அந்துமணி பா.கே.ப.,
பா - கே'நாலு கழுதை வயசாச்சு... இன்னும் எதைப் பார்த்தாலும் பயப்படறியே... வெட்கமா இல்லை. தைரியமா போ...' என்று, யாரையோ போனில் திட்டிக் கொண்டிருந்தார், குப்பண்ணா.'போனில் யாரு? உம் பேரனா? 'பூச்சாண்டி வர்றான்'னு, சின்ன வயசில் சொன்னீங்க தானே... அதான். பய உணர்வும் நமக்குள் இயல்பா வந்து விடுகிறது. 'அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது தான் அறிவுடமை...' என்று, வள்ளுவரே கூறியிருக்கிறாரே...' என்றார், உதவி ஆசிரியை ஒருவர். 'அதற்காக, எடுத்ததற்கெல்லாம் பயந்து கொண்டிருந்தால் எப்படி?' என, கூற ஆரம்பித்தார், குப்பண்ணா:இருட்டு, ஆழமான கிணறு, ரத்தம் மற்றும் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பார்த்தெல்லாமா பயப்படுவது. என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற எண்ணமே, அச்ச உணர்வுக்கு காரணம். ஆனால், விலங்குகளுக்கு கடந்த காலம், எதிர்காலம் பற்றியெல்லாம் கவலை இல்லை. மனிதனுக்கு, ஆறு அறிவு என்கிறோம். விலங்குகளுக்கு, ஐந்து அறிவு என்கிறோம். இருந்தாலும், விலங்குகளிடம் இருந்து மனிதன் கற்க வேண்டிய பாடம் நிறையவே இருக்கு.முக்கியமாக, ஐந்து பாடங்களை விலங்குகளிடம் இருந்து கத்துக்கணும். முதலாவது, விலங்குகளுக்கு பயம் ரொம்ப குறைவு. மனிதன் தான் எதற்கெடுத்தாலும் பயப்படறான்.நடந்ததை நினைச்சு பயப்படறான். நடக்கப் போறதை நினைச்சு பயப்படறான். இல்லாததை நினைச்சு பயப்படறான். மற்றவர்களை பார்த்துப் பயப்படறான். மரணம் வந்து விடுமே என்று பயப்படறான். ஆனா, அப்படி இல்லை, விலங்குகள். தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் நிலையில் தான் பயப்படும். ஆபத்து நீங்கிப் போச்சுன்னா, அதுக்கப்புறம் கவலைப்படாம எப்போதும் போல வாழ ஆரம்பிச்சுடும். அடுத்தது, தோல்வியைக் கண்டு கவலைப்படறதில்லை, விலங்குகள். மனிதர்களில் தவற விட்ட பேருந்துக்காக கவலைப்படறவன் உண்டு. பரீட்சையிலே தோல்வியா கவலை, தேர்தலில் தோல்வியா கவலை. ஒரு வாய்ப்பு நழுவிப் போனா, உடனே கவலை.ஒரு பூனை, எலியை துரத்திக்கிட்டு ஓடுது. சாமர்த்தியமா வளைக்குள்ளே புகுந்து தப்பிச்சுக்கிடுது, எலி. உடனே, நாம தோற்றுப் போயிட்டோமேன்னு ஒரு மூலையிலே உட்கார்ந்து அழறதில்லை, அந்தப் பூனை; போறவங்க, வர்றவங்ககிட்ட எல்லாம் சொல்லி புலம்பறதில்லை. மறுபடியும் வேட்டையாடி தனக்கு தேவையான எலியை பிடிச்சுக்கும்.மூணாவது, தங்கள் குட்டிகளை முறையாக வளர்க்கும், விலங்குகள். இது ஒரு ஆச்சரியமான விஷயம். குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில், உணவுகளை கொண்டு வந்து கொடுக்கும், விலங்குகள். குட்டி கொஞ்சம் வளர்ந்த பின், எப்படி வேட்டையாடறது, எப்படி நீந்தறது, எப்படி ஓடறதுங்கற விபரமெல்லாம் சொல்லிக் கொடுத்துடும். அதன்பின், குட்டிகள் தானா பிழைச்சுக்கட்டும்ன்னு, அதுகளை தனியா விட்டுடும். அப்புறம் குட்டிகளை திரும்பிக்கூட பார்க்கறதில்லை. குட்டிகளும் தனித்துப் போராடி வாழ்ந்து காட்டும். மனிதன் அப்படி இல்லை. மகனையும் விடறதில்லை. பேரனையும் விடறதில்லை; கடைசி வரைக்கும் கூடவே இருந்துட்டு, 'அப்படி செய், இப்படி செய்'ன்னு, சொல்றது. 'உனக்கு அனுபவம் பத்தாது, பெரியவங்க சொல்றதைக் கேள்...' என்று ஏதாவது சொல்லிட்டு, அடுத்த தலைமுறையோட சுயமான வளர்ச்சிக்கும், முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடறது, மனிதனோட இயல்பு. நான்காவது, எதிர்காலத்தை நினைச்சு அஞ்சுவது கிடையாது, விலங்குகள். நாளைக்கு நல்லபடியா விடியணுமேங்கிற கவலை நமக்கு தான். எதிர்காலம், அடுத்த தலைமுறை என, கற்பனை பண்ணி, அதுக்காக சேமிக்கணுமே என்பதற்காக இன்றைக்கு படாதபாடு படறான். பசி எடுத்த பின் தான், இரையை தேடவே ஆரம்பிக்கும், சிங்கம்; அவ்வளவு தன்னம்பிக்கை. எறும்புகள் மற்றும் பறவைகள், மழைக்காலம் வந்துட்டா தேவைப்படுமே என்பதற்காக மட்டும், கொஞ்சம் சேர்த்து வைக்கறது உண்டு.எப்பவோ வரப்போற தேவையை நினைத்து, இப்பவே நடுங்கறது கிடையாது. நிகழ்காலத்தில் வாழ கற்றுக் கொள்ளுங்கள்ன்னு, பெரிய ஞானிகள்லாம் நமக்குப் புத்திமதி சொல்றாங்க. விலங்குகள் ஏற்கனவே அப்படித்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கு.ஐந்தாவது விஷயம், அதுகளும் வாழும், அடுத்ததையும் வாழ விடும், விலங்குகள். எலியும் - பூனையும், சிங்கமும் - மானும் எதிரிகள் தான். இருந்தாலும் தேவைக்கு மீறி, எந்த விலங்குகளையும் கொல்றதில்லை.காட்டுல எல்லா விலங்குகளும் வாழறதுக்கு இந்த சகிப்புத்தன்மை தான் காரணம். இதெல்லாம் நாம விலங்குகள்கிட்டே இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்... - இப்படி கூறி முடித்தார், குப்பண்ணா.'ஓய்... நாமெல்லாம் விலங்குகள் இல்லை; முற்றும் துறந்த ஞானிகளும் இல்லை; நீங்கள் குறையா சொல்ற, 'குவாலிட்டி'கள் எல்லாம் இருந்தால் தான் மனுஷங்கன்னு அர்த்தம். நாம நாமளா இருப்போம்; விலங்குகள் அதுவா இருக்கட்டும்.'இதை போய் ஒப்பிட்டு பார்த்துட்டு... என்ன தான் இருந்தாலும், விலங்குகளை அடக்கி ஆளும் திறமை, மனுஷங்களுக்கு தான் இருக்கிறது...' என்று, 'நச்'சென்று கூறினார், லென்ஸ் மாமா. குப்பண்ணா, 'ஙே' என்று விழித்து, 'உம்மை திருத்தவே முடியாதுப்பா...' என்றபடி, எழுந்து சென்றார்.ப கிளியோபாட்ரா என்றவுடன், அவர் ஒரு பேரழகி, கழுதை பாலில் குளித்து, தன் அழகை மேம்படுத்தி கொண்டவர் என்பன போன்ற கதைகள் தான், நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், உண்மையில், கிளியோபாட்ரா, பன்முகத்தன்மையும், நுண்ணறிவாற்றலும், மேதமையும் கொண்ட பன்மொழி வித்தகர், ஆய்வாளர் மற்றும் மருத்துவர். * கிளியோபாட்ரா காலத்தில், எகிப்திய மொழி சித்திர எழுத்துக்களை படிக்கத் தெரிந்த ஒரு சிலரில், இவரும் ஒருவர் * கிரேக்க மொழி தெரியும். பார்த்தியன், ஹிப்ரூ, மெடஸ், டிராகுலாடைட்டிஸ், சிரியன், எத்தியோப்பியன் மற்றும் அரபி மொழிகளில் சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரியும் * இதுதவிர, உலக அரசியல், புவியியல், வரலாறு, வானியல், கணிதம், மருத்துவம், அல்கெமி எனப்படும் ரசவாதம், விலங்கியல் மற்றும் பொருளாதாரம் என, பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்* தனக்கென தனியாக ஒரு சோதனை சாலையை உருவாக்கி, அதில், ஆய்வுகளை நடத்தி வந்தார் * மூலிகை அழகுக் குறிப்புகள் பற்றிய புத்தகங்களையும் எழுதியுள்ளார் * புகழ்பெற்ற ரோமானிய இயற்பியலாளர், கலன் என்பவர், கிளியோபாட்ராவின் மருத்துவக் குறிப்புகளை மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளார். அவற்றில் முக்கியமானது, வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் எண்ணெய் தயாரிப்பு முறைகள் குறித்தவை ஆகும். எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.