உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கே 'உ லகம் முழுவதிலும், பெரும்பாலான மக்களுக்கு, மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. வெளிநாடுகளில், மது அருந்தினால், கமுக்கமாக இருக்கின்றனர். நம் நாட்டில் மட்டும், 'குடிமகன்'களின் அலப்பறைகள், நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறதே... இதற்கு என்ன காரணம்?' என்றார், 'திண்ணை' நாராயணன். 'ஓய், நாணா... எப்போதும் இருப்பது தானே... இப்ப என்ன புதுசா கண்டுபிடிச்சிட்டீர்...' என்றார், லென்ஸ் மாமா. 'சமீபகாலமா, நாளிதழில் வரும், 'குடிமகன்'கள் விபரீத செயல்களில் ஈடுபடுவது பற்றி வெளியாகும் செய்திகளைப் படிப்பதில்லையா?' என்று மடக்கினார், நாராயணன். 'அப்படி என்ன விபரீத செய்தி... சொல்லும்வே...' என்றார், மாமா. தன் ஜோல்னாபையிலிருந்து, இரண்டு, மூன்று பழைய நாளிதழ், 'கட்டிங்'குகளை வெளியில் எடுத்து காட்டி, 'கடந்த மாதம் நடந்த இரு சம்பவங்களை மட்டும் கூறுகிறேன்...' என்று ஆரம்பித்தார்: உத்திரபிரதேச மாநிலம், பகார்பூர் பகுதியில் உள்ள கிராமங்களில், சிறுத்தைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். இதனால், அடிக்கடி, அங்கு உயிர் பலிகளும் ஏற்படுவதாக, வனத்துறையினருக்கு புகார் வந்துள்ளது. எனவே, சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தியும், சிறுத்தைகளை பிடிக்க, ஆங்காங்கு கூண்டுகளும் வைத்துள்ளனர். சிறுத்தைகளை கண்காணிக்க, 'டிரோன்' கேமராக்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், ஒருநாள் இரவு, 'ஓவர்' குடிபோதையில் தடுமாறியபடி வந்த, கிராமத்தை சேர்ந்த ஒருவன், சிறுத்தையை பிடிக்க வைத்திருந்த கூண்டினுள் நுழைந்துள்ளான். கூண்டின் தானியங்கி கதவு மூடிக்கொண்டது; கூண்டினுள் சிக்கிக் கொண்டான், அந்த போதை ஆசாமி. அப்போது தான் அவனுக்கு தான் ஆபத்தில் சிக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து, கத்தி, கூச்சலிட்டுள்ளான். இரவு நேரம் என்பதால், யாருக்கும் இவனது சத்தம் கேட்கவில்லை. பதறிப்போனவன், தட்டுத்தடுமாறி, தன்னிடம் இருந்த, மொபைல் போனிலிருந்து, கிராமத்திலுள்ள தன் உறவினருக்கு தான் கூண்டில் சிக்கியதை தெரிவித்துள்ளான். அந்த உறவினர், கிராமத் தலைவரிடம் கூற, அவர் வனத்துறையினர் மற்றும் போலீசுக்கு தகவல் அனுப்பினார். வனத்துறையினர் மற்றும் போலீசார், எந்த கூண்டில் சிக்கியுள்ளான் என்பதை கேமரா பதிவு மூலம் கண்டுபிடித்து, அந்த இடத்துக்கு செல்வதற்குள், இரண்டு மணி நேரத்துக்கு மேலாகி விட்டது. அதற்குள் அந்த ஆசாமிக்கு பயத்தில் போதை முழுவதும் தெளிந்துவிட, வேர்க்க, விறுவிறுத்தபடி, கூண்டினுள், பரிதாபமாக ஒடுங்கியபடி இருந்துள்ளான். அப்புறமென்ன, அவனை மீட்டு, கடுமையாக எச்சரித்து அனுப்பி உள்ளனர். இன்னொரு சம்பவம், சென்னையை அடுத்துள்ள, திருநின்றவூரைச் சேர்ந்த, ஆட்டோ ஓட்டுனரான ஒருவன், இரவு, வயிறு முட்ட குடித்து விட்டு, போதையுடன் ஆட்டோ ஓட்டி சென்றுள்ளான். பெரியபாளையம் நெடுஞ்சாலையில் வேகமாக ஆட்டோ ஓட்டி சென்றான். சாலை ஓரம் இருந்த, 15 அடி ஆழமுள்ள குளத்திற்குள் ஆட்டோ பாய்ந்து விட்டது. ஆட்டோ தண்ணீரில் மூழ்க ஆரம்பிக்க, ஜில்லென்ற தண்ணீர் பட்டதும், சுதாரித்து கொண்டவன், ஆட்டோவை குளத்திலேயே விட்டுவிட்டு, எப்படியோ தப்பி சென்று, அருகிலிருந்த உறவினர் ஒருவர் வீட்டு திண்ணையில் படுத்து துாங்கிவிட்டிருக்கிறான். விடிந்ததும், ஆட்டோ ஓட்ட சென்றவன், இரவு முழுவதும் வீடு திரும்பவில்லையே என்று, அவனது குடும்பத்தினர் தேடியுள்ளனர். இறுதியாக, குளத்தில், ஆட்டோவின் மேற்பகுதி தென்பட, போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும், பொக்லைன் இயந்திரம் மூலம், ஆட்டோவை மேலே இழுத்து வந்துள்ளனர். ஆட்டோவில் ஆள் யாரும் இல்லாததால், குளம் முழுக்க தேடி களைத்து போயினர், போலீசாரும், தீயணைப்பு துறையினரும். அப்போது, ஆட்டோ ஓட்டுனரின் உறவினர், அவனது குடும்பத்துக்கு போன் செய்து, தன் வீட்டு திண்ணையில் படுத்து துாங்கிக்கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்க, பதறியபடி ஓடினர். இரவு நடந்தது எதுவுமே தெரியாமல், நிம்மதியாக துாங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி, விசாரிக்க, 'திரு திரு'வென விழித்துள்ளான். அதற்குள், போலீசாரும் அங்கு வந்து அவனை, நாலு தட்டு தட்டி, காவல் நிலையம் இழுத்து சென்றுள்ளனர். அவனது குடும்பத்தினர் பின் தொடர்ந்து சென்று, கெஞ்சி கூத்தாடி, அவன் மீது வழக்கு எதுவும் போடாமல் தடுத்துள்ளனர். தேவை இல்லாமல், குளம் முழுக்க தேடி அலைய வைத்ததில், போலீசார் கடுப்பாகி, அவனை சகட்டுமேனிக்கு திட்டி, கழுத்தைப் பிடித்து, வெளியே தள்ளியுள்ளனர். சிறிது காலத்துக்கு முன், குஜராத்திலுள்ள விலங்குகள் சரணாலயம் ஒன்றில், சிங்கம் இருந்த பகுதிக்குள், மதுபோதையில் ஒருவன் குதித்து, காட்டு ராஜாவிடம் 'பேச்சுவார்த்தை' நடத்தி, பலியான செய்தி வந்ததே, 'டிவி'யில் கூட கேமரா பதிவை ஒளிபரப்பினரே! இதெல்லாம் எதனால்? குடிச்சமா, வீட்டுக்கு சென்று துாங்கினோமா என்றில்லாமல் இப்படி விசித்திரமாக நடந்து கொண்டது எதனால்? - என்று முடித்தார், நாராயணன். மாமா அங்கிருந்து நழுவ, நான் யோசிக்க ஆரம்பித்தேன். மது அருந்துபவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றத்தால், உளறுவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இப்படி புலி, சிங்கம், யானைகளுடன் வம்பு வைத்துக் கொள்வதற்கு காரணம் என்னவாக இருக்கும்? தெரிந்தவர்கள் எனக்கு எழுதலாமே! படித்தது அரண்மனை வேலைக்காரியின் அழகில் மயங்கினான், இளவரசன் ஒருவன். அவளை அடைய துடித்தான். ஆனால், அந்த வேலைக்காரியோ, ஒரு வேலைக்காரனை உயிருக்கு உயிராக நேசித்தாள். அதை அறிந்த இளவரசன் வேதனைப்பட்டான். அமைச்சரிடம் சொல்லி, 'இருவரையும் எப்படி பிரிப்பது, வேலைக்காரனை நாடு கடத்தலாமா அல்லது சிறையில் அடைக்கலாமா?' என்று கேட்டான், இளவரசன். ' பிரிவு என்றுமே ஆர்வத்தை ஆவேசமாக துாண்டும். இருவருமே துாரத்திலே இருந்து ஒருவரையொருவர் பார்ப்பதால் தான் இந்த ஈர்ப்பு. அருகருகே இருவரையும் சேர்த்து வைத்தால் பிரிந்து விடுவர்...' என்றார், அமைச்சர். எனவே, 'இருவரையும் நாள் முழுவதும் ஒருவரையொருவர் பார்க்கும்படி கட்டிப் போடுங்கள்...' என்றார். அதன்படி இருவரையும் கட்டிப்போட்டனர். ஒருநாள் முடிந்து, மறுநாள் கட்டை அவிழ்த்து விட்டதுமே இருவரும் வேறு வேறு திசைகளில் ஓட்டம் பிடித்தனர். அதன் பின்னர், அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கக்கூட விரும்பவில்லை. இப்படித்தான் நாம் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் ஆகிவிடும். எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !