அந்துமணி பா.கே.ப.,
பா - கே லென்ஸ் மாமா, அன்று அலுவலகத்துக்கு, 'லீவு' போட்டிருந்தார். மற்ற நண்பர்களும் வெவ்வேறு வேலை காரணமாக வெளியே சென்றுவிட, நான் மட்டும் அலுவலகத்தில் இருந்தேன். மாலை, எழுத்தாள நண்பர் ஒருவர் வந்தார்.'வா மணி... காலாற நடந்து விட்டு வரலாம்...' என அழைத்தார். எழுத்தாள நண்பருக்கு, ஆன்மிக பெரியவர்கள் பலருடன் பழக்கமிருந்தது. யோகா, ஆழ்நிலை தியானம் எல்லாம் செய்பவர். அவ்விஷயங்களைப் பற்றி நிறைய பேசக் கூடியவர். ஏதாவது பயனுள்ள தகவல் கிடைக்கலாம் என, அவருடன் சென்றேன்.போகும் வழியில், தள்ளு வண்டிக்காரன் வேர்க்கடலை விற்றபடி வந்தான். அவனிடம் இரண்டு பொட்டலம் வாங்கி, என்னிடம் ஒன்று கொடுத்தார்.பொட்டலம் என்னவோ பெரியதாக தான் இருந்தது. ஆனால், அதில் குறைந்த அளவே வேர்க்கடலை இருந்தது. மேலும், வண்டியில் குவித்து வைத்திருந்த வேர்க்கடலை, பெரிது பெரிதாக இருக்க, எங்களுக்கு கொடுத்தது, சிறுத்து காணப்பட்டது. 'இதென்னடா சோதனை. வண்டியில் இருக்கும் தரமானதை வறுத்து கொடுக்க சொல்லலாம்...' என்றேன். 'வேண்டாம் மணி... 'நீ கொடுக்கிற காசுக்கு, ஒரு மூட்டை வேர்க்கடலையா கொடுப்பாங்க...' என, வாக்குவாதம் செய்வான். அவன் எண்ணம்; அவன் வாழ்க்கை. போகலாம்...' என, அங்கிருந்து நகர ஆரம்பித்தார். 'இங்கு லென்ஸ் மாமா இருந்திருந்தால், வேர்க்கடலைக்காரன் இந்நேரம் சட்னி ஆகி இருப்பானே...' என, நினைத்து, அவருடன் நடக்க ஆரம்பித்தேன். திடீரென, 'உலகம் பூரா எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவாவே இருக்கு. எதிர்காலத்தில் மனுஷன் நிம்மதியா வாழ்வது சந்தேகம் தான்...' என்றார். 'இதற்கு யார் காரணம்?' என்றேன். 'மனுஷங்க தான் காரணம். இதோ இந்த சின்ன விஷயத்துக்கே, வேர்க்கடலைக்காரன் அவன் லெவலுக்கு நம்மை ஏமாத்தறான். இப்படி தான் பெரிய விஷயங்களில் ஆளாளுக்கு நடந்து கொள்கின்றனர்...' என்றார்.ஆர்வமாக அவர் சொல்வதை காது கொடுத்து கேட்க ஆரம்பித்தேன். சில விஞ்ஞான உண்மைகளை உதாரணமாக சொன்னார்: ஒரு சோதனை நடந்ததாம். ஒரே மாதிரியான இரண்டு தோட்டம். அதில், ஒரு தோட்டத்தில் இருந்த தோட்டக்காரர், அங்கேயிருந்த செடி, கொடிகளை ரொம்ப அன்பாகவும், கனிவாகவும் கவனிச்சிக்கிட்டாராம். இன்னொரு தோட்டத்தில் உள்ள செடி கொடிகளை, வெறுப்பாகவும், எரிச்சலாகவும் கவனிச்சிக்கிட்டாராம், அந்த தோட்டத்துக்காரர். அன்பாகவும், கனிவாகவும் கவனித்து வந்த செடி, கொடிகள் சீக்கிரமாகவும், வலுவாகவும் வளர்ந்ததாம். வெறுப்பா கவனித்து வந்த தோட்டம், அந்த அளவுக்கு வளரலயாம்! விஞ்ஞானிகளுக்கு இது, ஆச்சரியமாக இருந்தது. இன்னொரு சோதனை செய்தனர். ஒரு தோட்டத்தில் இருந்த தோட்டக்காரருக்கு, கத்தரிக்கோலால் தேவையில்லாத கிளைகளை வெட்டி ஒழுங்கு பண்றது தான் வேலை. இந்த தோட்டக்காரர், வேறொரு தோட்டத்தில் இருந்த, தன்னுடைய நண்பரை பார்க்க சென்றார். இவரு அங்கே போன உடனே, அங்கேயிருந்த சில நுட்பமான செடிகள், வெட்டறதுக்குத்தான் வர்றார் என்பது மாதிரி, இலைகளை சுருக்கிக்க ஆரம்பிச்சதாம். இதுல இருந்து என்ன தெரியுதுன்னா... ஒரு தனி மனிதனுடைய எண்ணம், சொல் மற்றும் செயல் எல்லாம், இந்த பிரபஞ்சத்துல ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது தான்.இயற்கையின் விதிகளைப் புரிஞ்சிக்கிட்டு, அதை மீறாமல், அதனுடன் ஒத்துப்போகிற எண்ணம் தான் நல்ல எண்ணம்! நம் வாழ்க்கை ஒரு சங்கிலி தொடர் மாதிரி, உணர்வு பூர்வமா இணைக்கப்பட்டிருக்கு. இதை, 'லைப் எனர்ஜி வைப்ரேஷன்ஸ்' என்பர். ஒருத்தருடைய உடம்புக்கோ, மனசுக்கோ ஏதோ ஒரு அதிர்ச்சியால் பாதிப்பு ஏற்படுதுன்னு வெச்சிக்குங்க. அது, அவனுக்கு ரத்த சம்பந்தமுள்ள அல்லது கடமை சம்பந்தம் உள்ளவங்க உடம்புலேயும், மனசுலேயும் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும். இயற்கையோட இந்த விதிப்படித்தான் எண்ண அலைகள், அடுத்தவங்களை பாதிக்கிறது என, நிரூபிக்கப்பட்டிருக்கு. சில பேர் வாழ்த்தினாலும், திட்டினாலும், அது, 'ரேடியோ ஆக்டிவ் பங்ஷன்' மாதிரி, அடுத்தவங்க மேலே ஒரு அழுத்தத்தை உண்டு பண்ணும். இப்ப உலகம் பூராவும் அங்கங்கே குழப்பங்கள், அழிவுகள் அடிக்கடி நடப்பது எல்லாம், மனிதர்களுடைய ஒட்டுமொத்த எண்ண அலைகள் மற்றும் 'டென்ஷன்'கள் வெளியே விடப்படுவதால் தான். இந்த அண்டவெளியால், ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் கெட்ட எண்ணங்களை தாங்க முடியும். அளவுக்கு மீறி போயிட்டா... நெருக்கடி, கலவரம், சண்டை தான்.'வினை விதைத்தவன் வினை அறுப்பான்'ங்கறது வெறும், திண்ணை பேச்சு இல்லை. அது, விஞ்ஞான பூர்வமான உண்மை. இந்த விஞ்ஞான உண்மைகளை எல்லாம் புரிஞ்சு, எல்லா பள்ளிக்கூடங்கள்லேயும் குறைஞ்சது, மூணாவது வகுப்புலே இருந்தாவது, குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை போதிச்சா, வருங்காலத்துலே நல்ல விதமான எண்ண அலைகள் இந்த பிரபஞ்சத்துலே பரவும். அதுக்கப்புறம் இந்த பூமியே சொர்க்க மயமாகும்.என்று கூறி முடித்தார். அவர் கூறிய கருத்துக்களை சிந்தித்தபடி, அவரிடமிருந்து விடைபெற்று, வீட்டுக்கு கிளம்பினேன்.பஏவி.எம்., ஸ்டுடியோவில், பராசக்தி படத்தில், சிவாஜி கணேசன் நடித்த போது, பலரது அவமதிப்புகளுக்கு ஆளாகி இருக்கிறார். 'என்னப்பா இந்த புதுப் பையன், 'சக்ஸஸ்'ன்னு சொல்லச் சொன்னா, சக்தத்துங்கறான்...' என்றார், ஒரு சவுண்டு இன்ஜினியர். 'என்ன இவன் ரொம்ப ஒல்லியா இருக்கானே. சினிமாவுக்கு ஒத்து வருவானா?' என்றார், மற்றொருவர். 'அந்தப் பையன் முகம், குதிரை மூஞ்சு மாதிரி இருக்கு...' என்றார், வேறொருவர். இத்தகைய அவமானங்களால் நொந்து போய் தனியே சென்று, ஓ...வென்று அழுதிருக்கிறார், சிவாஜி கணேசன்.'ஏவி.எம்., ஸ்டுடியோவில் உள்ள வேப்ப மரங்களெல்லாம், நான் விட்ட கண்ணீரில் தான் வளர்ந்தன...' என, ஒருமுறை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார், சிவாஜி கணேசன்.இவ்வளவு துாரம் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதும், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான, பி.ஏ.பெருமாள் மனம் மாறவில்லை. 'என்ன ஆனாலும் கணேசனை வைத்து தான் படத்தை எடுப்பேன்...' என, கூறிவிட்டார். கடந்த, 1952ல் படம் வெளியானது. ஒரே நாளில் புகழ்பெற்ற சினிமா நடிகரானார், சிவாஜி கணேசன். அடுத்தடுத்து வந்த திரைப்படங்கள் மூலம், நடிப்பின் இமயம் எனப்பட்டார். இந்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளை தந்தது. பிரெஞ்சு அரசு, 'செவாலியே' விருது தந்தது. எகிப்து அரசு, 'ஆசிய - ஆப்ரிக்க' திரைப்பட விருதை தந்து கவுரவித்தது. அமெரிக்க அரசு, நயாகராவின் ஒருநாள் மேயராக்கி, தங்கச்சாவி கொடுத்து, நடிப்பின் சிகரத்துக்கு கிரீடம் சூட்டியது. — எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.