு, அதை மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்ள தான் என்னை கூப்பிட்டுள்ளாள். நான் அவளுடன் போகாமல், தட்டிக் கழித்ததும், என் இரண்டாவது அண்ணனை அழைத்து கொண்டு சென்றிருக்கிறாள். நல்லவேளையாக, அப்படி ஏதும் இல்லை என்று தெரிந்து, நிம்மதியடைந்தேன். ஆனால், அதிலிருந்து, அவள் என்னுடன் பேசுவதில்லை. ஆனால், என் இரண்டாவது அண்ணனுடன் நன்றாக பேசுகிறாள். ஏதாவது தேவையென்றால், அவனிடம் கேட்டு வாங்கி வர சொல்கிறாள். வெளியே போக வேண்டுமென்றால், அவனையே துணைக்கு அழைத்து செல்கிறாள். என் அண்ணனும், அவளுடன் சிரித்து பேசுவதும், வெளியே சுற்றுவதுமாக இருக்கிறான். என்னை வெறுப்பேற்ற இப்படி செய்கின்றனர் என்று அமைதியாக இருந்தேன். இப்போது, என் மூத்த அண்ணனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர், என் பெற்றோர். இரண்டாவது அண்ணனும், மாமா பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி விட்டான். இதை என்னால், தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளிடம் சமாதானமாக பேச, பலமுறை முயன்றும், பேச மறுக்கிறாள். என் அண்ணியாக அவளை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. ஒரே வீட்டில் தினமும் அவளை பார்க்க வேண்டுமே என்று நினைக்கும் போதே, மனம் பதறுகிறது. வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி போய் விடலாம் என்றால், என் அப்பா தடுக்கிறார். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வர நல்ல ஆலோசனை கூறுங்கள் அம்மா. — இப்படிக்கு,உங்கள் மகன். அன்பு மகனுக்கு, காலம் உன்னை எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறது பார்த்தாயா? உடன்பிறந்த அண்ணனே உனக்கு போட்டியாக வந்துள்ளான். நீ வாய் வைத்த குச்சி ஐஸ்கிரீமை உன் அண்ணன் பிடுங்கித் தின்கிறான். நீங்கள் நால்வரும் ஒரே குக்கரில் வெந்த இட்லிகள் தானே? இரண்டாவது அண்ணன் இட்லிக்கும், கடைக்குட்டி தம்பி இட்லிக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிடப் போகிறது என, உன் முறைப்பெண் எண்ணுகிறாள் போலும். காதலிக்கும்போதே தாம்பத்யம் வைத்துக்கொண்டது உன் முதல் தப்பு. கலாசாரம் மற்றும் நல்லொழுக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும்; முறைப்பெண் கர்ப்பமாகியிருந்தால் பல சிக்கல்கள் உருவாகி இருக்கும்; தப்பித்தாய் மகனே. திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொண்டதை, உன் முறைப்பெண் பெரிய விஷயமாக கருதவில்லை; நீயும் கருதவில்லை. ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவி, அமைச்சர் பதவி பெற்றவன், தான் முதலில் இருந்த கட்சிக்கு திரும்புவானா? மாட்டவே மாட்டான். அவள், உன்னை வேண்டாம் என, விட்டு விட்டு போய் விட்டாள். அவளை, அவள் போக்கில் விட்டு விடு. யாரோ ஒருத்தியை அண்ணி என, அழைப்பதை விட, முன்னாள் காதலியை, அண்ணி என அழைப்பது சவுகரியமான விஷயம்தான். நண்பன் முதலாளியாகி, சம்பளம் கொடுத்தால், முதலாளி என கூப்பிட மாட்டாயா? உன்னுடன் படித்த வகுப்புதோழன் மேற்படிப்பு படித்து, உனக்கு ஆசிரியராக வந்தால், அவனை, சார் என அழைக்க மாட்டாயா? பணம், புகழ், அதிகாரம் ஆகியவை உறவுப்பெயர்களை ஒரு நொடியில் மாற்றி விடும். தற்கொலையும் வேண்டாம் பணியிட மாற்றமும் வேண்டாம். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அமைதி பெறு. — என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V Rajaraman Iyer
அக் 07, 2026 13:30

. எங்க காலத்தில் ஆண்கள் செய்வார்கள்... இப்போ பெண்கள்....


Ganesun Iyer
அக் 06, 2026 14:33

இதையெல்லாம் எப்படி பிரசுரம் செய்ய அனுமதிக்கிறார்?


Sri
அக் 05, 2026 07:08

வேலையை பாருங்க


M Selvaraaj Prabu
அக் 04, 2026 21:22

கவலைப்பட வேண்டாம் தம்பி. அவளுக்கு இரட்டை குதிரை ஓட்ட ஆசை. சும்மா என்ஜாய்.


V Rajaraman Iyer
அக் 07, 2026 13:32

.... என்ஜாய் மேன்


Ramu
அக் 04, 2026 18:23

இது கட்டுக்கதை போல தெரிகிறது. இதை எழுதியவன் முதிர்ச்சி அடையவில்லை என்று தோன்றுகிறது. தான் அத்துமீறி நெருக்கமாக பழகிய பெண், அண்ணனுடன் திருமணம் நடந்தால், இவன் இருவருக்குமே துரோகம் செய்தவன் ஆகின்றான். ஒன்று இவன் அவளை மணக்க வேண்டும். இல்லையெனில், எப்பாடுபட்டாவது இந்த திருமணத்தை நிறுத்தவேண்டும்.


Gopi
அக் 04, 2026 12:16

இதெல்லாம் ஒரு ஆலோசனையா ?


Yuvaraj Murugappan
அக் 04, 2026 09:20

ஆலோசகரின் கருத்தும் உபயோகித்திருக்கும் எடுத்துக்காட்டுக்குளும்கண்ணியமாக இல்லை