அந்துமணி பதில்கள்!
பி.சிவா, நெல்லை: தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில், முதல்வர் ஸ்டாலின், எம்.பி.,க்களுடன் சேர்ந்து, பிரதமரை சந்திக்க இருப்பது, மனமாற்றமா அல்லது பணிவா?இரண்டும் இல்லை; ஆட்சி பறிபோய் விடுமே என்ற கவலையில் ஏற்பட்ட பயம்!*****நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி: காங்., - எம்.பி., சசிதரூர், சமீபகாலமாக, மோடியை புகழ்ந்து பேசி வருவது குறித்து...பா.ஜ.,வில் சேர, முயற்சி செய்கிறார். ஆங்கிலப் புலமை பெற்றிருந்தாலும், அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும், அக்கட்சிக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை!*******ஜெ.ரவிக்குமார், காங்கேயம்: 'தெர்மோகோல், தெர்மோகோல் என, என்னை ஏன் ஓட்டுகிறீர்கள்?' என, அ.தி.மு.க.,வின் செல்லுார் ராஜு, பாவமாக கேட்கிறாரே...அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்து, வைகை ஆறு வற்றாமல் இருக்க, தெர்மோகோல் பட்டைகளைப் போட்டு மூடலாம் என, 'ஐடியா' கொடுத்து, 'உலகப் புகழ்' பெற்றவராச்சே... இதை அவ்வப்போது சொல்லிச் சிரித்து மகிழ்வதில், தவறு ஒன்றும் இல்லையே!*******ச.ஷகீலா பானு, துாத்துக்குடி: தமிழகத்துக்கு, கடந்த நான்கு ஆண்டுகளில், வட்டி இல்லா கடனாக, 14 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே...மத்திய அரசு, தேவையான நேரங்களில், நம் மாநிலத்துக்கு நிதி கொடுத்தபடி தான் உள்ளது. அதை முறையாக செலவழிக்காமல் விட்டு, பின், 'இதற்கு நிதி தரவில்லை; அதற்கு நிதி தரவில்லை...' என கூறுவதில், நியாயமில்லையே! *******வி.திருமுகில், கள்ளக்குறிச்சி: குழந்தைகளுக்கு, சிறு வயதிலேயே பணத்தைப் பற்றி கற்பிப்பது அவசியமா?மிக மிக அவசியம். உண்டியல் கொடுத்து, பணம் சேமிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்!**** த.நேரு, வெண் கரும்பூர், கடலுார் மாவட்டம்: மது பாட்டிலின் விலையை அரசு உயர்த்தினால், மது குடிப்பவர்கள் திருந்த வாய்ப்புள்ளதா?திருந்த வாய்ப்பில்லை. கடனாளி ஆகி, மனைவியின் நகைகளை அடகு வைத்து, சீரழிவர்!***** வி.மாயகிருஷ்ணன், புதுக்கோட்டை: மாசுக் கட்டுப்பாடு காரணமாக, புதுடில்லியில் பழைய, 'டூ-வீலர்' வாகனங்களுக்கு, 'பெட்ரோல் பங்க்'குகளில், பெட்ரோல், டீசல் போட தடை விதித்துள்ளதே, அம்மாநில அரசு...நல்ல முயற்சி! இதன் மூலம், அம்மாநிலத்தில் உருவாகும் அதிக மாசு குறையும். அது நல்லது தானே!*******க.சுந்தர், ஊரப்பாக்கம், சென்னை: 'ரேமண்ட்ஸ்'லிருந்து பேன்ட்கள், உள்ளாடைகள், கைக்குட்டைகள் மற்றும் மேட்சிங்கான காலுறைகள்; 'இண்டியன் டெரைன்' கடையிலிருந்து சட்டைகள் வாங்குவதெல்லாம் சரி தான்... அதென்ன ஜூன் 25ம் தேதி, 30 செட்?ஜூன் முடிந்ததும் பிறந்தநாள் வரும்; அதற்காக!ஆண்டுக்கு, 12 முறை மட்டுமே ஒரு, 'செட்' அணிவதால், 30 'செட்' வாங்குவேன்!ஆண்டு முடிந்ததும், அனைத்தையும் பிறருக்குக் கொடுத்து விடுவேன்!