உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கேமின்னணு துறை சார்ந்த நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார், நண்பர் ஒருவர். எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் தான் எதிர்காலத்தை ஆளப்போகிறது என்பதில், அசையா நம்பிக்கை கொண்டவர், அவர். அத்துறையில் தன் அறிவை மேம்படுத்திக் கொள்ள, பல நாடுகளுக்கு சென்று, நவீன தொழில்நுட்பம் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில், ஜப்பான் நாட்டுக்கு சென்று வந்தவர், என்னை சந்திக்க வந்திருந்தார். 'ஜப்பானில், புதுமையாக என்ன கற்று வந்தீர்கள்?' என்றேன். 'சிறப்பாக ஒன்றுமில்லை, மணி. ஆனால், ஒரு விஷயம் தெரிந்தது...' என, கூற ஆரம்பித்தார், நண்பர்:ஒருகாலத்தில், வளர்ச்சியில், குறிப்பாக மின்னணு தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தது, ஜப்பான். இரண்டாம் உலகப் போருக்கு பின், அதன் அபரிமிதமான முன்னேற்றம் பல நாடுகளை பிரமிக்க வைத்தது. காரணம், அவர்களது உழைப்பு.'தோஷிபா, நிஸான், சன்னி, மினோல்டா, ஹிட்டாச்சி' என்று, பல எலக்ட்ரானிக் நிறுவனங்கள், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவின. இது, உலக நாட்டாமையான அமெரிக்காவுக்கு உறுத்தலை ஏற்படுத்தியது.ஜப்பானின் டெக்னிக்கல் முன்னேற்றத்தால், அமெரிக்க பொருளாதாரம் பின்னுக்கு தள்ளப்படுகிறது என்ற குற்றச்சாட்டை வைத்தது. ஜப்பானுக்கு பல அழுத்தங்களைக் கொடுத்து, அவர்கள் வளர்ச்சியை அமுக்க துவங்கினார், அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன். அறிவுசார் சொத்து திருட்டு மற்றும் காப்புரிமை மீறல் என்று சிக்க வைத்து, அமெரிக்கா - ஜப்பான் கூட்டு நிறுவனங்களின் மீது வழக்கு தொடர்ந்தது. அமெரிக்க நீதிமன்றங்களும், ஜப்பான் செய்தது தவறு என்று தீர்ப்பு அளித்து, ஜப்பான் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு வேட்டு வைத்தது. இப்போது விழித்துக் கொண்டது, ஜப்பான். மீண்டும் மின்னணு தொழில்நுட்பத்தில் முன்னேற, ஆதரவு அளித்து வருகிறது, அரசு.இதற்கிடையில் அங்கு, இன்னொரு விஷயமும் ஆச்சரியப்படுத்தியது. அது...தற்போது, உலகிலேயே ஜப்பானியர்கள் தான், நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக, புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நீண்ட காலம் வாழும் மனிதர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்களின் நீண்ட ஆயுள் ரகசியம் குறித்தும், பல காரணங்கள் கூறுகின்றனர், அறிவியலாளர்கள்.முதுமை பருவத்தை எட்டியதும், பணி ஓய்வு பெறுவது இயல்பானது. ஆனால், ஓய்வு காலம், பலரையும் குறுகிய வட்டத்துக்குள் முடக்கி விடுகிறது. அதுநாள் வரை அவர்கள் பின்பற்றி வந்த செயல்பாடுகளில் இருந்து விலக வைத்து, சுறுசுறுப்பை அபகரித்து விடுகிறது. சோம்பேறித்தனம் ஆட்கொண்டு விடுகிறது. ஜப்பானியர்களில் பெரும்பாலானவர்கள், ஓய்வை விரும்புவதில்லை. அவர்கள், பணி ஓய்வுக்கு பிறகும் தங்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அதுதான் அவர்களின் ஆயுள் அதிகரிப்பதற்கு அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கு, மூன்று விஷயங்களை கூறுகின்றனர். அது...* நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருப்பவராக இருந்தாலும் சரி, வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள். எந்த வேலையையும் ஆக்கப்பூர்வமாக ரசித்து, மனநிறைவோடு செய்து முடியுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அந்த நேரத்தை உங்களுக்காக முழுமையாக செலவிடுங்கள். * நல்ல நட்பை தேர்ந்தெடுத்து, அதை நீண்ட காலம் தக்க வைப்பதும், நீண்ட ஆயுளுடன் வாழ உதவும். நண்பர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். நெருக்கடியான சமயத்தில் ஆலோசனை பெறவும், மனம் விட்டு பேசவும், கடினமான காலகட்டத்தில் நம்பிக்கை ஊட்டவும், இன்பம், துன்பங்களை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் இனிமையான பொழுதுகளில் ஈடுபடவும், நட்பு வட்டம் தேவை.* தடைகள், சவால்கள் மற்றும் சோதனைகள் போன்ற, கடினமான காலகட்டத்தை எதிர் நோக்குவதற்கு முதலில் மனதளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மன இறுக்கத்துடன் இருப்பது, நிலைமையை மோசமாக்கும். அந்த சூழலிலும் புன்னகைப்பது முக்கியம். வாழ்வின் ஒரு அங்கமாக, புன்னகை இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களை செய்து முடிக்கும் போதும், பிறர் உதவும் போதும், பிறரிடம் உதவியை நாடும் போதும் என, ஒவ்வொரு சமயத்திலும் சிறு புன்னகையாவது வெளிப்பட வேண்டும். இத்தகைய வாழ்வியல் பழக்கங்களை ஜப்பானில் வாழ்பவர்கள் தவறாமல் பின்பற்றுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. டெயில் பீஸ்!ஜப்பான் நாட்டில், காலியாக கிடக்கும் வீடுகளால், அரசாங்கம் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகிறது. ஒரு பெரிய நகரத்தின் மக்கள் தொகைக்கு ஈடாக, ஜப்பானில் கைவிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை இருக்கிறது. கடந்த அரை நுாற்றாண்டாகவே, ஜப்பானில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து விட்டது. இதனால், வாரிசு இல்லாதவர்கள் இறந்துவிட்ட பின், அந்த வீடுகள், யாரும் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. இறந்து போனவர்களால், அவர்களது வீடுகள் காலியாக இருப்பதோடு மட்டுமின்றி, பலர் வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்று விடுவதும், ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதன்படி ஜப்பானில் உள்ள ஒட்டுமொத்த கட்டடங்களில், 14 சதவிகித குடியிருப்புகள், காலியாக இருக்கின்றன.- என்று கூறி முடித்தார், நண்பர்.நண்பருக்கு விடை கொடுத்து அனுப்பி, 'ஜப்பானுக்கு ஏற்பட்ட சோதனை போல் நமக்கு ஏற்பட்டிருந்தால், நம் செயல்பாடு எப்படி இருந்திருக்கும்...' என்று நினைத்துப் பார்த்தேன்.குழாய் பழுது நீக்குபவருக்கு போன் செய்தாள், ஒரு பெண்.'எங்கள் வீட்டு குழாய்களை, இன்னைக்கு கட்டாயம் பழுது பார்த்து சரி செய்து விடு. நான், வீட்டில் இருக்க மாட்டேன். ஆனால், எங்கள் வீட்டில் ஒரு பெரிய நாய் இருக்கும். அது உன்னை ஒன்றும் செய்யாது. ஆனா ஒண்ணு, என்ன பண்ணினாலும் எங்க வீட்டுக் கிளியோட மட்டும், ஒரு வார்த்தை கூட பேசிடாதே...' என்றாள். அவள் கூறியபடி, பிளம்பரும் வீட்டுக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தார். அங்கே இருந்த நாய், ஒரு மூலையில் அமைதியாகப் படுத்து இருந்தது. கிளி தான், அவனை வேலை பார்க்க விடாமல், பேசிப் பேசியே மிகவும் படுத்தி எடுத்தது.பொறுமையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான், பிளம்பர். கடைசியில் பொறுமை இழந்து, 'முட்டாள் கிளியே, வாயை மூடு...' என்று கத்தினான். அதற்கு அந்தக் கிளி என்ன செய்தது தெரியுமா? 'டைகர் அவனைக் கடி...' என்றது. அப்புறம் என்ன நடந்து இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? — எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !